ஒரு பிரதமர் வெளிநாடு போய் இப்படி பொய் சொன்னால் உலகமே பார்த்து சிரிக்காதா?

நம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வங்காளதேசம் போய் அநாடு சுதந்திரம் அடைய வேண்டுமென்பதற்காக தான் சத்யாகிரக போராட்டம் செய்து ஜெயிலுக்கெல்லாம் போனேன் என்று சொன்னது கேலிப் பொருளாகி விட்டது. இத்தனைக்கும் மோடியின் வருகையை வங்காளத்தில் பலர் விரும்பாமல் எதிர்ப்புக் குரல் கொடுத்தார்கள்.. மோடி மத பதட்டங்களைத் தூண்டி வருவதாவும், 2002 ல் இந்திய மாநிலமான குஜராத்தில் முஸ்லீம் விரோத வன்முறையைத் தூண்டியதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டிய போராட்டக்காரர்கள் பிரதமர் மோடியின் உருவபொம்மையையும் எரித்து தங்கள் எதிர்ப்பை காட்டினர். எதிர்ப்புத் தெரிவித்த நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பங்களாதேஷ் போலீசார் வியாழக்கிழமை ரப்பர் தோட்டாக்கள் பயன்படுத்தியும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் கலைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் பலியாகி உள்ளார்கள் என்ற தகவலையும் மிஞ்சி மோடியின் தவறான தகவல் பேச்சு சர்ச்சையாகி உள்ளது..!
இன்னமும் அடங்காத கொரோனா தொற்றால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு பின் சுமார் ஒரு ஆண்டு கழித்து பிரதமர் மோடி முதல் முறையாக வெளிநாட்டு பயணத்தை தொடங்கி உள்ளார். 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று அவர் வங்கதேசம் சென்றார். தாகாவில் நடந்த வங்கதேசத்தின் சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அந்த விழாவில் மோடி பேசும் போது, “இந்த பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா – வங்கதேச நட்பு 50 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்த நேரத்தில் வங்கதேச நிறுவன தந்தை ேஷக் முஜிபுர் ரஹ்மானுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். எனது அரசியல் பயணத்தில் வங்கதேச சுதந்திர போராட்டம் முக்கிய இடம் பிடித்துள்ளது. வங்கதேசத்தின் சுதந்திரத்துக்காக இந்தியாவில் நடத்தப்பட்ட சத்தியாகிரக போராட்டத்தில் நானும், எனது சகாக்களும் பங்கேற்று சிறை சென்றோம். அப்போது, எனக்கு 20 வயதிருக்கும். எனது அரசியல் பயணத்தில் நான் பங்கேற்ற முதல் போராட்டமும் இதுதான். அதை நான் பெருமையாக கருதுகிறேன் ,’’ என்றார், அதுதான் சர்ச்சையாகி விட்டது.
“I was 20-22 years old when I, along with my friends, did Satyagrah for the freedom of Bangladesh. I had even been arrested for the same”: Prime Minister Narendra Modi in Dhaka, Bangladesh pic.twitter.com/gKESaMrsRZ
— NDTV (@ndtv) March 26, 2021
சத்தியாகிரகம் என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர் காந்தியடிகள் . சத்தியாகிரகம் என்ற வார்த்தை உருவானது தென்னாப்பிரிக்காவில் .. இந்தியாவில் பிரிட்டிஷ்காரனை எதிர்த்து காந்தியடிகள் போராடியபோது உபயோகித்த வார்த்தை சத்தியாகிரகம் . 1947இல் நாம் சுதந்திரம் வாங்கிய பின் அதற்கு வேலை , தேவை இல்லாமல் போயிற்று. 1971 ஆம் ஆண்டு இந்தியா , வங்காளத்துடன் இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக போரிட்டு வங்காளத்துக்கு சுதந்திரம் வாங்கித் தந்தது .
முழு இந்தியாவும் இந்திய அரசும் இந்திய ராணுவமும் இந்திய மக்களும் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து போர் நடத்திய பொழுது , இங்கே யாருக்கு எதிராக நரேந்திரமோடி சத்தியகிரகம் செய்தார் ?
இந்தியாவும் வங்காளமும் நண்பர்கள் அப்படியானால் வங்காள விடுதலைக்காக யாரை எதிர்த்து நரேந்திர மோடி எப்படி சத்யாகிரகம் செய்து இருக்க முடியும்? இருவருக்கும் எதிரி பாகிஸ்தான் , பாகிஸ்தானுக்கு எதிராக சத்யாகிரகம் இந்தியாவில் செய்ய முடியுமா ? அப்படியே இருந்தாலும் எப்படி கைது செய்ய முடியும் ? எந்த சட்டத்தில் இந்திய சிறையில் அடைக்க முடியும்?
இந்தியாவில் சிந்திக்கத் தெரியாத பிறவிகள் கோடிக்கணக்காக இருப்பதால் இங்கே பொய் சொன்னால் , அதை நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது .
ஆனால் ஒரு பிரதமர் வெளிநாடு போய் இப்படி பொய் சொன்னால் உலகமே பார்த்து சிரிக்காதா?
ராம் மோகன் பாலா