நம் அன்புக்குரியவர்களை பலி வாங்கும் கொரோனா – மோடி கண்ணீர் – வீடியோ!
பிரதமர் மோடி , “இந்த கோவிட் வைரஸ் நம் அன்பிற்குரியவர்களை பலி வாங்கியுள்ளது. அவர்களுக்கு என் மனமார்ந்த அஞ்சலி. கோவிட் இரண்டாவது அலைக்கு எதிராக நாம் பல வழிகளில் ஒன்றிணைந்து போராட வேண்டும். நாட்டின் சுகாதார அமைப்பு பெரும் சிக்கலில் உள்ளது.. இந்த கொரோனாவிற்கெதிரான நமது தற்போதைய போரில், கருப்புப் பூஞ்சை என்ற நெருக்கடியும் சேர்ந்துள்ளது. அதனை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்று சொல்லி கண் கலங்கினார்.
நாடெங்கும் ஊழியாட்டம் ஆடும் கொரோனா 2ஆவது அலை தொடர்பாக வாரணாசியில் மருத்துவர்கள், முன் களப்பணியாளர்களுடன் பிரதமர் மோடி காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, கொரோனா இரண்டாவது அலையில் தொற்றின் வேகம் அதிகமாக இருக்கிறது. இந்த அலை நம்மிடமிருந்து நிறைய பேரைப் பறித்துவிட்டது என நெகிழ்ச்சியாக கூறும்போது கண்கலங்கி விட்டார்.
கொரோனாவால் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்ற பிரதமர் மோடி, மக்களுக்காக சேவை செய்யும் நமது முன்களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பை கொரோனா தடுப்பூசி வழங்கியுள்ளது. வரும் நாட்களில், அனைவருக்கும் தடுப்பூசி பாதுகாப்பை விரிவுப்படுத்துவோம் என்றார்.
இதை அடுத்துகுழந்தைகளைப் பாதுகாப்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தும் பணிகள் நமது கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும். கருப்பு பூஞ்சை தொற்று புதிய சவாலாக மாறியுள்ளது. இதனை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.