கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிதி!

இந்த கொடுங் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாம் அலையில் நாடெங்கும் பல குழந்தைகள் தங்கள் பெற்றோரைப் பறிகொடுத்து நிர்க்கதியாக நிற்கிற பரிதாப நிலை உள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடி நேற்று உயர்மட்டக்கூட்டம் ஒன்றைக்கூட்டி ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து அவர் இத்தகைய குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் மிக முக்கியமானது, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி அளிப்பதாகும். இது பெற்றோரை, சட்டப்பூர்வமான பாதுகாவலர்களை, வளர்ப்பு பெற்றோர்களை இழந்த அனைத்து குழந்தைகளுக்கும் பொருந்தும்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் சாராம்சம்:-
* பி.எம்.கேர்ஸ் நிதியின் கீழ், இத்தகைய குழந்தைகளின் பெயரில் நிலைத்த வைப்பு (பிக்சட் டெபாசிட்) ஏற்படுத்தி தரப்படும். இதன்படி தனியாக வடிவமைக்கப்படுகிற ஒரு திட்டத்தின் மூலம் அவர்கள் 18 வயதாகிறபோது ரூ.10 லட்சம் நிதி சேரும், 18 வயதிலிருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு, உயர்படிப்பு படிக்கிறபோது அவர்களது தனிப்பட்ட செலவுகளுக்காக மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும். 23 வயதாகிறபோது அவர்களுக்கு தனிப்பட்ட மற்றும் தொழில்முறை உபயோகத்துக்காக ரூ.10 லட்சம் ஒரே தவணையில் வழங்கப்படும்.
* 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்கள் அருகாமையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் அல்லது தனியார் பள்ளியில் தினசரி சென்று படித்து வருகிற வகையில் (டே ஸ்காலர்களாக) சேர்க்கப்படுவார்கள். தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டால், பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து பள்ளி கட்டணம் செலுத்தப்படும். சீருடை, புத்தகங்கள், நோட்டுபுத்தகங்கள் ஆகியவற்றுக்கும் பணம் தரப்படும்.
* உயர்படிப்புகளுக்கு, மருத்துவம், என்ஜினீயரிங் போன்ற தொழில்முறை படிப்புகளுக்கு கல்விக்கடன் பெற உதவப்படும். இந்த கடனுக்கான வட்டி பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து வழங்கப்படும். மாற்று ஏற்பாடாக மத்திய அல்லது மாநில அரசு திட்டங்களின் கீழ் கல்வி கட்டணம் அல்லது இளங்கலை மற்றும் தொழில்கல்வி படிப்புகளுக்கான டியூசன் கட்டணத்துக்கு சமமான உதவித்தொகை வழங்கப்படும். தற்போதைய கல்வி உதவித்திட்டத்தின்கீழ் வராத குழந்தைகளுக்கு, பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து கல்வி உதவித்தொகை தரப்படும்.
ரூ.5 லட்சம் காப்பீடு
* இத்தகைய குழந்தைகளுக்கு ஆயுஷ்மான் பாரத் காப்பீடு அல்லது பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் காப்பீடு ரூ.5 லட்சத்துக்கு செய்து தரப்படும். குழந்தைகளுக்கு 18 வயதாகிற வரையில் பிரிமியம், பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து செலுத்தப்படும்.
இதுவரை இப்படி கொரோனாவால் 577 குழந்தைகள் நாடெங்கும் பெற்றோரை இழந்து நிர்க்கதியாக நிற்பதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்திருந்தார். இது ஏப்ரல் 1ந்தேதி முதல் மே 25-ந் தேதி வரையிலான எண்ணிக்கை ஆகும். இந்தக் குழந்தைகள் அனைவரும் பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ள மேற்படி சலுகைகள் அனைத்தையும் பெற முடியும்.