மழைக்காலங்கள் மகிழ்ச்சிக்குரியவையே….! By பெருமாள் ஆச்சி

மழைக்காலங்கள்  மகிழ்ச்சிக்குரியவையே….! By பெருமாள் ஆச்சி

“மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்று நம் முன்னோர்கள் மழையைப் போற்றிய காலம் மறைந்து மழையென்றாலே மகிழ்ச்சி மறைந்து மாபெரும் சோதனைக்காலமாக, பிரச்சனைக்குரியதாக மா(ற்)றிய நம் வாழ்க்கை முறையைப்பற்றி கொஞ்சம் திரும்பிப்பார்ப்போம்..

சென்னை மூழ்கிய 2015 மழை வெள்ளம் வரலாறுகளில் மக்களின் அறியாமையையும், அரசுகளின் மெத்தனப்போக்கையும் பதிவு செய்த மறக்க முடியாத மழை.. பள்ளம் கண்ட இடங்களில் பாய்ந்தோடி தேங்கிக்கிடந்து பயிர் வளரவும் , பல உயிர்களின் தாகம் தீர்க்கவும் பயன்படும் வான்மழை இயற்கை நமக்களிக்கும் அருட்கொடை. ஐம்பூதங்களில் தண்மையான தாகம் தணிக்கும் நீரைத்தரும் மழை இல்லையேல் மண்ணின் இதயமும் வெடித்துவிடும். இத்தகைய மழையின் சிறப்பை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் வள்ளுவரும் வான்சிறப்பில் உணர்த்தியுள்ளார்.

மாதம் மும்மாரி பொழிந்த மழை பருவம் தவறியும் பெய்யாமல் பொய்த்துப்போன வருடங்களில் நாட்டின் பொருளாதாரமே வறண்டு போகும் நிலையில் மழை மறுக்கப்படவேண்டிய ஒன்றல்ல.. மதிக்கப்படவேண்டிய ஒன்று. நிலங்களை முழுவதும் கான்கீரிட் தளங்களால் மூடி, பெய்யும் சிறுதுளியும் மருண்டோடி கடலில் கலந்து வீணாகி விடுகிறது. அகண்டோடிய ஆறுகள், குளங்கள் ஆக்ரமிப்பால் குறுகிப்போனது. பெருகும் மழை நீருக்கான வழியையும், இடங்களையும் மனிதன் எடுத்துக்கொண்டபோது மழையென்றாலே தவிக்க வைப்பதாய் மாறிவிட்டதை என்னவென்று சொல்வது?

2005 ஆண்டு பெய்த மழை முதன்முதலாக என்னை பயம் கொள்ளச் செய்த மழை. சென்னையின் வீட்டு வசதி வாரிய தனி வீடுகளில் ஒண்டுக்குடித்தனம் நடத்திய என்னை அழ வைத்த, அலற வைத்த மழை. சிறு குழந்தையுடன் தரை தளத்தில் வாழ்ந்த என்னை பல வீடுகளுக்குத்தஞ்சம் புகவைத்தது. அகதியாய் ஓடவைத்த பிழை அந்த வருடத்திய மழை..

வீட்டிற்கு வெளியில் தேங்கும் முழங்கால் அளவு நீரும், என் வீட்டிற்குள் புகுந்து என்னை ஓட, ஓட விரட்டிய மழை. மழையோடு என் கண்ணீரும் கலந்த கதை. மேகம் இருண்டாலே என் முகம் இருண்ட அந்த நாட்கள் இன்னமும் என் நினைவை விட்டு நீங்காத துயரங்கள். மழையா என்னை அந்நிலைக்கு உள்ளாக்கியது? விடை காண கொஞ்சம் சிந்திந்தேன்.

பெருகும் மழைநீரை சேமிக்க, மழைநீர் சேகரிப்புத்திட்டங்கள் என்பதை முன்பே திட்டமிடவில்லை. ஆறுகள் ,ஏரி கள்,குளங்கள், கால்வாய்களைத்தூர் வராமல் மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் செய்த அரசு, வெள்ள நிவாரணம் என்ற பெயரில் நடத்திய கூத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அதை அனுபவித்த என்னை மாதிரி சாமானிய மக்களின் கண்ணீர்க் கதைகளோடு கரைந்து போனது அன்றைய மழை சார்ந்த இறப்புச்செய்திகள்..!

இன்றும் மழையே பிரதானச் செய்தியாகிப்போகிறது. அரசும் மழைக்கான தயாரிப்புகளை தாமதமாய் நடத்துவதில் சற்றும் மாறவில்லை. சிறுமழைக்கே நீர் தேங்கி, பெரும் பிரச்சனையென ஊடகங்களும் ஓயாமல் செய்தி படிக்கின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வானிலை இயக்குனர் ரமணன் கதாநாயகனாகிப்போனார்.

இயல்பாய்ப் பெய்யும் மழையால் இயல்பு வாழ்க்கை கெடுகிறதாம். பெய்யும் மழையைப்பார்த்து பயப்படுவதும், கவலை தரும் செய்திகளாகவும், வதந்திகளாகவும் பார்க்கும் நிலை கவலைக்குரியது. தேவைக்கேற்ப நீரை சேமித்தும், நிலத்தடி நீரின் அளவை உயரச்செய்யும் மழை நீர் சேமிப்பு முறைகளை சரியாகப் பராமரித்தால் மழைக்காலங்கள் மகிழ்ச்சிக்குரியவையே….!

பெருமாள் ஆச்சி

Related Posts

error: Content is protected !!