பட்டாம்பூச்சி -விமர்சனம்

ஹென்றி ஷாரியர்(Henri Charriere) என்ற நாமகரணம் கொண்ட பிரெஞ்சு சிறை கைதியால் பாப்பிலான் (Papillon) என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் 1969 இல் வெளிவந்தது ஒரு சுயசரிதம். மெஹா ஹிட்டாகி பின்னாளில் ஆங்கிலத்தில் ஜூன்.பி.வில்சன் & வால்டேர் பி. மைக்கேல் என்பவர்களால் 1970 இல் மொழிபெயர்க்கப்பட்டு விற்பனை உலகில் சக்கை போடு போட்டது. அது ரா. கி. ரங்கராஜன் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு “பட்டாம்பூச்சி” என்ற டைட்டிலுடன் குமுதத்தில் தொடராகவும் வெளியான போது அப்பத்திரிகையில் சர்குலேசன் எகிறியதாக ஒரு தகவலுண்டு. பின்னர் நூலாக கூட வந்துள்ளது. சுமார் 800 பக்கங்களை கொண்ட அந்த புத்தகம் சுதந்திர வேட்கையும், வீரமும் நிறைந்த மனிதனது வரலாறு. பட்டாம்பூச்சி படும் கஷ்டங்களும், அவனது தீராத சுதந்திர வேட்கையும், சகலரையும் தொற்றிக் கொள்ளும் விதத்தில் உருவான அப்படைப்பின் பாதிப்பில் உருவானதுதான் சுந்தர் சி-யின் பட்டாம்பூச்சி என்று நினைக்க தோன்றுகிறது.
இப்படத்தின் கதை என்னவென்றால் கொலைக் குற்றவாளி என்று உறுதிச் செய்யப்பட்டு தூக்குத் தண்டனைக்காகக் காத்திருக்கிறார் சுதாகர் ( ஜெய்). அச்சூழலில் அவரை சந்திக்கும் ரிப்போர்ட்டரிடம் தான்தான் தொடர்ச்சியாக பல கொலைகளைச் செய்த ‘பட்டாம்பூச்சி’ என்கிறார். பல கொலைகளைச் செய்துவிட்டு அங்கு பட்டாம்பூச்சி ஓவியத்தை வரைந்துவிட்டு வந்ததால் அப்படி ஒரு பெயர் என்றெல்லாம் ஜெய் சொன்னது வெளியாகி பரபரப்பான சூழலில் இதை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதற்கான விசாரணையை இன்ஸ்பெக்டரான சுந்தர் சி மேற்கொள்கிறார். ஆனால் தடாலடியாக அய்யே.. அந்த பட்டாம்பூச்சி தானில்லை என தூக்குத் தண்டனையிலிருந்து தப்பித்து விடுதலை ஆகிறார் ஜெய். ஆனாலும் ஜெய்தான் ‘கொலைகார பட்டாம்பூச்சி’ என்பதை கோர்ட்டில் நிரூபிக்கப் போராடும் சுந்தர் சி. வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் கதை.
சுந்தர் சி இன்ஸ்பெக்டர் ரோலுக்கு என்ன தேவையோ -அதை பக்காவக உள்வாங்கி உருப்படியாக நடித்திருக்கிறார் . அதிலும், தன் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பின் வடு அகலாத குமரனாக தனக்கான குழப்பம் மற்றும் பிரச்னை வெளிப்படும் காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். கேஷூவல் ரோல்களில் ஏராளமான படங்களில் நடித்த ஜெய். முதன் முறையாக குரூர வில்லனாகப் பார்ப்பதே ஆச்சரியம்தான். அதிலும் சின்ன வயதில் தன் தந்தையாலேயே கொடுமைகளுக்கு ஆளான ஒருவித உடல், மனக் குறைபாட்டுடன் வளர்ந்து மோசமான கொலைகாரனாக காட்டிக் கொள்ள உடல்மொழியைக் கூட ஹோம் ஒர்க் செய்து வந்து நடித்திருக்கிறார். ரிப்போர்ட்டராக வரும். ஹனி ரோஸின் க்யூட்டான சிரிப்பும் குட்டி குட்டி ரியாக்சன்களும் அழகு.
நவ்நீத் சுந்தரின் மியூசிக்கால படத்தின் விறுவிறுப்பு எகிறுகிறது. 80களின் கால கட்டத்தை கண்முன் காட்ட கேமராமேன் கிருஷ்ணசுவாமியும் ஆர்ட் டைரக்டர் பிரேம்குமார் இணைந்து அபாரமாக உழைத்து சபாஷ் சொல்ல வைக்கிறார்கள்..ஆனால் இந்த பட்டாம்பூச்சியின் முதல் பாதியிலிருந்த ட்விட்ஸ் மற்றும் விறுவிறுப்பு இடைவேளைக்குப் பின் மிஸ் ஆகிவிட்டது.. ஆனாலும் கோலிவுட்டுக்கு கொஞ்சம் புதுசான சீரியல் கில்லர் டைப்பில்லான க்ரைம் ஸ்டோரியில் டைரக்டர் பாஸ் மார்க் வாங்கி விட்டார் என்றே சொல்லலாம்
மொத்தத்தில் இந்த பட்டாம்பூச்சி – படபடவைக்கும் சினிமா
மார்க் 3/5