June 2, 2023

சினிமாக்கள் நம் சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் பலமானது. அதனை உணர்ந்த கலைஞர்கள், உண்மைக் கதைகளையும், உண்மைச் சம்பவங்களையும் வைத்து சினிமா படைக்கிறார்கள் .அவை இயல்பாகவே வெற்றி பெறுகின்றன. அதை விடுத்து, பங்களாக்களில் அல்லது நட்சத்திர ஓட்டல்களின் ஏ.சி அறைகளில் அமர்ந்து கொண்டு, ஒருவர் அரிசி ,ஒருவர் உப்பு ,ஒருவர் புளி, ஒருவர் மிளகாய் என ஆளாளுக்கு ஒன்று போட்டுப் பண்ணும் திரைக்கதை சுவைக்காது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டே ‘ பத்து தல’.இப்படத்திலும் சில குறைகள் இருந்தாலும் ஒரு போலீஸ் ஆபீசருக்கும் – தாதாவுக்குமிடையே நடக்கும் சடுகுடு ஆட்டத்தை அரசியல் பின்னணியில் கொஞ்சம் சென்டிமெண்ட் பில்டப்புகளுடன் கலந்து மாஸ் ஆடியன்ஸை திருப்திபடுத்த முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ஒபிலி என் கிருஷ்ணா.. அதிலும் 2017 ஆம் ஆண்டு சிவ ராஜ்குமார் நடிப்பில் கன்னடத்தில் வெளியான மஃப்டி திரைப்படத்தின் அஃபீசியல் ரீ மேக் என்பது குறிப்பிடத்தக்கது.

நம் கோலிவுட்வாசிகள் அரிதாக பார்வையிடும் கன்னியாகுமரியில் ஒரு தாதாவாக வலம் வருகிரார் ஏஜிஆர் சிம்பு . அவரே தமிழகத்தின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார். அந்த வகையில் தான் தேர்ந்தெடுக்கும் நபரையே முதலமைச்சர் ஆக்கும் பவரில் இருக்கும் சிம்பு, தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் சந்தோஷ் பிரதாப்பை கடத்தி விடுகிறார். இதை கண்டுபிடிக்க அண்டர் கவர் போலீஸ் அதிகாரி கௌதம் கார்த்திக் சிம்புவிடம் அடியாளாக வேலை செய்கிறார். போன இடத்தில் காணாமல் போன முதலமைச்சரை போலீஸ் அதிகாரி கௌதம் கார்த்திக் கண்டுபிடித்தாரா இல்லையா? சிம்பு ஏன் முதலமைச்சரை கடத்த வேண்டும்? சிம்புவிடம் கௌதம் கார்த்திக் பிடிபட்டாரா? இல்லையா? சிம்புவின் பின்னணி என்ன? போன்ற கேள்விகளுக்கு விடையாக உருவாகியுள்ளது பத்து தல திரைப்படம்.

மணல் மாஃபியா தாதாவாக கருப்பு வேட்டி, கருப்பு சட்டை, சால்ட் அண்ட் பெப்பர் லுக், நிதான தோற்றம் என படம் முழுவதும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார் சிம்பு. குறிப்பாக, அவரது அறிமுகக் காட்சியும் க்ளைமாக்ஸில் வரும் சண்டைக் காட்சியும் வாவ் சொல்ல வைக்கிறது.. “மண்ணை ஆள்றவனுக்குத்தான் எல்லை… அள்ளுற எனக்கு அது இல்லை”, “படியேறி மேலே வந்தவன் நான் கிடையாது… எதிரியை மிதிச்சேறி வந்தவன்” என சிம்பு பேசும் பன்ஞ் வசனங்களுக்கு தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது.

சிம்புவுக்கு இணையாக படம் முழுக்க வரும் மெயின் கேரக்டரில் கெளதம் கார்த்திக். ஏஜிஆரை நெருங்க பாடுபடுவதும், அந்த ஏஜிஆர் செய்யும் உண்மை சம்பவங்கள் தெரிந்ததும் மருகுவதும் என பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தாசில்தாராக வரும் பிரியா பவானி சங்கர் நடையில் ஒரு மிடுக்கும் நடிப்பில் சில பாவனைகளையும் கொடுத்து கவர்கிறார். அதேபோல் கல்லூரி மாணவியாக அவர் வரும் போர்ஷனிலும் சிறப்பாகவே செய்திருக்கிறார். வழக்கமான அரசியல் வில்லனாக வரும் கௌதம் வாசுதேவ் மேனன் கொஞ்சம் கூட் அ;லட்டிக் கொள்ளாமல் வந்து போகிறார். சில பல காட்சிகளே வந்தாலும் சந்தோஷ் பிரதாப், கலையரசன், சென்ராயன், ஜோ மல்லூரி, நடிகை ஆராதனா, குழந்தை நட்சத்திரம், இன்னும் பல நடிகர்கள் அவரவருக்கான வேலையை சிறப்பாக செய்து கவனம் பெற்றுள்ளனர். நடிகை சாயிஷா ஒரே ஒரு குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை குதூகலப்படுத்த முயன்று தோற்று போய் போய் விடுகிறார்.

இன்னொரு ஹீரோ ஏ.ஆர்.ரஹ்மான் என்றே சொல்லலாம். திரைக்கதையில் கொஞ்சம் சோர்வு தென்படுவதை எல்லாம் சரி செய்திருகிறார். அவரின் பின்னணி இசையில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் இசைக்கும் தனி கவனம் செலுத்தி இருக்கிறார். குறிப்பாக, ஏஜிஆர் அறிமுகக் காட்சிக்கு திரை அதிர்கிறது. அவரது இசையில் ‘ராவடி’, ‘நம்ம சத்தம்’, ‘நினைவிருக்கா’ என அனைத்துப் பாடல்களும் அருமை. ஃப்ரூக் பாஷாவின் கேமரா ஓர்க் படத்திற்கு மிகப்பெரிய பலம். ஏஜிஆர் கதாபாத்திரத்திற்கு மாஸ் கூட்டும் வகையிலான காட்சி அமைப்புகள் அதிலும் நைட் எஃபெக்ட் சீன்கள் எல்லாம் ரசிகர்களுக்கான கொண்டாட்டமாக மாறி இருக்கிறது.

முன்னரே சில பல படங்களில் வந்த கதை என்றாலும், க்ளைமாக்ஸ் வரை ஆங்காங்கே, கதையின் போக்கு இப்படிதான் போகும் என்று எளிதாக கணிக்கும் வகையிலேயே அமைந்திருந்தாலும் கன்னியாகுமரியின் அழகையும், சமீபத்திய அரசியல் நிகழ்வுகளைக் கோர்த்து சொல்லி இருக்கும் படம் எங்கேயும் போரடைக்கவில்லை .. ஆனாலும் சண்டைக் காட்சிகளில் குதிரைப் படை மற்றும் கத்திச் சண்டை போடுவதெல்லாம் ஆயாசம் ஏற்படுத்துவதை தடுக்கவில்லை..

ஆனாலும் பத்து தல- பார்த்தோரைப் பரவசப்படுத்துகிறது

மார்க் 3/5