June 4, 2023

பதஞ்சலியின் கரோனில் மாத்திரையை விற்க அனுமதி கிடைச்சுடுமாம் !

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து விட்ட தாக விளம்பரம் செய்த விவகாரத்தில், பாபா ராம்தேவ் பதில் அளிக்குமாறு, உத்தராகண்ட் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராம்தேவின் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட மருந்துக்கு தடை விதிக்க கோரி, உத்தராகண்ட் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ராம்தேவ் நிறுவனம், மத்திய அரசு மற்றும் உத்தராகண்ட் மாநில அரசு பதிலளிக்கு மாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் பதஞ்சலி நிறுவனம் தயாரித்துள்ள கரோனில் மாத்திரைகளை விற்க மத்திய ஆயுஷ் அமைச்சகம் அனுமதி வழங்கி விடுமாம்.

.

யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று,உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் செய்தியாளர்களிடம் பேசிய போது, “ஆயுஷ் அமைச்சகத்துடன் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விட்டது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எங்களின் ஆயுர்வேத கரோனில்மருந்தை, கரோனா வைரஸ் நோய்க்கான மருந்தாக ஆயுஷ்அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக முறையான அறிவிப்பு வந்தவுடன் கடைகளில் கரோனில் மருந்து விற்பனைக்கு வரும். எங்களது பதஞ்சலி நிறுவனம் எந்தத் தவறும் செய்யவில்லை. அனைத்து சட்ட நடைமுறை களையும் பின்பற்றி உள்ளது.

சீந்தில், துளசி, அஷ்வகந்தா போன்ற ஆயுர்வேத மூலிகைகளின் சாறு மற்றும் கூட்டுப் பொருட்களை கொண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கரோனில் மருந்து தயாரிக்கப் பட்டுள்ளது. விரைவில் இந்த மருந்து நாடு முழுவதும் கிடைக்கும். சில குழப்பங்களால் இம்மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சில மாநிலங்களுடன் நாங்கள் பேசி வருகிறோம்.

யோகாவும் ஆயுர்வேதமும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பண்டைய கால சிகிச்சை முறைகளாகும். சுகாதாரம் மற்றும் மருத்துவத்தில் பதஞ்சலி யோகபீடத்தின் சாதனைகளை அலோபதி ஆதரவாளர்கள் உள்ளிட்ட சமூகத்தின் சில பிரிவினர், மருந்து மாபியா மற்றும் பன்னாட்டு நிறுவனத்தினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவர்கள் நான் சிறையில் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.” என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்தார்.