மலேரியா-வை கண்டுப் பிடிக்க உதவும் படு சிம்பிள் கருவி!- வீடியோ

மலேரியா-வை கண்டுப் பிடிக்க  உதவும் படு சிம்பிள் கருவி!- வீடியோ

மலேரியா. இது மிகப் பழமையான மழைக்காலத்தில் பரவும் முக்கியமான நோய்தான் என்றாலும், சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள இந்தியா போன்ற நாடுகளில் மலேரியாவை இன்னும் அடியோடு ஒழிக்க முடியவில்லை என்பது கவலைக்குரிய விஷயம்தான்.‘பிளாஸ்மோடியம்’ என்னும் ஒட்டுண்ணிக் கிருமிகள்தான் மலேரியாவுக்கு மூலக் காரணம். இந்தக் கிருமிகளில் பால்சிபேரம், மலேரியே, ஒவேல், விவாக்ஸ் என்று மொத்தம் 4 வகைகள் உள்ளன. இவை பெண் அனாபிலிஸ் கொசுக்களிடம் வசிக்கின்றன. இக்கொசுக்கள், நம்மை இரவு நேரத்தில் கடிக்கும். அப்போது கொசுக்களின் உமிழ்நீர் வழியாக மலேரியா கிருமிகள் நம் உடலுக்குள் புகுந்துவிடும். பின்பு அவை ரத்தத்தில் கலந்து கல்லீரலுக்குச் செல்லும். இக்கிருமிகள் ஒரு வாரம்வரை கல்லீரலில் தங்கி, கோடிக்கணக்கில் பெருகும். பிறகு அங்கிருந்து ரத்தத்துக்கு வந்து ரத்தச் சிவப்பணுக்களை அழிக்கும். அப்போது மலேரியா காய்ச்சல் ஏற்படும்.

anopheles-mosquito

இந்தக் காய்ச்சலில் மூன்று கட்டங்கள் உள்ளன. முதல் கட்டத்தில் நோயாளிக்குக் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி, சோர்வு உண்டாகும். இதைத் தொடர்ந்து குளிர்க்காய்ச்சல் ஏற்படும். இரண்டாவது கட்டத்தில் காய்ச்சல் கடுமையாகி உடல் அனலாகக் கொதிக்கும். மூன்றாவது கட்டத்தில் காய்ச்சல் குறைந்து வியர்வை கொட்டும். உடல் ஐஸ் போலக் குளிர்ந்துவிடும். பிறகு இதே காய்ச்சல் மறுநாளோ, ஒருநாள் விட்டு ஒருநாளோ, மீண்டும் அதே நேரத்தில் வரும்.

மலேரியாவுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறாவிட்டால் பல ஆபத்துகள் வரும். அடிக்கடி மலேரியா வந்தால் ரத்தசோகை, மஞ்சள் காமாலை ஏற்படும். இதனால் உடல் தளர்ச்சி உண்டாகும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். சிலருக்கு மூளை காய்ச்சல் ஏற்பட்டு, வலிப்பு வந்து உயிரிழப்பும் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. இன்னும் சிலருக்குச் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, ‘கறுப்புத் தண்ணீர் காய்ச்சல்’ (Black Water Fever) வரும். இந்த நோயின்போது சிறுநீரில் ரத்தம் அதிக அளவில் வெளியேறி உயிருக்கு ஆபத்து ஏற்படும். சிறுநீரகம் செயலிழக்கவும் வாய்ப்பு உண்டு.

இந்நிலையில் அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், குறைந்த செலவில் ரத்தப் பரிசோதனை செய்து, மலேரியா கிருமிகளை கண்டறியும் கருவியை தயாரித்துள்ளனர். இதனை மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத நாடுகளில் மலேரியா நோய்க்கான ரத்தப் பரிசோதனை செய்ய பயன்படுத்த முடியும். அதிலும் மனு பிரகாஷ் என்ற இந்தியரின் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு இந்தக் கருவியை கண்டுபிடித்துள்ளது. பேப்பர்பியூஜ் (Paperfuge) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கருவி, சுமார் 3000 ஆண்டு பழமையான விளையாட்டுப் பொருளை மையமாக வைத்து அதன் வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தின் பேராசிரியராக பணிபுரியும் மனு பிரகாஷ் இது குறித்து கூறுகையில், ‘‘சில வருடங்களுக்கு முன் உகாண்டா நாட்டில் உள்ள மருத்துவர்களை சந்தித்து பேசிய போது அங்குள்ள மக்களுக்கு ரத்த பரிசோதனை செய்ய சென்ட்ரிபியூஜ் (Centrifuge) எனப்படும் கருவி அதிகம் தேவைப்படுவதை அறிந்தேன். இந்த கருவி, நிமிடத்திற்கு 1,25,000 முறை வேகமாக சுழலுவதன் மூலமாக ரத்தத்தில் உள்ள திரவத்தை பிரிக்கும். இதன் மூலம் நோய் கிருமிகளை எளிதாக கண்டறிய முடியும்.

அதாவது பெரும்பாலான இடங்களில் சரியான பரிசோதனை கூடம் இல்லை. பரிசோதனை கூடம் இருக்கும் இடங்களிலும் மின்சார வசதியில்லாத காரணத்தால் அந்த கருவிகள் பயனில்லாமல் மூலையில் கிடந்தன. இதனால் மலேரியா, எய்ட்ஸ் போன்ற நோய்கள் அதிகம் உள்ள ஏழை நாடுகளில் ரத்தப் பரிசோதனை செய்ய முடியாமல் மருத்துவர்கள் தவித்து வருகிறார்கள். எனவே இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்ற முடிவோடு ஆராய்ச்சியில் இறங்கினேன்.

நானும் எனது மாணவர்களும் யோ யோ போன்ற அதிகம் சுழலும் தன்மைகொண்ட விளையாட்டு பொருட்களை வைத்து சோதனைகள் நடத்தினோம். இறுதியாக என் குழுவைச் சேர்ந்த சாத் பாம்லா என்ற மாணவர், பண்டைய காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு விளையாட்டு பொருளில், அதிக சுழற்சியை ஏற்படுத்த முடியும் என்பதைக் கண்டறிந்தார்.

இந்த விளையாட்டு பொருளில் இருபுறமும் கயிறுகளால் இழுப்பதன் மூலம் நடுவில் உள்ள வட்டமான பொருள் வேகமாக சுழலும். இதில் பல மாற்றங்கள் செய்து, ரத்த பரிசோதனைக்கு ஏற்றவாறு 1,25,000 முறை சுழலும்படி வடிவமைத்தோம். வெறும் 10 ரூபாயில் இதை உருவாக்க முடியும்’’ என்று மனு பிரகாஷ் தெரிவித்தார்.

187497251614931325051762460741MAL (2)

இந்தக் கருவியில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி கயிற்றின் நடுவே உள்ள பிரத்யேகமான இரண்டு வட்ட காகிதங்கள் ஒன்றோடொன்று இணைந்திருக்கும். அதன் நடுவே நோயாளிகளின் ரத்தம் நிரப்பப்பட்ட மெல்லிய குழாயை பொருத்த வேண்டும். பின் இரு புறமும் மரத்தால் ஆன கைப்பிடிகள் மூலம் வேகமாக அதனை இழுத்துவிடவேண்டும். தொடர்ந்து இழுத்துக்கொண்டே இருந்தால் வேகமான சுழற்சி ஏற்படும்.

இதனால் நடுவில் உள்ள காகிதம் அதிக வேகத்தில் சுழன்று 2 நிமிடத்திற்குள் ரத்தத்தை பிரித்துவிடும். மேலும் ரத்தத்தில் உள்ள மலேரியாவை உண்டாக்கும் கிருமிகளை 15 நிமிடத்தில் தனிமைப்படுத்திவிடும்.ஆப்பிரிக்காவின் மடகாஸ்கரில் உள்ள மருத்துவ முகாமில் இந்த கருவியை பரிசோதித்து பார்த்த விஞ்ஞானிகள் அது வெற்றிகரமாக செயல்பட்டத்தை அறிந்து மகிழ்ந்தனர். இதன்மூலம் உலகம் முழுவதும் மருத்துவ வசதிகள் இல்லாத ஏழை நாடுகளில் உள்ள மருத்துவ முகாம்களில், மலேரியாவுக்கான ரத்த பரிசோதனையை குறைந்த செலவில் எளிய முறையில் செய்ய வழி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

https://www.youtube.com/watch?v=v7bMEDIgK2A

error: Content is protected !!