அகாடா என்றழைக்கப்படும் மல்யுத்த மைதானத்துக்கு வெளியே …!

அகாடா என்றழைக்கப்படும்  மல்யுத்த மைதானத்துக்கு வெளியே …!

டெல்லியில் கடந்த ஐந்து மாதங்களாக ஒரு துயர நாடகம் அரங்கேறி வருகிறது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இயங்குபவர் ப்ரஜ் பூஷண் சரண் சிங். இவர் பாஜக எம்பியும் கூட. உத்திரப் பிரதேச பாஜகவின் அதிமுக்கிய தலைவர். சென்ற ஜனவரி மாதம் இவர் மீது பாலியல் அத்துமீறல், நிதி மோசடி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை மல்யுத்த வீர்களும் வீராங்கனைகளும் வைத்தார்கள். அவை எதன் மீதும் தீவிர நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பது அந்த வீரர்களின் தொடர் புகார். இதற்காக பெரிய அளவில் அவர்கள் போராடி வருகிறார்கள். ஒலிம்பிக் சாம்பியன் சாக்சி மாலிக்கும் இந்தப் போராட்டத்தின் முக்கிய ஆளுமையாக பங்கெடுத்து வருகிறார். வடக்கே மல்யுத்த மைதானம் ‘அகாடா’ என்று அழைக்கப்படுகிறது. ஆனால் கடந்த ஐந்து மாதங்களாக அகாடவுக்கு வெளியேதான் இவர்களின் யுத்தம் நடந்து வருகிறது!

ஜனவரியில் புகார் வலுவாகக் கிளம்பியதும் இந்த ப்ரஜ் பூஷண் சரண் சிங்கை கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து அரசு நீக்கியது. ஆனால் அதற்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பின்னர் வீரர்கள் குரல் மேலும் வலுக்கவே மேரி கோம் தலைமையில் ஒரு விசாரணைக் கமிட்டி அமைத்தது. அந்தக் கமிட்டி ஏப்ரல் மாதம் அரசுக்கு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. ஆனால் அந்த அறிக்கை இன்று வரை பொதுவெளியில் பகிரப்படவில்லை. இதில் குற்றம் சாட்டிய பெண்களில் ஒருவர் மைனர் என்று தெரிகிறது. அதாவது போக்சோ சட்டத்தின் கீழ் கூட அவரைக் கைது செய்ய முகாந்திரம் இருக்கிறது.

சென்ற வாரம் புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா அன்று ப்ரஜ் பூஷண் நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார். அதை எதிர்த்து போராட்டம் நடத்திய வீரர்கள், வீராங்கனைகள் தடுக்கப்பட்டிருக்கிறார்கள். காவல் துறையால் வன்மையாக கையாளப்பட்டிருக்கிறார்கள். சாக்சி உள்பட பலருக்கு காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. அவற்றால் மனம் நொந்து போன வீரர்கள் தங்கள் பதக்கங்களை கங்கையில் வீசி எறிய முடிவெடுத்தனர். ஆனால் விவசாயிகள் அமைப்பின் தலைவர் நரேஷ் திகாயத் குறுக்கிட்டு அவர்களைத் தடுத்து ‘பிரச்சினையை’ சரி செய்ய மேலும் கால அவகாசம் கேட்டிருக்கிறார்.

ஆனால் ப்ரஜ் பூஷண் மீது கை வைப்பது அவ்வளவு எளிதல்ல என்றுதான் தோன்றுகிறது. இந்தப் போராட்டங்கள் குறித்து பேசுகையில் ‘நாய்கள் குரைத்துக் கொண்டுதான் இருக்கும், ஆனால் யானை அவற்றைக் கண்டு கொள்ளாமல் வீர நடை போடும்!’ என்று கருத்தளித்து இருக்கிறார். அயோத்தி போராட்டக் காலம் தொட்டு பாஜகவில் இருப்பவர் அவர். மசூதி இடிப்புக் குற்றத்தில் அத்வானியுடன் இணைந்து கைதானவர். தொடர்ந்து ஆறு முறை எம்பி பதவியில் இருப்பவர். கிரிமினல் குற்றச்சாட்டுகள் இவருக்குப் புதிதல்ல; எண்பதுகளில் சாராய மாஃபியா, பைக் திருட்டு கும்பல்கள் போன்றவற்றில் அவர் பெயர் அடிபட்டது. பின்னர் தொண்ணூறுகளில் தாவூத் இப்ராஹீம் அடியாள் ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் சிறைக்குப் போனார். அப்போது அவருக்கு பதில் அவர் மனைவி பாஜக டிக்கெட்டில் போட்டியிட்டு வென்றார். பின்னர் வாஜ்பாய் காலத்தில் அவருக்கு பதிலாக வேறு ஒரு வேட்பாளரை நிறுத்த தேர்தலன்று காலையிலேயே அந்த வேட்பாளர் விபத்தில் (!) மரணமடைந்தார். அதை நடத்தியது அவர்தான் என்று பாஜக குற்றம் சாட்டி அவரை நீக்கியது. அதன் விளைவாக பாஜகவுடன் விரோத மனப்பான்மை ஏற்பட்டது சமாஜ்வாடி கட்சியில் இணைந்து வேறு தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஆனால் மோடியின் கை ஓங்கியதும் மறுபடி பாஜகவில் ‘சேர்ந்து’ தொடர்ந்து இயங்கினார். மாயாவதி இவரது ஊர்ப் பெயரை வைத்து ‘கோண்டாவின் குண்டா’ என்று அழைத்தார். உத்திரப் பிரதேச ஊடகங்கள் இவரை ‘பாகுபலி எம்பி’ என்று ‘செல்லப்பெயர்’ வைத்து அழைக்கிறார்கள்.

எனவே பாஜக இவர் மீது எடுக்கும் எந்த நடவடிக்கையும் உத்திரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. எனவேதான் இவரை பகைத்துக் கொள்ள பாஜக மறுக்கிறது. விளைவு, போராடும் வீரர்கள் ஒடுக்குமுறைக்கும், வன்முறைக்கும் உள்ளாகிறார்கள். ப்ரஜ் பூஷண் மீது தில்லி காவல் துறை பதிந்த எஃப்ஐஆர் கூட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நடந்ததுதான். அப்படி இருந்தும் கூட காவல்துறை இவருக்கு சாதகமாகவே செயல்படுகிறது. ‘ப்ரஜ் பூஷணைக் கைது செய்யும் அளவுக்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை,’ என்று தில்லி காவல் துறை நேற்று ட்வீட் பதிந்திருந்தது. அது பெரும் சர்ச்சையை கிளப்பவே அதை நீக்கி விட்டிருக்கிறது. ‘இந்த வழக்கை அதன் முழு சென்சிட்டிவிடியுடன் அணுகி விசாரணை நடத்தி வருகிறோம்,’ என்று பின்னர் ஒரு ஆறுதல் ட்வீட் பதிந்தது.

ஹரியானா மாநிலம் பெண் மல்யுத்த வீரர்களுக்குப் பெயர் போன ஒன்று. பெண் குழந்தைகளை கருவிலேயே ஸ்கேன் செய்து அழிக்கும் மாநிலங்களிலும் முதன்மையாக இருப்பது ஹரியானாதான். அதை சரி செய்யத்தான் பிரதமர் மோடியே ‘பேடி பச்சாவ், பேடி படாவ்’ எனும் திட்டத்தை முன்னெடுத்தார். ‘பெண்ணைக் காப்பாற்று; பெண்ணைப் படிக்க வை,’ என்பது இதன் அர்த்தம். சோகம் என்னவெனில், ‘பெண்ணைக் காப்பாற்று’ திட்டம் உருமாறி ‘பாஜக தலைவர்களிடம் இருந்து பெண்ணைக் காப்பாற்று,’ என்று ஆகி விட்டது என்று ஹரியானா காங்கிரஸ் கிண்டலடித்து இருக்கிறது.

இத்தனை விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பிரதமர் வழக்கம் போல வாயில் கொழுக்கட்டை வைத்துக் கொண்டிருக்கிறார். தனக்கு சங்கடமான விஷயங்களில் வாயையே திறப்பதில்லை என்பதை தனது ஆட்சிக் காலம் முழுவதும் செய்து கொண்டிருக்கிறார். தனது சொந்தக் கட்சியிலேயே இருக்கும் ஒரு லோக்கல் எம்பி மீது கூட துணிச்சலாக கை வைக்க முடியவில்லை; ஏன் அது குறித்து ஒரு அறிக்கை கூட விடுக்க முடியவில்லை என்பதுதான் ஆகப்பெரிய சோகம். இந்த லட்சணத்தில் இருக்கும் இவரைத்தான் ‘சீனாவை காலி பண்ணிடுவார்’, ‘பாகிஸ்தானை மண்டியிட வைத்து விடுவார்,’ என்று நம்பி பாஜக அபிமானிகள் காத்திருக்கிறார்கள்.

ப்ரஜ் பூஷண் மீது மேலும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை நம்ப முடியாது. எனவே, காவல்துறையை கட்டாயப்படுத்தி எஃப்ஐஆர் பதிய வைத்த உச்ச நீதிமன்றம் தானே மென்மேலும் அழுத்தங்கள் கொடுத்து தொடர்ந்து நடவடிக்கைகளை முடுக்கி விடும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியதுதான்.

போராடும் மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு நம் அன்பும், ஆதரவும். அகாடாவைத்தாண்டி வேறெங்கும் போராடும் நிலை உங்களுக்கு இனிமேல் வராமல் இருக்க வேண்டும் என்று விழைகிறோம். May you never have to fight outside the Akhara.

– ஸ்ரீதர் சுப்ரமணியம்

error: Content is protected !!