ஆஸ்கர் பெர்னாண்டஸ் -முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்!

ஆஸ்கர் பெர்னாண்டஸ் -முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்!

காங்கிரஸ் சீனிய தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் மங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (திங்கள்கிழமை) காலமானார். அவருக்கு வயது 80.

ஆஸ்கர் பெர்னாண்டஸ் கடந்த ஜூலை 19-ம் தேதி காலை உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மூளையில் ரத்தம் கட்டியிருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்பட புகழ்பெற்ற மருத்துவர்களால் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. தொடக்கத்தில் அவரது உடல்நிலை மோசமாக இருந்தது. ஆனால், ஆஸ்கர் பெர்னாண்டஸ் சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் பின்னர் தெரிவித்தன.இந்த நிலையில், அவர் திங்கள்கிழமை காலமானார். அவரது உயிர் பிரியும்போது மனைவி, மகன் மற்றும் மகள் உடனிருந்தனர்.

உடுப்பியில் பிறந்த ஆஸ்கர் பெர்னாண்டஸ் முதலில் 1980-ம் ஆண்டு மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். உடுப்பி மக்களவைத் தொகுதியிலேயே அவர் 1980, 1984, 1989, 1991 மற்றும் 1996 என தொடர்ச்சியாக 5 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் உயிரிழக்கும்போது மாநிலங்களவை உறுப்பினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு நாடாளுமன்றச் செயலராக ஆஸ்கர் இருந்துள்ளார். நேரு குடும்பத்தினருக்கு நெருக்கமானவராகவே ஆஸ்கர் அறியப்பட்டார். மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிகளில் உட்கட்சி பூசல்கள் நிலவினால் அதனை தீர்ப்பதற்கு டெல்லி மேலிட பிரதிநிதியாக ஆஸ்கர் பெர்னாண்டஸ் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியும் இரஙல் தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “மாநிலங்களவை உறுப்பினர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் மறைவை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். இந்த சோக தருணத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது ஆதரவையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்”, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ஆந்தைரிப்போர்ட்டர் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்… செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

Related Posts

error: Content is protected !!