பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் மே 3 முதல் விண்ணப்பிக்கலாம்! – தமிழக அரசு

பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் மே 3 முதல் விண்ணப்பிக்கலாம்! – தமிழக அரசு

இன்ஜினியர் எனப்படும் பொறியியல் படிப்பு மீதான ஆர்வம் மாணவ- மாணவிகளிடம் குறைந்து கொண்டே வருவதாலும் போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் இந்த கல்வி ஆண்டு முதல் 1 லட்சத்து 30 ஆயிரம் பொறியியல் இடங்களை குறைக்க அகில இந்திய தொழில்நுட்ப கழகம் முடிவு செய்துள்ள நிலையில் பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் மே 3ம் தேதி முதல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்ற பி.இ., பி.டெக் மற்றும் எம்.,இ., எம்.டெக் படித்த மாணவ-மாணவிகள் பலருக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கிறார்கள். இதனால் பொறியியல் படிப்பு மீதான ஆர்வம் மாணவ- மாணவிகளிடம் குறைந்து கொண்டே வருகிறது. அதிக வேலை வாய்ப்பை பெற்று தரும் பொறியியல் கல்லூரிகளில் மட்டும் மாணவர் சேர்க்கை 75 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை நடைபெறுகிறது.

சில பொறியியல் கல்லூரிகளில் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை மட்டுமே மாணவ- மாணவி கள் சேருகிறார்கள். இதனால் இந்த கல்வி ஆண்டு முதல் 1 லட்சத்து 30 ஆயிரம் பொறியியல் இடங்களை குறைக்க அகில இந்திய தொழில்நுட்ப கழகம் முடிவு செய்துள்ளது. இதனிடையே

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்களை செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

அப்போது அவர், “ பொறியியல் கலந்தாய்வு இந்த ஆண்டு முதல் முறையாக ஆன்லைனில் நடைபெற உள்ளது. அதே போல, விண்ணப்பப் பதிவும் ஆன்லைனிலேயே நடைபெறும். மாணவர் கள் இருந்த இடத்தில் இருந்துகொண்டே, ஆன்லைன் மூலமாக மே மாதம் 3 முதல் 30ம் தேதி வரை பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

பொறியியல் படிப்புக்கு ஏப்ரல் 29ம் தேதி இணையதளம் மூலம் விண்ணப்பம் கோருவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். அதற்காக https://tnea.ac.in/           https://www.annauniv.edu/ ஆகிய இணைய தளங்களை பயன் படுத்திக் கொள்ளலாம். கிராமத்தில் இருக்கும் மாணவர்கள், ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வசதியாக தமிழகத்தில் 42 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அவை இதோ:

iமாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள கலந்தாய்வு உதவி மையங்கள்

1 சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கிண்டி
2 அரியலூர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி அரியலூர்
3 கோவை அரசு தொழில்நுட்பக்கல்லூரி கோவை
4 கோவை அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம் கோவை
5 கோவை கோயமுத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி கோவை
6 கடலூர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி பண்ரூட்டி
7 கடலூர் அண்ணாமலை பல்கலைக்கழகம் சிதம்பரம்
8 திண்டுக்கல் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி திண்டுக்கல்
9 தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி தருமபுரி
10 ஈரோடு சாலை போக்குவரத்து தொழில்நுட்பக் கல்லூரி பெருந்துறை
11 ஈரோடு பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரி பெருந்துறை
12 காஞ்சிபுரம் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி காஞ்சிபுரம்
13 காஞ்சிபுரம் எம்.ஐ.டி கல்லூரி குரோம்பேட்டை சென்னை
14 கன்னியாகுமரி பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி நாகர்கோவில்
15 கிருஷ்ணகிரி அரசு பொறியியல் கல்லூரி பர்கூர்
16 கரூர் கரூர் அரசு கலைக்கல்லூரி தந்தோணிமலை
17 மதுரை அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம் மதுரை
18 மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி மதுரை
19 நாமக்கல் திருவள்ளூர் அரசு கலைக்கல்லூரி ராசிபுரம்
20 நாகப்பட்டினம் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி திருக்குவளை
21 பெரம்பலூர் பெரம்பலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி கீழகனவை
22 புதுக்கோட்டை புதுக்கோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரி அறங்தாங்கி
23 ராமநாதபுரம் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி புலங்குடி
24 சேலம் அரசு பொறியியல் கல்லூரி சேலம்
25 சிவகங்கை ஏ.சி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி காரைக்குடி
26 தஞ்சாவூர் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி பட்டுக்கோட்டை
27 தஞ்சாவூர் அரசு பொறியியல் கல்லூரி செங்கிப்பட்டி
28 நீலகிரி நீலகிரி அரசு கலைக்கல்லூரி உதகமண்டலம்
29 தேனி அரசு பொறியியல் கல்லூரி போடிநாயக்கனூர்
30 திருவள்ளூர் முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி ஆவடி
31 திருவாரூர் அரசு பாலிடெனிக் கல்லூரி வலங்கைமான்
32 திருவண்ணாமலை பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி ஆரணி
33 திருப்பூர் சிக்கண்ணா நாயக்கர் அரசு கலைக்கல்லூரி கொங்கணகிரி
34 திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம் திருநெல்வேலி
35 திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி திருநெல்வேலி
36 தூத்துக்குடி வி.ஒ.சி பொறியியல் கல்லூரி தூத்துக்குடி
37 திருச்சி பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி,பாரதிதாசன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி வளாகம் திருச்சி
38 திருச்சி அரசு பொறியியல் கல்லூரி ஶ்ரீரங்கம்
39 வேலூர் வேலூர் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரி வேலுர்
40 விழுப்புரம் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி காகுப்பம், விழுப்புரம்
41 விழுப்புரம் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி திண்டிவனம்
42 விருதுநகர் வி.எஸ்.வி.என் பாலிடெக்னிக் கல்லூரி ரோசல்பட்டி

தமிழகத்தில் மேற்கணட 42 கல்லூரிகளில் அமைக்கப்படும் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மையங்களில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிடங்கள் உருவாக்கப்பட்டு மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தை சரியாக பதிவு செய்ய உதவி செய்யப்படும். ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்யும் போது அனைத்து மாணவர்களுக்கும் வழிகாட்டி புத்தகம் வழங்கப்படும். இந்த மையங் களில் ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்ய கூடுதல் கட்டணம் கிடையாது. ஆனால், விண்ணப்பக் கட்டணம் உண்டு. இந்த மையங்களுக்கு வந்துதான் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வசதி இருப்பின் அவரவர் இடங்களிலேயே விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

ஆனால், சான்றிதழை சரிபார்க்க ஜூன் முதல் வாரத்தில் இந்த மையங்களுக்குத்தான் அனைத்து மாணவர்களும் செல்ல வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்த மாணவர்களுக்கு, சான்றிதழ் சரிபாப்பு பணி ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக ஓரிரு நாட்கள் தாமதமானாலும் அதற்கேற்ப சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும்.

பொறியியல் கலந்தாய்வில் கடந்த ஆண்டு அரசு கல்லூரிகளுடன் மொத்தம் 586 பொறியியல் கல்லூரிகள் பங்கேற்றன. இந்த ஆண்டு 19 கல்லூரிகள் நீங்கலாக 567 கல்லூரிகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மே 15ம் தேதி பொறியியல் கலந்தாய்வில் எத்தனை கல்லூரிகள் பங்கேற்கின்றன என்ற சரியான தகவலும், எத்தனை மாணவர் சேர்க்கை இடங்கள் நிரப்பப்பட உள்ளது என்ற தகவலும் வெளியிடப்படும்.

அதன் பிறகு, ஜூலை முதல் வாரத்தில் கல்லூரியை தேர்வு செய்து பதிவு செய்தால் போதும். கல்லூ ரியை தேர்வு செய்து பதிவு செய்த பிறகுக்கூட தங்களது தெரிவுகளை மாற்றிக் கொள்ளவும் மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும்போது எவ்வாறு ஆன்லைன் மூலம் கலந்தாய்வில் பங்கேற்பது குறித்த குறும்படம் காட்டப்படும். அதைப் பார்த்தும் மாணவர்கள் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் சான்றிதழ் சரிபாக்க 6 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அந்த 6 நாட்களில் சான்றிதழை சரி பார்க்க முடியவில்லை என்றாலும், 7வது நாளாக அவகாசம் அளிக்கப்படும். ஆனால், அந்த 7வது நாளில், சம்பந்தப்பட்ட மாணவர்கள் சென்னையில்தான் வந்து சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க முடியும்.

அதே சமயம், சம்பந்தப்பட்ட மாணவர் வரமுடியாத நிலையில் இருந்தால், அவர் வரவில்லை என்றாலும், பெற்றோர் அல்லது உடன் பிறந்தவர்கள் சான்றிதழைக் கொண்டு வரவும் வாய்ப்பு அளிக்கப்படும்.

மேலும் மாணவர்களுக்கு கூடுதல் வசதியாக, ஆன்லைன் விண்ணப்பத்தில் கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்ய அளவற்ற வாய்ப்புகள் வழங்கப்படும். அதாவது கல்லூரியை தேர்வு செய்யும் இடத்தில் ஒரே ஒரு கல்லூரியை மட்டும் அல்லாமல், ஒரு மாணவர் உதாரணமாக 25 கல்லூரியைக் கூட தேர்வு செய்யலாம். இதில் எந்த உச்ச வரம்பும் இல்லை. இதே போல, கல்லூரி, பாடப்பிரிவு, விருப்ப வரிசை என எத்தனை இடங்களையும் அவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!