ஓலா, உபர், ரேபிடோ ஓட்டுநர்கள் பயணக் கோரிக்கையை நிராகரித்தால் அபராதம்!

ஓலா, உபர், ரேபிடோ ஓட்டுநர்கள் பயணக் கோரிக்கையை நிராகரித்தால் அபராதம்!

போக்குவரத்து விதிமீறல்களுக்கான உயர்த்தப்பட்ட அபராத கட்டணம் அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழகத்தில் செயலிகள் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளின் பயணக் கோரிக்கையை ஓட்டுநர்கள் நிராகரித்தால் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட செயலிகள் மூலம் கார் மற்றும் ஆட்டோக்கள் வாடகைக்கு இயங்கப்படுகின்றன. இந்த நிறுவனங்களிடம் ஒப்பந்த முறையில் ஓட்டுநர்கள் தங்களது வாகனத்தை இயக்கும் நிலையில், பயணியரை கவர்வதற்காக நிறுவனங்கள் சார்பில் பயணக் கட்டணச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் சலுகை கட்டணத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லும் போது ஓட்டுநர்களுக்கு கிடைக்கும் லாபம் குறைந்து விடுவதாக கூறப்படுகின்றது. மேலும் பயணிகள் சென்றடையும் இடங்களிலிருந்து போதுமான முன்பதிவு கிடைக்க வாய்ப்பு குறைவாக இருக்கும் என்று ஓட்டுநர்கள் நினைத்து, குறிப்பிட்ட பயணிகளை ஏற்றிச் செல்ல மறுப்பதாகவும் பயணிகள் தரப்பில் குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆன்லைன் மூலம் பயணக் கட்டணத்தை செலுத்தாமல், நேரடியாக பணத்தை தரும் பயணிகளுக்கே முன்னுரிமை தருவதாகவும், ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்தும் பயணிகளின் முன்பதிவை ஓட்டுநர்கள் ரத்து செய்வதாகவும் கூறப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பயணிகளின் முன்பதிவை நிராகரிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது. அதன்படி இருசக்கர வாடகை வாகனங்கள் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட மூன்று சக்கர வாகன ஓட்டுநர்கள் பயணத்தை ரத்து செய்தால் ரூ.50 மற்றும் கார் ஓட்டுநர்கள் பயணத்தை ரத்து செய்தால் ரூ.500 அபராதமாக விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராதத் தொகை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. பயணிகள் தங்களது புகாரை 18004255430 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது tnsta.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமோ புகாரளிக்கலாம் என்று போக்கு வரத்துத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. ((tnsta.gov.in இணைய முகவரியில் driver cancellation புகாருக்கு தற்போது தனியாக option இல்லாத நிலையில் விரைவில் புகார் menu ஏற்படுத்தப்படும் என போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது))

Related Posts

error: Content is protected !!