உடல் பருமனா இருந்தா புற்று நோய் வர சான்ஸ் அதிகமாம்!
2007-ம் ஆண்டு எடுத்துள்ள புள்ளிவிவரப்படி, இந்தியாவில் மட்டும் 4 கோடிப் பேருக்கு உடல் பருமன் (Obesity) பிரச்சினை உள்ளது. இந்த எண்ணிக்கை 2030-ல் இரண்டு மடங்காக அதிகரித்துவிடும் என்று வேர்ல்ட் ஹெல்த் எச்சரித்து இருந்தது. இடுப்பின் அளவு அதிகமாக அதிகமாக, நம் ஆயுளின் அளவு குறையும் என்பது இயற்கையின் நியதி. கடந்த ஆண்டில் உலக அளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தவர்களில் உடல் பருமனாக இருந்தவர்கள்தான் அதிகம் என்கிறது புள்ளிவிவரம். ஆனால், இது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் குறைவாகவே உள்ளது என்றும் வருந்தி இருந்தது உலகச் சுகாதார நிறுவனம்.
எது உடல் பருமன்?
ஒருவருக்கு உடல் பருமன் உள்ளதா என்று தெரிவிப்பது, ‘பாடி மாஸ் இன்டெக்ஸ்’ ( Body Mass Index – BMI). இது 18.5-க்குக் கீழே இருந்தால், உடல் எடை குறைவு என்று பொருள்; 18.5 முதல் 23.9 -க்குள் இருந்தால், சரியான உடல் எடை. 24 – 29.9 என்று இருந்தால், அதிக உடல் எடை; 30-க்கு மேல் என்றால் அது உடல் பருமனைக் குறிக்கும். இது பெரியவர்களுக்கான அளவு.
காரணம் என்ன?
உடல் பருமனுக்குப் பரம்பரை ஒரு முக்கியக் காரணம். பெற்றோருக்கு உடல் பருமன் இருக்குமானால், மரபுரீதியாக அடுத்த தலைமுறைக்கு இது கடத்தப்படுகிறது. குடும்பத்தின் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை, இதற்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்தலாம். எண்ணெயில் வறுத்த, பொரித்த கொழுப்புள்ள உணவு வகைகளை அதிகமாக உண்பது, சோம்பலான வாழ்க்கை முறை, உடலியக்கம் குறைவது, உடலுழைப்பு/உடற்பயிற்சி இல்லாதது, தைராய்டு பிரச்சினை போன்றவை உடல் பருமனைச் சீக்கிரமே அதிகரித்துவிடும்.சில மாத்திரைகளின் பக்கவிளைவாகவும் உடல் எடை அதிகரிக்கலாம். ஹார்மோன் மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகள், பயோகிளிட்டசோன் எனும் நீரிழிவு நோய் மாத்திரை, இன்சுலின் போன்றவற்றை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம்.
ஆண்களைவிடப் பெண்களுக்கு உடல் பருமன் பிரச்சினை அதிகம். காரணம், தற்போது பெண்களிடையே உடல் உழைப்பு பெரிதும் குறைந்துவிட்டது. உட்கார்ந்துகொண்டே வேலை செய்யும் பணிகளில் ஈடுபடும் பெண்கள்தான் அதிகம். தவிர, வீட்டில் மிச்சமுள்ள உணவைத் தூக்கி போட மனமில்லாமல் சாப்பிடுவதும், தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே நொறுக்குத்தீனியை அளவு தெரியாமல் சாப்பிடுவதும், இந்தப் பிரச்சினையை உருவாக்கும். பல பெண்களுக்குக் குழந்தை பிறந்த பிறகு, ஹார்மோன்களின் அதீத விளைவால் உடல் பருமன் ஏற்படுவதுண்டு.
இதனிடையே புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரில் 40 விழுக்காட்டினர் உடல் பருமன் மற்றும் அதிக உடல் எடைக் கொண்டோர் என்பது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. Centers for Disease Control and Prevention (CDC) எனப்படும் மருத்துவ ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. பரிந்துரைக்க பட்டதை விட அதிகளவு எடையுடன் பெரும்பான்மையான அமெரிக்க இளைஞர்கள் உள்ளதாகவும், மூன்றில் இரு பங்கு அமெரிக்க இளைஞர்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக வும் ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. பெரும்பான்மையான அமெரிக்கர்களுக்கு உடல் பருமனுக்கும் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு தெரியவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
2014ல் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளானோரில் 6,30,000 பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இத்தகைய புற்றுநோயானது 2005 முதல் 2014 வரை 7 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளானோரில் 55% பெண்களும், 24% ஆண்களும் உடல் பருமன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் பருமன் உள்ளோரில் 50 முதல் 74 வயதிற்கு உட்பட்டோரே பெரும்பாலும் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாவதும் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.