June 3, 2023

ரயில் பயணிகளுக்கு ஓர் அறிவிப்பு : உங்கள் போனில் 139 என்ற எண்ணை சேமித்து வைத்து கொள்ளவும்!

ரயில்களில் பயணம் செய்யும் போது ரயில்கள் மற்றும் ரயில்நிலையங்களில் ஏதேனும் பொது வான பிரச்னைகள், ரயில் வரும் நேரம், புறப்படும் நேரம், உணவு சம்பந்தமான குறைபாடுகள், விபத்து குறித்து தகவல் தெரிவிக்க தனித்தனியாக உதவி மைய எண்கள் வழங்கப்பட்டு இருந்தது. மேலும் ரயில்வே தொடர்பான தகவல்களை பெற 131 என்ற எண் வழங்கப்பட்டு இருந்தது. பின்னர் 139 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இணையதளம் போன்ற வசதிகள் பெருகியதை யடுத்து இந்த உதவி எண்ணை மக்கள் பயன்படுத்துவது குறைய தொடங்கியது. இதனால் அந்த சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் மீண்டும் இந்த எண் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

அதாவது முன்னதாக ரயில்வே பாதுகாப்பு மட்டும் 182 என்ற உதவி எண் கூட பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த உதவி எண்ணில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. அதைத் தவிர்த்து, மற்ற அனைத்து உதவி எண்களும் நீக்கப்பட்டு, 139 என்ற புதிய உதவி எண் மட்டுமே இனிமேல் பயன்பாட்டில் இருக்கும். பயணிகள் எளிதில் நினைவில் வைக்கும் வகையில் இந்த 3 இலக்க எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

139 எனும் உதவி எண்ணில் பயணிகள் அழைத்தால் 12 மொழிகளில் ஐபிஆர்எஸ் முறை(கணினி மொழி) தங்களுக்குத் தேவையான உதவிகளைக் கேட்கலாம். மொபைல் போன் மட்டுமல்லாது, எந்தவிதமான போனிலும் இருந்து இந்த உதவி எண்ணை அழைத்து பயணிகள் உதவி கோரலாம்.

பாதுகாப்பு, மருத்துவ உதவி போன்றவற்றுக்கு நம்பர் 1 அழுத்தினால் உடனடியாக கால்சென்டர் பிரதிநிதிகளுக்கு அழைப்பு இணைக்கப்படும். விசாரணைகள், பயணம் தொடர்பான கேள்விகளுக்கு 2-ம் எண்ணை அழுத்தி உதவிகள் பெறலாம். ரயில்வே கேட்டரிங்கில் ஏதேனும் புகார்களுக்கு 3-ம் எண்ணும், பொதுவான புகார்களுக்கு 4-ம் எண்ணையும் அழுத்தித் தெரிவிக்கலாம்.

லஞ்சம், ஊழல் தொடர்பான புகார்களுக்கு 5-ம் எண்ணை அழுத்தி தகவல் தெரிவிக்கலாம், விபத்துகள் தொடர்பான உதவிக்கு 6-ம் எண்ணையும், வழங்கப்பட்ட புகார்களின் நிலைமை குறித்து அறிய 9 எண்ணையும் அழுத்தலாம், கால்சென்டர் பிரதிநிதிகளிடம் பேசுவதற்கு ஸ்டார் பட்டனை அழுத்தி பயணிகள் பேசலாம்.