எல்.கே.ஜிக்கு எதுக்கு ஆன்லைன் வகுப்புகள்?

இன்று காலை, ஊரில் இருந்து அக்கா வாட்ஸ்ஆப் ல் செய்தி அனுப்பினாள். அக்கா மகனுக்கு வயது 4 ஆகிறது. அவன் இப்போது எல்.கே.ஜி சேர வேண்டும். கட்டணம் கட்டினால் தான் அவனுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுப்பார்களாம் என்று சொன்னாள் அக்கா. இப்போ என்ன செய்யலாம் என்று கேட்டாள்.
நான் சொன்னேன் பள்ளிகள் எப்போது திறப்பார்கள் என்று தெரியாது. பெரும்பாலும் இவ்வாண்டு Zero Academic year ஆகத் தான் இருக்கும். அதனால், திறக்கும்போது பார்த்துக் கொள்ளலாம். ஆன்லைன் கல்வி வேண்டாம். அதற்காக கட்டணம் செலுத்தாதீர்கள். வீட்டில் சொல்லிக் கொடு அதுவே போதுமானது! அக்கா சரி என்று சொல்லிவிட்டாள்.
இது ஒருபுறம் இருக்கட்டும், எல்.கே.ஜியிலிருந்து குறைந்தபட்சமாக 5ஆம் வகுப்புப் படிக்கும் பிள்ளைகளுக்கு ஏன் ஆன்லைன் வகுப்பு கூடாது என்பதை விளக்குகிறேன். ஐந்தாம் வகுப்புவரை குழந்தைகள் அக்கம்பக்கம் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டிய வயது. தொட்டுப் பார்த்து கற்றுக்கொள்ளும் வயது.
ஆன்லைன் வகுப்புகள் அந்த வாய்ப்பினைத் தராது. மாறாக குழந்தைகளை இயந்திரமாக மாற்ற முயற்சிக்கும். உளவியல் ரீதியாக குழந்தைகள் கல்வியை வெறுக்கத் தொடங்குவதற்கான வாய்ப்பு அதிகமிருக்கிறது. குழந்தைகளிடம் கற்றல் குறைபாடுகளும் அதிகரிக்கலாம். அவர்களை குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்காதீர்கள். சிறிய வயதில் அளவுக்கு மீறிய தொழில்நுட்ப அறிவும் ஆபத்தானதே!
முரளிகிருஷ்ணன் சின்னதுரை