அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை; தினகரன் ஆதரவு எம்எல்ஏ.,க்கு ரூ. 1 லட்சம் அபராதம் – ஐகோர்ட் ஆர்டர்!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை; தினகரன் ஆதரவு எம்எல்ஏ.,க்கு ரூ. 1 லட்சம் அபராதம் – ஐகோர்ட்  ஆர்டர்!

நாளை நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்த சென்னை ஐகோர்ட், தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாகக் கூறி அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

நீதிபதி சி.வி. கார்த்திகேயன் அடங்கிய அமர்வு முன் இந்த மனு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறும்போது, அதிமுக சர்ச்சை, தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கிறது. அதிமுக அம்மா அணி, புரட்சித் தலைவி அம்மா அணி விவகாரம் இன்னும் முடியவில்லை. இத்தகைய சூழலில் இந்த விசயத்தில் நீதிமன்றம் தலையிட்டு அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க எவ்வித சட்ட முகாந்திரமும் இல்லை. எனவே, நாளை நடைபெறும் பொதுக்குழுவுக்கு தடை விதிப்பதற்கில்லை. அதேபோல், இந்த சிக்கல்கள் தெரிந்திருந்தும் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் வழக்கு தொடர்ந்த எம்எல்ஏ., வெற்றிவேலுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது என்று நீதிபதி தெரிவித்தார்.தினகரன் ஆதரவு எம்எல்ஏ., வெற்றிவேல் தரப்பில் மூத்த வழக்கறிஞர் டி.வி. ராமானுஜம் ஆஜரானார்.

முன்னதாக, அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தினகரன் தரப்பு எம்எல்ஏ வெற்றிவேல் கடந்த வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில், அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டும் அதிகாரம் பொதுச் செயலாளரான வி.கே.சசிகலாவுக்கு மட்டுமே உள்ளது. ஆனால், சசிகலா வேறு யாருக்கும் பொதுக்குழு, செயற்குழுவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கவில்லை.இந்நிலையில் செப்டம்பர் 12-ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தை நடத்த உள்ளதாக சிலர் அறிவிப்பு வெளியிட்டு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பொதுச் செயலாளரின் அனுமதியின்றி இக்கூட்டத்தைக் கூட்ட அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

எனவே, பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். இது சம்பந்தமாக தினகரன் தரப்பு எம்எல்ஏ வெற்றிவேல் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். எனவே, அவசரம் கருதி எங்கள் மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என மூத்த வழக்கறிஞர் டி.வி. ராமானுஜம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.

error: Content is protected !!