முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது!

தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நம் நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனை யில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும், மறுபக்கம் நம்பிக்கையளிக்கும் வகையில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கிறது. இந்த நிலையில் எகிறிக் கொண்டு போகும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் வழங்கப்பட முடியாது என தமிழ்நாடு பெட்ரோல் வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4276 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதை அடுத்து தமிழக அரசு மீண்டும் பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அவை அனைத்தும் ஏப்ரல் 10ஆம் தேதிமுதல் பின்பற்றப்படும் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில்தான் முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என தமிழ்நாடு பெட்ரோல் வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. பெட்ரோல் நிரப்ப வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்துவருமாறு தமிழ்நாடு பெட்ரோல் வணிகர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.