12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசியா? இப்போதைக்கு இல்லை!
இந்தியாவில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி 16ந் தேதி தொடங்கியது. முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தொடங்கி கடந்த ஏப்ரல் மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு ஜனவரி 3ந் தேதியில் இருந்து 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறாா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பிரிவினரில் 7 கோடியே 40 லட்சத்து 57 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் 3 கோடியே 59 லட்சத்து 30 ஆயிரத்து 929 பேருக்கு கோவேக்சின் முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 4 வாரங்களில் அவர்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசி போடப்பட உள்ளது.
மேலும் ஜனவரி 10ந் தேதி முதல் முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதைக் கடந்த இணைநோய் உள்ளோர் ஆகியோருக்கு முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டர்) தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 50 லட்சத்து 84 ஆயிரத்து 410 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சகம் மறுப்பு
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நோய்த் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப அறிவுரைக் குழுவின் கொரோனா செயற்குழு தலைவர் என்.கே.அரோரா, 12 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் மார்ச் மாதத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார். எனினும் இதுகுறித்த கொள்கை முடிவை அரசு எடுக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த அறிவிப்புக்கு மத்திய சுகாதார அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “12 வயது முதல் 14 வயதிலான சிறார்களுக்கு இப்போதைக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இல்லை. இது தொடர்பாக அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை” என்று தெரிவித்துள்ளது.