பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா செஞ்சுட்டார்!

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா செஞ்சுட்டார்!

பீகாரில் முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததால் ஆளும் மெகா கூட்டணியில் விரிசல் ஏற்படத் தொடங்கியது. இந்த உரசல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், இன்று முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தேஜஸ்வி யாதவின் தந்தையும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில் நிதிஷ் குமார் மீது கடுமையான தாக்குதலை தொடுத்துள்ளார்.

லாலு பிரசாத் யாதவ் பேசுகையில், ‘நிதிஷ் குமார் எந்த ஒரு ராஜினாமாவையும் கோரவில்லை. வழக்கறிஞர் ஆலோசனையின்படி தேஜஸ்வி மீது சுமத்தப்பட்டு உள்ள ஊழல் புகார் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசமாட்டேன். பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என நிதிஷ் குமார் வாக்குறுதி அளித்து உள்ளார். நிதிஷ் குமாருக்கு தெரியும் அவரே கொலை வழக்கு குற்றவாளி என்று. கொலை மற்றும் ஆயுத வழக்கில் முக்கிய குற்றவாளி முதல்-மந்திரிதான் நிதிஷ் குமார். நிதிஷ் குமாருக்கும் நான் கோரிக்கை விடுக்கின்றேன். ராஷ்டீரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் ஒன்றாக அமர்ந்து பேசவேண்டும், புதிய தலைவரை தேர்வு செய்து ஆட்சி அமைக்க வேண்டும். அவருக்கு இதில் நாட்டமில்லை என்றால் அவர்கள் ஏற்கனவே பாரதீய ஜனதாவுடன் இணைய திட்டமிட்டுவிட்டார் என்பது நிரூபணமாகிவிடும்’ என்றார்.

முன்னதாக 2015 பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கின. இந்த தேர்தலில் லாலு பிரசாத் யாதவ் கட்சி 80 இடங்களிலும், நிதிஷ்குமாரின் கட்சி 71 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 27 இடங்களிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தன. முதல்–மந்திரியாக நிதிஷ்குமாரும், துணை முதல்–மந்திரியாக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவும் பொறுப்பேற்றனர். இந்த கூட்டணி உடைந்து விடும் என கூறப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக நீடித்தது.

இந்நிலையில் ரயில்வேக்கு சொந்தமான ஓட்டல்களை குத்தகைக்கு விட்டதில் நடந்த முறைகேடு தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இம்மாத 7-ம் தேதி சோதனையிட்டனர். முறைக்கேடு தொடர்பாக சிபிஐ பதிவு செய்து உள்ள எப்.ஐ.ஆர்.ரில் பீகார் மாநில துணை முதல்-மந்திரியும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் பெயரும் இடம்பெற்று உள்ளது. இதன் மூலம் லாலு மற்றும் அவருடைய குடும்பத்தினர் விசாரணை முகமைகளின் வளையத்திற்குள் சிக்கிஉள்ளது அக்கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சியான பா.ஜனதா மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தின. ஆனால் நிதிஷ் குமார் அல்லது அவருடைய கட்சியான ஐக்கிய ஜனதா தளம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி விரைவில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என நிதிஷ் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. கடந்த 14-ம் தேதி வரையில் ராஜினாமாவிற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

இருப்பினும் லாலு குடும்பத்திற்கு எதிராக சுமத்தப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர்கள் விரிவான விளக்கத்தை வெளியிட வேண்டிய உடனடி தேவை உள்ளது என நிதிஷ் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது என செய்திகள் வெளியாகியது.ஆனால் தேஜஸ்வி யாதவ் ராஜினாமாவை லாலுவின் கட்சி ஏற்கவில்லை. இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பிரச்சனையை சரிசெய்ய முயற்சி செய்தார்கள். லாலு மற்றும் நிதிஷ் குமாரிடம் பேசிய காங்கிரஸ் தலைவர்கள் அமைதி காக்க கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில், பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தள கட்சி அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் முதல் மந்திரி நிதிஷ்குமார் இன்று மாலை ஆலோசனை நடத்தினார். அப்போது, பீகாரில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசித்தார். இதைதொடர்ந்து, ஆளுனர் மாளிகைக்கு சென்ற நிதிஷ்குமார், தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

Patna: Bihar Chief Minister Nitish Kumar arrives at Raj Bhawan to meet Governor KN Tripathi, in Patna on Wednesday. PTI Photo (PTI7_26_2017_000212B)

இது குறித்து மாநில ஆளுனரிடம் கடிதம் கொடுத்த நிதிஷ்குமார், அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “பீகாரில் தற்போது நிலவும் சூழ்நிலையில் என்னால் ஆட்சியை தொடர முடியாது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முற்படுவேன். நான் அளித்த ராஜினாமா கடிதத்தை ஆளுனர் ஏற்றுக்கொண்டார். அடுத்த நடவடிக்கை எடுக்கும்வரை தொடர்ந்து பதவியில் இருக்கும்படி கூறியுள்ளார். எனது ராஜினாமாவுக்காக நான் யார் மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை’’ என தெரிவித்துள்ளதும் லாலு பதிலடியாக குற்றம் சாட்டி இருப்பதும் குறிப்பிடத்தக்கது..

Related Posts

error: Content is protected !!