அடுத்த தலைமுறை புகைபிடிப்பது சட்டவிரோதமாக்கப்படும்!- நியூசிலாந்து அதிரடி!

நியூசிலாந்து மக்களிடையே புகைபிடிப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். இந்நாட்டில் புற்றுநோயால் இறக்கும் நால்வரில் ஒருவர் புகையிலையால் உயிரிழக்கிறார். எனவே அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சட்டப்பூர்வமான புகைபிடிக்கும் வயது படிப்படியாக அதிகரிக்கப்படும். குறிப்பாக 2004-க்குப் பிறகு பிறந்த எவருக்கும் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கான தடை வரை நீட்டிக்கப்படலாம். அந்த தலைமுறைக்குப் புகைபிடிப்பது சட்டவிரோதமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புகையிலைப் பழக்கமே, பல்வேறு நோய் பரவ முக்கிய காரணியாகவும், அதிகமான இறப்புக்கு காரணமாகவும் விளங்குகிறது. உலக அளவில் அதிக மரணங்கள் நிகழக் காரணமாக இருப்பதில் முதல் இடத்தில் இருப்பது புகையிலைப் பொருட்கள்தான். இதைக் கவனத்தில் கொண்டு நியூசிலாந்து நாட்டில் புகையிலை இல்லாத தலைமுறை உருவாக்க வரும் 2025-ம் ஆண்டுக்குள் சிகரெட் பயன்பாட்டை தடை செய்யும் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இத் திட்டத்தின்படி முதற் கட்டமாக சிகரெட் புகைக்கும் வயது வரம்பை அதிகரிப்பது, அதேபோல் 2004-ம் ஆண்டு பிறகு பிறந்தவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனைச் செய்யத் தடை செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக புகைபிடிப்பது சட்ட விரோத நடவடிக்கை என வரும் தலைமுறையினர் உணர்வார்கள்.
அத்துடன் புகையிலை பொருட்களில் அனுமதிக்கப்பட்ட நிகோடின் அளவை கணிசமாகக் குறைத்தால், புகையிலைக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயித்தல் மற்றும் புகையிலை மற்றும் சிகரெட்டுகளை விற்கக்கூடிய இடங்களைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை இந்த திட்டத்தில் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஆயிஷா வெரால், ஒவ்வொரு ஆண்டும் நியூசிலாந்து நாட்டில் 4,500 பேர் புகையிலை புகைப்பதினால் உருவாகும் நோயால் இறக்கிறார்கள். அடுத்த தலைமுறையினரைப் புகையில்லா தலைமுறையாக மாற்ற புதிய அணுகுமுறைகள் தேவைப்படுகிறது” என்றார்.
நியூசிலாந்தில் புகையிலை பொருட்களைத் தடை செய்ய பல ஆண்டுகளாகப் போராடி வரும் ‘Shane Kawenata Bradbrook’ இந்த திட்டம் குறித்து கூறுகையில், “சிகரெட் நிறுவனங்கள் தங்களுடைய லாபத்திற்காக நாட்டு மக்களின் உயிரை எடுத்துவந்தனர். சிகரெட் புகை பழக்கத்தினால் மக்களை அடிமைப்படுத்தி வந்தனர். தற்போது அரசு எடுத்துள்ள இந்த முடிவு புகையிலை நிறுவனங்களுக்கு முடிவுகட்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.