பகீர் ஆய்வு: உங்கள் ‘உணவு’ உடலை மட்டுமல்ல… பூமியையும் அழிக்கிறது!
உலகம் இன்று இரண்டு மிகப்பெரிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. ஒன்று, கட்டுக்கடங்காமல் உயர்ந்து வரும் ‘உடல் பருமன்’ (Obesity); மற்றொன்று, புவியையே அச்சுறுத்தும் ‘காலநிலை மாற்றம்’ (Climate Change). இவை இரண்டும் வெவ்வேறானவை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இவை இரண்டுமே ஒரே மூலவேரைக் கொண்டவை என்றும், ஒன்றையொன்று தீவிரப்படுத்துகின்றன என்றும் புதிய அறிவியல் ஆய்வு ஒன்று அதிர வைக்கும் உண்மைகளை வெளியிட்டுள்ளது.
1. பொதுவான எதிரி: நவீன உணவு முறை:
சமீபத்தில் ‘Frontiers in Science‘ இதழில் வெளியான ஆய்வின்படி, மிக அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகள் (Ultra-processed foods) மற்றும் மாட்டிறைச்சி போன்ற சிவப்பு இறைச்சிகளை அதிகம் சார்ந்திருக்கும் உணவு முறையே இந்த இரண்டு நெருக்கடிகளுக்கும் முக்கியக் காரணம்.

-
உடல்நல பாதிப்பு: சர்க்கரை, உப்பு மற்றும் கெட்ட கொழுப்பு நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளால் இன்று உலகில் 100 கோடிக்கும் அதிகமானோர் உடல் பருமனுடன் உள்ளனர்.
-
சுற்றுச்சூழல் பாதிப்பு: இந்த வகை உணவுகளைத் தயாரிப்பதற்கும், இறைச்சிக்காகக் கால்நடைகளை வளர்ப்பதற்கும் காடுகள் அழிக்கப்படுகின்றன. இது பசுமை இல்ல வாயுக்களின் (Greenhouse gases) வெளியேற்றத்தை அதிகரித்து புவி வெப்பமடையக் காரணமாகிறது.
2. 2030-ல் காத்திருக்கும் ஆபத்து;
உலக சுகாதார அமைப்பின் (WHO) புள்ளிவிவரப்படி, உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை 2030-ஆம் ஆண்டில் 130 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
எடை குறைப்பு மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் (Bariatric surgery) சாதனை அளவில் அதிகரித்து வந்தாலும், அடிப்படைப் பிரச்சனையான ‘உணவு முறையில்’ மாற்றம் வராத வரை இந்த எண்ணிக்கையைக் குறைக்க முடியாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
3. ஒன்றையொன்று தூண்டும் சக்கரம்:
இந்த ஆய்வு ஒரு முக்கியமான சுழற்சியைச் சுட்டிக்காட்டுகிறது:
-
நாம் உண்ணும் தவறான உணவுகள் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றிப் புவியின் வெப்பத்தை உயர்த்துகிறது.
-
புவி வெப்பமடைவதால் ஏற்படும் காலநிலை மாற்றம், விவசாயத்தைப் பாதித்து சத்தான காய்கறிகள், பழங்களின் உற்பத்தியைக் குறைக்கிறது.
-
சத்தான உணவுகள் கிடைக்காதபோது, மக்கள் மீண்டும் மலிவான பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தேடிச் செல்கின்றனர். இது மீண்டும் உடல் பருமனை அதிகரிக்கிறது.
4. தீர்வு என்ன?
இந்த இரண்டு நெருக்கடிகளுக்கும் தீர்வு ஒன்றே என ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர்:
-
உணவுப் புரட்சி: தாவர வகை உணவுகள் (Plant-based diets), முழு தானியங்கள் மற்றும் சிறுதானியங்களுக்கு மாறுவது உடல் நலனை மீட்டெடுப்பதுடன், கார்பன் வெளியேற்றத்தையும் பாதியாகக் குறைக்கும்.
-
அரசின் தலையீடு: உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கும் உணவுகள் மீதான வரி விதிப்பு மற்றும் ஆரோக்கியமான உணவுகளுக்கான மானியம் ஆகியவற்றை உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும்.
மொத்தத்தில் நமது தட்டில் இருக்கும் உணவு, நம் உடலை மட்டுமல்ல, இந்த உலகையும் தீர்மானிக்கிறது. ஆரோக்கியமான உணவு முறையைத் தேர்ந்தெடுப்பது என்பது நமக்காக மட்டுமல்ல, வருங்கால சந்ததியினர் வாழப்போகும் பூமிக்காகவும் நாம் செய்யும் ஒரு தியாகமாகும்.
வாத்தீ அகஸ்தீஸ்வரன்


