நெருப்புடா – திரை விமர்சனம்!

நெருப்புடா – திரை விமர்சனம்!

சராசரி மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் செய்ய முடியாததை செய்வதாகக் காட்டும் ஹீரோக்கள் தான் சினிமாவில் ஜெயிக்கிறார்கள். அந்த வகையில் அதிரடி போலீஸ், ஆக்ஷன் வீரர், நியூ அப்ரோச் வாத்தியார் என பல ரோல்கள் வந்தாலும் நெருப்புடா படத்தில் விக்ரம் பிரபு ஏற்று நடித்துள்ள கேரக்டர் தமிழ் சினிமாவுக்கு புதுசு என்பதுடன் அதை ரொம்ப நீட்டாக பண்ணி படத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு போயிருக்கிறார் என்றால் மிகையல்ல.

ஆம் . நாம் எவ்வளவுதான் தலை போகிற அவசரத்தில் சென்று கொண்டிருந்தாலும் சைரன் ஒலித்தபடி விரைந்து செல்லும் இரண்டு வண்டிகளின் மீது அனிச்சையாக நம் கண்களும் மனமும் குவியும். அப்படியான ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி இரண்டுமே உயிர்காக்கும் வண்டிகள் என்றாலும் தீயணைப்பு வண்டியின் சேவை எல்லைகள் விஸ்தாரமானவை. தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பிற உயிர்களையும் உடைமைகளையும் காப்பாற்றுகிற வீரமும் ஈரமும் நிறைந்தது தீயணைப்பு வீரர்களின் பணி. மளமளவென பற்றிப் பரவும் நெருப்போ, சடசடவென சரிந்துவிழும் கட்டடமோ, உயிர் குடிக்கும் விஷ வாயுயோ, ஊரையே குடிக்கும் சுனாமியோ, மலையைக்கூட விழுங்கிச் செரிக்கும் பூகம்பமோ… எதுவாக இருந்தாலும் அங்கே உதவிக்குத் தீயணைப்புத் துறையின் கரங்கள் நீளும் இல்லையா? அந்த சேவையை விரும்பி ஏற்று சாதிக்கும் இளைஞர் பட்டாளத்தின் தலைவனாக விக்ரம் பிரபு  அவதாரம் எடுத்து அதகளப் படுத்தி இருக்கிறார்.

சென்னை நகரில் எம்.ஐ.ஜி குடியிருப்பு ஒன்றில் அப்பாவுடன் வாழும் குரு (விக்ரம் பிரபு). குருவின் அப்பா (பொன்வண்ணன்) கழிவு நீர்த் துப்பரவுத் தொழிலாளி . விக்ரம் பிரபு தன் ப ன்னிரண்டாவது வயதில் நடந்த தீ விபத்து ஒன்றில் தீயணைப்புத் துறையினர் வந்து உயிரைப் பணயம் வைத்து செய்யும் சேவையைக் கண்டு பிரமித்து,தானும் ஃப்யர் மேனாக வேண்டும் என்று ஆசைப்பட அவர் ஆசையுடன் அவன் கிளாஸ்மேட் நண்பர்கள் நான்கு பேர்களும் அதே தீயணைப்புத் துறையில் சேர ஆசைப்படுகிறார்கள். அதை அடுத்து அதற்கான எக்ஸாம் அட்டெண்ட் பண்ணாத நிலையிலும் சொந்தமாக ஒரு தீயணைப்பு வண்டி தயார் செய்து ஆங்காங்கே நடக்கும் தீ விபத்துகளை தடுத்து சில பல உயிர்களை காக்கின்றனர்.

இதை அவ்வப்போது காணும் தீயணைப்புத் துறை உயர் அதிகாரி ஒருவருக்கு ( நாகி நீடு ) இவர்களை முறைப்படி தேர்வு எழுத வைத்து கவர்மெண்ட் வேலையில் சேர்த்துக் கொள்ள ஆசை . அவருக்கு ஒரு மகள் (நிக்கி கல்ராணி ). அவளுக்கும் குருவுக்கும் காதல் . (அந்த காதலுக்கு மிக சரியான காரணத்தை கண்டு கொக்கி போட்ட டைரக்டருக்கு தனி ஷொட்டு). அந்த எக்ஸாம் எழுத வேண்டிய நாள் நெருங்கும் போது முந்தைய இரவில் தனியாக வரும் — நண்பர்களில் ஒருவனை , இரண்டு ரவுடிகள் நிறுத்தி வம்பிழுத்து அடிக்கின்றனர். பதிலுக்கு இவன் அடித்தவனை தள்ளி விட போதையில் கீழே விழுந்த ரவுடி தலையில் அடிபட்டு செத்து விடுகிறான் .

இந்த விவகாரம் போலீஸ், வழக்கு என்று ஆகி ஃபயர் சர்வீஸ் மேன் வேலைக்குப் போக முடியாதோ என்ற பயத்தில் தங்கள் ஏரியா கவுன்சிலர் (நான் கடவுள் ராஜேந்திரன்).ரிடம் சொல்லும் போதுதான் தெரிகிறது செத்துப் போன ரவுடி , மிகப் பெரிய தாதாவான புளியந்தோப்பு ரவி என்பவனின் நெருங்கிய நண்பன் என்பதும் அந்த ரவுடியின் கூட்டாளிகள் பழிக்கு பழி வாங்க வருவார்கள் என்று பயமும் குழப்பமும் வருகிறது. இதையடுத்து பர பரவென்ற பலவேறு திருப்பங்களுடன் லட்சிய வேலையான ஃபயர் சர்வீசில் சேர்ந்தார்களா ? காதல் என்னாச்சு ? ரவுடி ரியாக்‌ஷன் என்ன ? என்பதே நெருப்புடா வீச்சு .

ஆரம்ப பத்தியில் சொன்னது போல் பல நாயகர்கள் பல மணி நேரம் செலவு செய்து மேக் அப் போட்டு மிரட்டல் என்ற பெயரிலான பாத்திரங்களை கொடுக்கும் சூழ்நிலையில் அரிதான அதிலும் நம்மூர் புது நாயகர்கள் கூட தொட தயங்கும் தீயணைப்பு வீரர் கேரக்டரை ஏற்று ‘“என்னை எப்படித்தான் கொடுமைப் படுத்தினாலும் கொன்றாலும் என் வேலை உயிரைக் காப்பாத்துறது தான் . பதிலுக்கு இன்னொரு உயிரை எடுப்பது அல்ல’ என்ற வசனத்தை அழுத்தமாக பேசி கதைக்கு தேவையான அளவு நடித்தும் அப்ளாஸ் வாங்குகிறார் விக்ரம் பிரபு.

இனி இது போன்ற வலுவான கதை களத்தை தேர்ந்தெடுக்கப்பதன் அவசியத்தை புரிந்திருப்பார் என்று நம்பலாம். நாயகி நிக்கி கல்ராணிக்கு கொஞ்சூண்டு காட்சிகள்தான் என்றாலும் வந்து போகும் காட்சிகளில் நிறைவாக இருக்கிறார். நண்பர்கள் பட்டாளம் மற்றும் வின்சென்ட், விக்ரமின் அப்பா பொன்வண்ணன் ஆகியோர் கொடுத்த வேலையை பொறுப்புணர்ந்து செய்திருக்கிறார்கள். வில்லன் செத்து விட்ட நிலையிலும் தொடர்ந்த சஸ்பென்சின் முத்தாய்ப்பாக அதிரடி திருப்பமாக ஆக்ரோஷ திருநங்கையாக வந்து மிரட்டி இருக்கிறார் நடிகை சங்கீதா. ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் ஓ.கே ரகம்தான். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.

மார்க் 5 / 3.25

 

error: Content is protected !!