வருடத்திற்கு இரண்டு முறை நீட் தேர்வை நடத்த அனுமதி!?
மாணவர்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக நடப்பாண்டு முதல் வருடத்திற்கு இரண்டு முறை நீட் தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறைக்கு தேசிய தேர்வு முகமை பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது. நடப்பாண்டில் நீட் தேர்வை சுமார் 11லட்சம் பேர் எழுதி முடித்துள்ளனர். இந்த நிலையில் மாணவர்கள், ஆசிரியர்களின் தரப்பில் தேசிய தேர்வு முகைமையிடம் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதில்,’ தேர்வு எழுதும் மாணவர் களின் சிரமத்தை குறைக்கும் விதமாக ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வை நடத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டது.
இதையடுத்து அதனை பரிசீலனை செய்த தேர்வு முகைமை கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், 2021ம் ஆண்டு முதல் நீட் தேர்வு நாடு முழுவதும் வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படும் என தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தேசிய தேர்வு முகமை தரப்பில் இருந்து மத்திய சுகாதாரத்துறைக்கு ஒரு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில்,’ இந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் நீட் தேர்வை வருடத்திற்கு இரண்டு முறை நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்யும் பட்சத்தில் மாணவர்களின் சிரமம் என்பது கண்டிப்பாக குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் முதல் முறையில் நீட் தேர்வு எழுத முடியாமல் போனால், திறமையுள்ள ஒரு மாணவர் மருத்துவப்படிப்பில் சேருவதற்கு ஒரு வருடம் முழுவதும் காத்து இருக்க வேண்டிய சூழல் தற்போது உள்ளது. அது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.