நீட் எக்ஸாம் ; மே 6-ம் தேதி நடக்கும் என்று அறிவிப்பு!
தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுவது உறுதி என்றும், தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததுடன், ‘நீட்’ தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசுடன் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. தமிழகத்தில் கல்வித்துறையை பொறுத்தவரை நாங்கள் கேட்ட நிதியை மத்திய அரசு தவறாமல் தந்துள்ளது. நீட் தேர்வு தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது.வழங்குகள் முடிந்த பின்னர், தமிழக அரசு சார்பில் இது குறித்த முடிவு எடுக்கப்படும்” என்று விளக்கமளித்த நிலையில். வரும் மே 6-ம் தேதி மருத்துவத்துக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆம்..மருத்துவத்துக்கான நீட் நுழைவுத் தோ்வு மே 6-ம் நடைபெறும் என்று சி.பி.எஸ்.இ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி .நீட் தோ்வுக்கு பிப்ரவரி 8-ம் தேதி(இன்று) முதல் மார்ச் 9-ம் தேதி வரை www.cbseneet.nic.in என்ற இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க தகுதியானவர்கள்:
இந்திய குடியுரிமை பெற்றவர்கள், என்.ஆர்.ஐ., ஓ.சி.ஐ., பி.ஐ.ஓ., மற்றும் வெளிநாட்டவர்கள் விண்ணபிக்கலாம்.
டிசம்பர் 31,2018-ன் படி 17 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். உச்ச வரம்பு வயது 25 ஆக உள்ளது. எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி பிரிவினருக்கு வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல் / பயோ-டெக்னாலஜி, ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளில் தனித்தனியாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பொது பிரிவினர், தகுதித் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் / பயோ-டெக்னாலஜி ஆகியவற்றை சேர்ந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி பிரிவினர் 40% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
பொது பிரிவு மாற்றுத்திறனாளிகள் 45% மதிப்பெண்களும், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி பிரிவு மாற்றுத்திறனாளிகள் 40% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
இயற்பியல், வேதியியல், உயிரியல் / உயிர் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை 10 + 2 அளவில் படித்திருக்க வேண்டும்.
திறந்தநிலைப் பள்ளி அல்லது தனி தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வை எழுத முடியாது. உயிரியல் /பயோ-டெக்னாலஜி பாடத்தை கூடுதல் பாடமாக பயின்றவர்களும் இந்த தேர்வு எழுத முடியாது. தற்போது 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை எழுதலாம்.
தோ்வு விண்ணப்ப கட்டணமாக ஓ.பி.சி. மற்றும் பொது பிாிவினருக்கு ரூ. 1,400ம், எஸ்.சி., எஸ்.டி. பிாிவினருக்கு ரூ.750ம் தோ்வு கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது.
நீட் தோ்வுக்கு வருபவா்கள் ஆதார் அட்டையை கொண்டு வரவேண்டும். தாழ்த்தப்பட்ட பிரிவிவினா் அதற்கான சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு www.cbseneet.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.