நாடெங்கும்.. ஸாரி உலகமெங்கும் அதிகரிக்கும் கிக் எக்னாமி! – டீடெய்ல் ரிப்போர்ட்!

இன்னமும் முழுமையாக ஒழிக்கப்படாத கோவிட் பிரச்சனையால் ஐடி நிறுவனங்களின் பணி புரியும் முறையே மாறி விட்டது. WFH ல் பழகியவர்கள் திரும்ப அலுவலகம் வர மறுக்கிறார்கள். கட்டாயப்படுத்தினால், ராஜினாமா செய்வதாக மிரட்டுகிறார்கள். இதன் காரணமாக ஐடி நிறுவனங்கள் உடனடியாக Hybrid முறை என்ற மூன்று நாட்கள் அலுவலகத்திலும் இரண்டு நாட்கள் வீட்டிலும் இருந்து (WFH) பணி புரியும் வாய்ப்பை வழங்கின. ஆனாலும், வர மறுக்கிறார்கள். வராததுக்குப் பல்வேறு காரணங்களைக் கூறுகிறார்கள். இவை எதையுமே முன்னர் கூற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏராளமான வாய்ப்புகள் கிடைப்பதால், நிறுவனங்களை மிரட்டுவது நடக்கிறது. நிறுவனங்களும் வேறு வழியில்லாததால், கட்டாயப்படுத்தாமல் பக்குவமாகக் கூறி வருகிறார்கள். வெளிப்படையாகக் கூறினால், கெஞ்சிக் கொண்டுள்ளனர்.- இப்படி ஒரு இன்னர் எம்ப்ளாயீஸ் எக்ஸ்போஸ் ரிப்போட்டை ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன்னால் படிக்க நேரிட்டது.. நீங்களும் படிக்க விரும்பினால் The Great Resignation | திணறும் ஐடி நிறுவனங்கள் – இந்த லிங்க்-கை க்ளிக் செய்து படியுங்கள்.
அந்த சேதியின் தாக்கமே குறையாத சூழலில் இந்த கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலகெங்கிலும் கிக் எகானமி எனப்படும் கிக் வேலை முறை பெரிய அளவில் பரவ ஆரம்பித்து இருக்கிறது. அதாவது காலம்காலமாக நாம் பின்பற்றி வந்த விஷயங்கள் இன்று நம் கண்ணெதிரே மாறி வருகின்றன. 10 – 6 வேலை நேரம்; ஒரே வித சம்பளப் படிகள்; கேஷுவல் லீவ், ப்ரிவிலேஜ் லீவ் போன்ற பலவித விடுமுறைகள், வருடாந்தர சம்பள உயர்வு, 60 வயதில் ஓய்வு, பென்ஷன், பி.எஃப் போன்ற அலுவலக வாழ்க்கை நடைமுறைகள் இப்போது வேகமாக மாறி வருகின்றன. மனதுக்குப் பிடித்த வேலை; நான்கு அல்லது ஐந்து கம்பெனிகளுக்கு ஒரே சமயத்தில் வேலை செய்வது, நமது வருமானத்தையும், விடுமுறைகளையும் நாமே தீர்மானிப்பது போன்ற புதிய வாழ்க்கையின் வாசல் அகலத் திறந்திருக்கிறது. இதை ‘கிக் எக்கானமி’ (GIG Economy) என்கிறார்கள்.
கடந்த ஆண்டே இந்தியாவில் கிக் எகானமி வாயிலாக மட்டும் சுமார் 90 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும், இதன் மூலம் சுமார் 250 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தைச் செய்யமுடியும். இத்துறையைத் திறம்பட மேம்படுத்தினால் இதன் வாயிலாக மட்டுமே நாட்டின் பொருளாதாரம் 1.2 சதவீதம் வரையில் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு எனப் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் ஆய்வறிக்கை கூறி இருந்தது.
பிரிட்டனில் தொடங்கிய இந்த வேலைக் கலாச்சாரம் கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, உலகெங்கிலும் பரவ ஆரம்பித்து இருக்கிறது. தற்போது உலகம் முழுவதும் பணியாளர்கள் இதனை நோக்கி வேகமாக நகர்ந்து வருகின்றனர். தொழில்நுட்பம் அவர்களது இந்த விருப்பத்தை பூர்த்தி செய்கிறது. கிக் எகானமி (Gig Economy) என்கிற சொல் இடம் பெற்றுள்ளது. சின்னச் சின்ன வேலைகளை பிரிட்டனில் ‘கிக்’ என்று அழைக்கிறார்கள்.
குறிப்பிட்ட வேலையை மட்டும் பார்த்துவிட்டு அதற்குரிய பணம் மட்டும் பெற்றுக்கொண்டு கிக் பணியாளர் போய்விடுவார். அவர் எந்த நிறுவனத்திலும் முழுநேர ஊழியராக இருக்கமாட்டார். எந்த நிறுவனத்திலும் ஊழியராக இல்லாமல், தனி நபர்கள் குறிப்பிட்ட பணியை, குறிப்பிட்ட காலத்துக்கு செய்து முடிப்பதே இவ்வாறு அழைக்கப்படுகிறது.
இதுபோன்ற பணி முறையில் பலரும் பணியாற்ற தொடங்கி விட்டனர். ஒரு திட்டம், ஒரு பொருள், ஒரு வேலை என நிறுவனங்களிடம் பணி வாய்ப்பு பெற்று அதனை தங்கள் நேரத்துக்கு ஏற்றார் போல செய்து முடிக்கின்றனர். இதனால் ஒரே மாதிரியான வேலை, ஒரே மாதிரியான வாழ்க்கை முறை இல்லை. இதனால் இந்த வேலைமுறை உலகம் முழுவதையும் ஈர்த்து வருகிறது. குறிப்பாக கரோனா காலத்தில் வீட்டில் இருந்து தொழில்நுட்ப உதவியுடன் பணியாற்றி பழக்கப்பட்டு விட்ட பணியாளர்கள் தற்போது கிக் பணிமுறை வெகுவாக விரும்புகின்றனர்.
அமெரிக்காவில் மொத்தம் 57.3 மில்லியன் பேர் கிக் தொழிலாளர்களாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2027-ம் ஆண்டில் அமெரிக்காவில் மொத்த தொழிலாளர்களில் 50 சதவீதம் பேர், அதாவது 86 மில்லியன் பேர் கிக் தொழிலாளர்களாக இருப்பார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டனில் கடந்த 3 ஆண்டுகளில் கிக் தொழிலாளர்கள் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது. உலக அளவில் கிக் பொருளாதாரம் 2023-ம் ஆண்டில் 455 பில்லியன் டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் 24 மில்லியன் தொழிலாளர்கள் ஒருமுறையாவது கிக் தொழிலாளர்களாக இருந்துள்ளனர்.
கிக் தொழிலாளர்கள் என்றால் சின்ன சின்ன பணிகள் செய்வது என்பது மட்டுமல்ல. தற்போது ஊடகம், எழுத்தாளர், திருமண ஏற்பாட்டாளர், புகைப்பட கலைஞர் என பலதுறைகளிலும் பரவி வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் நிறுவனங்களில் குறிப்பிட்ட பணிகளை எடுத்து தனிப்பட்ட முறையில் தங்கள் நேரத்துக்கு தகுந்தாற்போல் செய்வதும் தற்போது அதிகரித்து வருகிறது.
ஸெமோட்டோ போன்ற சேவை பணிகளில் மட்டுமல்லாமல் பெரிய பெரிய பணிகளிலும் கிக் பணி முறை வேகமாக பரவி வருகிறது. தற்போதைக்கு ஐடி, சாப்ட்வேர், கல்வி, நிர்வாகம், கணக்கீடு, புராஜெக்ட்டுகள், எழுத்துத் துறை போன்ற துறைகளில் இந்த கிக் எகானமி வேகமாக வளர்ந்து வருகிறது. கிக் பணியை இண்டர்நெட் மற்றும் ஸ்மார்ட் போன் எளிதாக்கியுள்ளது. தகுந்த வேலையை தேடி, எங்கிருந்தாலும் செய்து முடிக்கும் வாய்ப்பை இந்த தொழில்நுட்பம் வழங்கியுள்ளது. 4கில் 3 பங்கு பேர் தொழில்நுட்பம் மூலம் பணி வாய்ப்பு கிடைப்பதாக தெரிவிக்கின்றனர்.
எவ்வளவு வருவாய் ஈட்ட முடியும்?
உலக அளவில் கிக் தொழிலாளர்களின் சரசாரி வருவாய் என்பது ஒரு மணிநேரத்துக்கு 21 டாலராக உள்ளது. கிக் பணியாளர்கள் ஆண்டுக்கு 100000 டாலர் வரை கூட சம்பாதிக்கின்றனர். வாய்ப்புகள், திறமைகளும் அதிகமாக இருப்பதால் அதனை பயன்படுத்திக் கொள்ள இந்த பணி முறை வசதியாக உள்ளது. இந்த தலைமுறை நேரத்தின் முக்கியத்தை உணர்ந்து இருப்பதால் இந்த பணிமுறையை தேர்வு செய்கின்றனர்.
பாரம்பரிய பணிமுறையை விடவும் கிக் பணிமுறை மிகவும் பாதுகாப்பானது என 26 சதவீதம் பேர் எண்ணுகின்றனர். ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவது என்பது 1965-ம் ஆண்டில் சராசரி பணிக்காலம் 33 ஆண்டுகளாக இருந்தது. 1965-ம் ஆண்டில் சராசரி பணிக்காலம் 20 ஆண்டுகளாக இருந்தது. இதுவே 2027-ம் ஆண்டில் தொழிலாளர்களின் சராசரி பணிக்காலம் 10 ஆண்டுகளாக குறையும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பணிமுறையில் பணியையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் சமன் செய்ய முடியும். தங்கள் நேரத்திற்கு பணி செய்யலாம் என்பதால் இதனை விரும்புகின்றனர். கிக் பணியாளர்களில் 79 சதவீதம் பேர் பணி பாதுகாப்பு இருப்பதாகவும், 51 சதவீதம் பேர் பாரம்பரிய பணிக்கு திரும்ப மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலும் அதிகரிக்கும் ஆர்வம்
முன்னரே சொன்னது போல் இந்தியாவில் கடந்த 2021-ம் ஆண்டில் 15 மில்லியன் பேர் கிக் தொழிலாளர்களாக உள்ளனர். இந்தியா உலகத்தின் மிக இளம் மக்கள் தொகையை கொண்டுள்ளது. மக்கள் தொகையில் 65% பேர் 35 வயதுக்கு குறைவானவர்கள். சமீபத்திய ஒரு அசோசான் அறிக்கையின்படி இந்தியாவின் கிக் பொருளாதாரம் 17% சிஏஜிஆர் அளவில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2023 இல் அது 455 பில்லியன் டாலராக உயரும் என தெரிகிறது. 35வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இதில் முக்கியமாக பங்கேற்கக்கூடும் எனத் தெரிகிறது.
நிறுவனங்களில் பணியாற்றும் முழு நேர ஊழியர்களில் 64 சதவீதம் பேர் கூடுதல் வருவாய் தேவை என நினைக்கின்றனர். ஆனால் அவர்கள் ஒரு நிறுவனத்தில் பணியாற்றும்போது கூடுதலாக வருவாய் ஈட்ட நேரமில்லாமல் போய் விடுகிறது. ஆனால் கிக் பணியாளர்களாக இருந்தால் இதற்கான வாய்ப்பு இருக்கிறது. குறிப்பிட்ட நேரம், குறிப்பிட்ட திட்டத்தில் பணியாற்றலாம். விரும்பிய பொருள் நோக்கி பணியாற்றலாம். கூடுதல் பணம் தேவையென்றால் கூடுதலாக பணியாற்றலாம். தேவையில்லை என்றால் குடும்பத்துடன் நேரத்தை செலவிடலாம். இதன் மூலம் சுதந்திரமான முடிவுகளை எடுக்கலாம்.
குறிப்பாக பெண்கள் கிக் பணியாளர்களாக இருப்பது மிகவும் வசதியாக இருக்கிறது. தங்கள் நேரத்துக்கு தகுந்தவாறு திட்டமிட முடிகிறது. பிலிப்பைன்ஸ் உள்ள மிக சிறிய நாடுகளில் கூட பெண்கள் பல பணிகளில் கிக் பணியாளர்களாக உள்ளனர். சுதந்திரமாக அவர்கள் நேரத்தில் பணி செய்கின்றனர்.
சிக்கல்கள் என்ன?
அதே சமயம் கிக் பணியாளர்களாக இருப்பதில் சில சிக்கல்களும் இருக்கதான் செய்கின்றன. தங்கள் திறமை மட்டுமே கொண்டு பணியை தேடுவதால் வேலை கிடைக்காத காலங்களில் என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. நிதி நிலைமை குறித்த அச்சம் கிக் தொழிலாளர்களிடம் 45 சதவீதம் உள்ள நிலையில் பாரம்பரிய தொழிலாளர்களிடம் 24 சதவீதமே இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பணி ஒப்பந்தம், பணி ஓய்வு பலன்கள் என எதுவும் இல்லாத சூழலில் என்ன செய்வது என்ற கேள்வியும் உள்ளது. அதுபோலவே சட்டரீதியாக எங்கும் சென்று முறையிட முடியாத நிலை. மேலை நாடுகளில் கிக் பணியாளர்கள் வீட்டுக்கடன் வாங்குவதில் கூட சிக்கல் நீடிக்கிறது. இதனால் தொடர்ந்து வருவாய் ஈட்ட முடியுமா என்ற அச்சமும் உள்ளது.
எது எப்படியாகினும் தங்கள் திறனை நம்பி கிக் பணியாளர்களாக மாறுபவர்கள் தொடர்ந்து சாதிக்க முடியும். அந்த வாய்ப்பு குறையும் போது அவர்கள் பாரம்பரிய தொழிலாளர் முறைக்கு மாறி விடுவார்கள் என தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ரெங்கராஜன்