இது நம்மாழ்வாரின் செய்தி, அவர் தொடுத்த போர்!

இது நம்மாழ்வாரின் செய்தி, அவர் தொடுத்த போர்!

நம்மாழ்வார் இறப்புச் செய்தி வெளியான நாளிதழ்களின் மறு பக்கம் மற்றுமொரு செய்தியும் வெளியாகி இருந்தது. அது எம்.எஸ். சுவாமிநாதனின் மரபணு மாற்றுத் தொழில் நுட்பத்தின் நன்மைகள் குறித்துதான். இது தற்செயலானதாகத் தோன்றினாலும், இந்திய விவசாய வரலாற்றின் திசைகளைச் சுட்டிக் காட்டும் இரு வேறு பாதைகளின் வரைபடம் என்றும் இணையாத தாகவே உள்ளது. கடந்த 50,60 வருடங்களாக நாம் அதிகமாக நோயுற்று இருக்கிறோம்; நோய் களின் பெயர்களும் நமக்குப் பல நேரங்களில் தெரிவதில்லை. மருந்துக் கடைகளில் மருந்து வாங்க மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. மருத்துவர்கள் கட்டடங்களுக்கு மேல் கட்டடங்கள் கட்டுகிறார்கள்; வியாபாரம் அமோகம், கல்லாப்பெட்டி நிரம்பி வழிகிறது. 80 சதவீத மக்களின் நோயுற்ற உடல் களின் காரணம் என்ன? ஒட்டு மொத்தமாக ஒரு சமூகத்தை நோய்களினால் முடக்கிப் போட அடிப்படைக் காரணமாக உணவே இருக்கிறது. ஒரு பன்னாட்டு அரசியல் காரணமாக நம்முடைய உணவு முறையும், விவசாய முறையும் மாற்றப்பட்டன, நம் முந்தைய அரசின், அரசியல்வாதி களின் துணையோடு, 1960 களில் பசுமைப்புரட்சி என்ற பெயரில் நம்முடைய விவசாய முறை மாற்றப் படுவதற்கு, விடுதலை கிடைப்பதற்கு முன்பே போடப்பட்ட இந்தச் சதித் திட்டங்களுக்குப் பல்வேறு தொடர்ச்சியான காரணங்கள் உள்ளன.

ஆங்கிலேயரின் ஆட்சிக் காலம் ஆரம்பித்த நாளிலிருந்தே நம்முடைய பாரம்பரிய விவசாய முறையும், கல்வி முறையும் மாற்றப்பட்டு, அது இழிவானதாகச் சுட்டிக் காட்டும் போக்கு ஆரம்பித்து விட்டது. மக்களே தம்முடைய வாழ்க்கையை நாகரிகமற்றதாக எண்ணும் போக்கை ஆங்கிலேயர்கள் உருவாக்க ஆரம்பித்த காலத்திலிருந்து விடுதலை கிடைப்பது வரை, பல்வேறு உலக நாடுகளின் விவசாய ஊடுருவல் நம்முடைய நாட்டில் இருந்தன. காந்தி புகழ் பெற்ற தலைவராக இருந்தபோதிலும், அவரோடு இணைந்து பணியாற்றிய, தற்சார்புச் சிந்தனைகளை விதைத்த ஜே.சி. குமரப்பா போன்றவர்களை நேருவின் படையினர் புதிய, நவீன இந்தியாவை உருவாக்குவதில் தடையாக இருக்கக்கூடும் என்று முதலிலேயே கண்டு கொண்டனர். பிரமாண்டமான இந்தியாவை உருவாக்குவற்காக ஜே.சி. குமரப்பா போன்ற ‘சிறியவர்கள்’ ஓரம் கட்டப் பட்டனர். விவசாயத்தைப் பற்றிய ஆழமான கருத்துக்களை வைத்திருந்தாலும், பன்னாட்டு நவீன தொழில் நுட்பத்தை எதிர்த்து, 5000 ஆண்டுக்கால இந்திய விவசாய வரலாற்றை முன் வைத்தாலும் அவர் நிராகரிக்கப்பட்டார். அவருடைய எச்சரிக்கைகள் புறம் தள்ளப்பட்டன. நாம் நோயுற்று இருப்பதன் முதல் விதை இதுதான்.

‘பப்ளிகேஷன் டிவிஷன்’ 1960 களில் இரண்டு புத்தகங்களை வெளியிட்டு உள்ளது. ஒன்று Food weapon, (உணவு ஆயுதம்), இரண்டு weather weapon (தட்ப வெப்ப ஆயுதம்). இந்த இரண்டு புத்தககங்களையும் எனக்குக் கொடுத்தவர் வைகை குமாரசாமி, நாம் நோயுற்றிருப்பதை முதலில் உணர்ந்த தலைமுறையைச் சார்ந்தவர் அவர். புத்தகத்தின் கருத்துகள் எளிமை யானவைதான்; எல்லா அபாயங்களையும் போல, ஒரு நாட்டை அடிமையாக்குவற்கான எதிர்காலத் தொழில்நுட்பத்தை வலுவாக அப்புத்தகங்கள் முன் வைத்தன. ஒரு நாட்டின் உணவு முறைகளையும், தட்பவெப்பத்தினை யும் மாற்றியமைப்பதன் மூலம் அந்நாட்டை அடிமைப் படுத்தி வைக்க முடியும் என்பதுதான் அது. இதற்கான திட்டங்களின் முதல் படிதான் பசுமைப் புரட்சி.

1960 களில் இச்சதித்திட்டம் எம்.எஸ். சுவாமிநாதன், சி.சுப்பிரமணியன் ஆகியோர்களைத் தேர்ந்தெடுத்து அமெரிக்கா தன்னுடைய போரை இந்தியாவின் மீது தொடங்கியது. போரை மிகவும் வெற்றிகரமாக நடத்த எம்.எஸ். சுவாமிநாதனுக்கு, சென்னையிலிருக்கும் ஆட்டோக் களின் எண்ணிக்கைக்குக் குறைவில்லாமல் விவசாய விஞ்ஞானிக்கான விருதுகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. இன்று வரை போரும் தொடர்கிறது; விருதுகளும் தொடர்கின்றன. எம்.எஸ்.  சுவாமிநாதனைத் தவிர, இப்போரில் இந்தியாவின் மிக முக்கிய பார்ப்பனர்கள் பலரும் இதில் ஈடுபடுத்தப்பட்டனர் அல்லது இந்தப் பார்ப்பனர்தான் வேண்டும் என்று அமெரிக்கா அடம் பிடித்து சிவராமன் போன்ற பார்ப்பனர்களை நியமித்தனர். இந்த சிவராமன்தான் தமிழகத்தை ஒட்டுமொத்தமாக அழித்து, நம் நிலக் காட்சிகளின் அழகையும், 500 ஆண்டுக் கால தமிழ்க் காட்சிப் படிமங்களையும் மாற்றியவர். கருவேல மரத்தை வலுக் கட்டாயமாக நம் மக்களிடையே திணித்தவர், நம்முடைய காமராஜர் அல்ல. காமராஜர் ஆட்சிக் காலத்தில் சிவராமனால் திணிக்கப்பட்டது. இவ்வாறு தமிழனின் உடலையும், மனதையும் நிலை குலையச் செய்யும் போர் இன்று வரை உக்கிரமாகத் தொடர்கிறது. போரின் விளைவுகள் தெரிந்தவையே, மரணங்களும், துயரங்களும்தான் அவை.

ஈழ இனப் படுகொலைக்குப் பின்னர் ‘ஒவ்வொரு அழிவுக்குப் பின்னரும் நிறைய வாய்ப்புகள் உள்ளன’ அன்று கூவிய எம்.எஸ். சுவாமிநாதனுக்கு இம்மரணங்களும், துயரங்களும் நடக்கும் என்று தெரிந்தேதான் பசுமைப்புரட்சியை அரங்கேற்றினார். இரண்டு லட்சங்களுக்கு மேலான விவசாயிகளின் தற்கொலை களுக்குப் பின்னும் அமெரிக்கப் பயணம் இன்றும் வெற்றிகரமாகத் தொடர்கிறது.

இரண்டு வருடங்களுக்கும் மேலான கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை வழி நடத்தும் சுப.உதயக்குமார், ‘பார்ப்பனத்துவம், அணுத்துவம்’ என்ற நூலை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அணுசக்தித் துறையின் பெரும்பாலான அனைத்துத் தலைவர் களும், அதிகாரிகளும் பார்ப்பனர் களே, இந்தியாவின் அணு சக்திக் கொள்கைக்கும், அணு உலை யினால் மக்கள் கொல்லப்படுவதற்கும் பார்ப்பனர்களின் சதியே காரணம் என்று ஆராய்ந்து விளக்குகிறார் உதயக்குமார். அதே வாதம் பசுமைப் புரட்சிக்கும் பொருந்தும். மேல் நிலையிலிருந்து, நம்முடைய விவசாய முறை தவறு என்றும், பசுமைப் புரட்சியை அறிமுகப் படுத்தாவிடில் உணவுத் தட்டுப்பாடு காரணமாகப் பஞ்சம் வந்து எல்லோரும் சாக வேண்டியது தான் என்றும் சொல்லித்தான் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சுதந்திரத்திற்கு முன் உணவுத் தட்டுப்பாடு வந்ததும் கூட செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது தான். அதற்கான ஆதாரங்கள் உள்ளன.

மேலும் இச்சதித் திட்டம் இந்திய விவசாயிகளின் மத்தியில் எளிதாக நிறைவேற்றப்பட வில்லை, நிறைய எதிர்ப்புகள் அதற்கு இருந்தன. அதிகாரத்தின் மூலமும், அரசு ஊடகங்களான அகில இந்திய வானொலியின் மூலமும், ‘தினமணி’ போன்ற பத்திரிகைகளின் தொடர்ச்சி யான தலையங்கங்களாலும் இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதன் உச்சப் பட்சமாக ஹெலிகாப்டர் மூலம் எண்டோ சல்ஃபான் போன்ற கொடிய விஷங்கள் நிலங்களில் தூவப் பட்டன. அதன் விளைவுகள் இன்னும் பயங்கரமாக உள்ளது. நாம் நோயுற்றதற்கான போர் இப்படித்தான் நடந்தேறியது. இக்கொடிய வரலாற்றை அறிந்தவர்கள் சிலர், அறியாதவர்கள் பலர். மருத்துவர்கள் கார்ப்பொரேட் களாக மாறியதும் இதனால்தான். அனேக மருத்துவர்கள் மருந்துகள் கொடுப்பார்களே தவிர, ‘நீங்கள் நஞ்சான உணவினை உட்கொள்ளுகிறீர்கள், உணவை மாற்றுங்கள்; நோய்கள் குணமாகும்’ என்று ஒருபோதும் அவர்கள் சொல்வதில்லை.

நம்மாழ்வார் குறித்த அஞ்சலிக் கட்டுரைக்கு இவ்வரலாறே அதிகம் என நினைக்கிறேன். இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்குள் பல்வேறு அழிவுகள் நடந்து முடிந்து விட்டன. சுற்றுச்சூழல் முன்னோடியான ரேச்சல் கார்சன் தன்னுடைய ’மௌன வசந்தம்’ புத்தகத்தில் முதலில் பூச்சிக்கொல்லி யின் கொடுமையால் எவ்வாறு நிலங்களும், உயிரினங் களும் அழிந்தன என்பதை விளக்க ஆரம்பித்தார். ஒற்றை வைக்கோலில் புரட்சியை ஆரம்பித்தார் ஃபுகோகா. சதித் திட்டங்கள் மெல்ல மெல்ல அம்பலமாகத் தொடங்கின. இந்தியா விலும் சுற்றுச்சூழல் இயக்கங்கள் அமெரிக்க எம்.எஸ். சுவாமிநாதன் சதிகளை அம்பலப்படுத்தத் தொடங்கின. வந்தனா சிவா, கிளாட் ஆல்வாரிஸ், ரிச்சார்யா போன்றோர் ஊடகங்களில் இப்போரின் கொடுமை கள் குறித்து விளக்க ஆரம்பித்தனர். தமிழகத்தில் எஸ்.என், நாகராஜன், வைகை குமாரசாமி போன்றோர் மூர்க்கமாக இதை அம்பலப்படுத்த ஆரம்பித்தனர். புளியங்குடி யில் கோமதி நாயகம் விவசாய இயக்கம் இவர்களின் சிந்தனைப் புரட்சிகளை சிறப்பாகச் செயல்படுத்தியது. சிறு பத்திரிக்கைகள், குறுங்குழுக்கள் மத்தியில் வேகமாகப் பரவ ஆரம்பித்தன.

இச்சூழலில்தான் விவசாயத் துறை யில் விஞ்ஞானியாகப் பணிபுரிந்து பூச்சிக்கொல்லியின் கொடுரங்களை உணர்ந்து, புகோகாவின் தத்துவங்களைத் தரிசித்து வேலையை உதறி எம்.எஸ். சுவாமி நாதனுக்கு எதிராகத் தலைமை ஏற்று பெருந்திரள் விவசாய இயக்கமாக மாற்றத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டார் நம்மாழ்வார். அன்றிலிருந்து அவர் இறுதிக்காலம் வரை எந்தக் கூட்டத்திலும் எம்.எஸ். சுவாமிநாதன், சி.சுப்பிரமணியன் களின் பேரை அவர் உச்சரிக்க மறந்ததில்லை. பழந்தமிழ் இலக்கியங்களில் அபாரமான ஞானம், விவசாய வரலாற்றில் நேரடி அனுபவம், மண்ணோடும், சகதி யோடும் கரைந்த விவசாய அறிவு என்று தமிழகத்தையும், உலகையும் வலம் வரத் தொடங்கினார் நம்மாழ்வார். அவரது பயணங்கள் அசாத்தியமானவை. தீவிரவாத இயக்கங்களின் தலைவர்கள் போல இரு இரவுகள் அவர் ஒரே ஊரில் தங்கிய தில்லை. விடாத பேச்சு, பேச்சு, பேச்சு, பேச்சு என்பதே அவர் மூச்சாக இருந்தது. நோயுற்றவர் களும், விவசாயிகளும், இளைஞர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர். பின் தொடர்ந்த படித்த இளைஞர்கள் விவசாயிகளாக மாறினர். அவரது நேரடியான விவசாயச் செயல் முறை விளக்கங்கள் மந்திரத்தன்மை உடையவையாய் வசீகரமாக இருந்தது. சிந்தனையிலும் செயலிலும் சளைக்காத போராளி யாக அவர் இருந்தார். 5000 வருட தமிழக விவசாய அறிவைத் தேடி அவற்றில் மூழ்கித் திளைத்தார். சிறு விவசாயச் செயல்பாடுகளும், கண்டு பிடிப்புகளும் அவரைக் குதூகலிக்கச் செய்தன. சிலந்தி வலைத் தொடர்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினார். சிலந்தி இல்லாமல் விவசாயம் இல்லை!

நான் ஒரு மாத காலம் அவரோடு இரவு பகலாகப் பயணித்திருக்கிறேன். பயணங்களின் கவனக் குறிப்புகளை இங்கு பகிர்கிறேன். தன்னைத் தேடி வந்த இளஞர்களை விவசாயத்தில் ஈடுபடச் செய்தார். வெவ்வேறு ஊர் களில் பன்முகமான விவசாயப் பரிசோதனைகளை மேற்கொண்டார். ஒரு வறட்சியான ஊரை மக்களின் துணையோடு காடாக மாற்றி இருந்தார், வெறும் மரங்கள் நடுவதை மட்டுமே சில ஊர்களில் செய்தார். கால்வாயிலிருந்து மீன்கள் விவசாய நிலத்திற்கு வந்து இரவு முழுவதும் எச்சமிட்டு அதிகாலையில் கால்வாய்க்குத் திரும்பும் முறைகளைச் சில ஊர்களில் ஏற்படுத்தியிருந்தார், கால்நடை களோடு இணைந்த விவசாயப் பண்ணை, தேனீக் களோடு இணைந்த பண்ணை, மண்புழு எரு மட்டுமே கொண்ட பண்ணைகள் என்று ஒவ்வொரு ஊருக்கும் அந்தந்த மண் வகைகளுக்கும் ஏற்றாற்போல் ஒவ்வொரு விவசாய முறை என்றே அவர் பணி இருந்தது. ஒரே விவசாய முறையை எல்லா ஊர்களிலும் திரும்பத் திரும்பச் செய்யும் செயலை அவர் ஒருபோதும் செய்வதில்லை. பெரும்பாலும் நீரில்லாத, விவசாயத்திற்குப் பயன்படாத நிலங்களைத் தேர்தெடுத்து அதனைப் பசுமைப் பூமியாக மாற்றுவதில் அவருக்கு அதிக உற்சாகம் இருந்தது. அவரது உழைப்பாலும் ஆலோசனையாலும் எல்லாமே பசுமையாக மாறியது.

விவசாயத்திற்குப் பிறகு, அவர் பசுமைப் புரட்சியின் கொடுமைகளைப் பற்றி ஊர் ஊராகச் சென்று விளக்குவதில் ஒரு தேர்ந்த நாட்டுப்புறப் பேச்சாளராகவே மாறியிருந்தார். 2000 த்திற்குப் பிறகு பயணம் மட்டுமே அவருடைய வாழ்க்கையாக இருந்தது. நகரங்களில் பசுமைப் புரட்சியின் விளைவுகள், விதைகளைப் பாதுகாப்பது, பன்னாட்டு அரசியல் போன்றவை விரிந்தாலும், கிராமங்களில் நேரடியான கள அனுபவம், செயல்முறை விளக்கங்கள் என்று பேச்சினைக் குறைத்தார். இடதுசாரி சிந்தனை, திராவிட இயக்கங்களின் பேச்சாற்றல், பெரியாரியம், தொல் தமிழ் அறிவு போன்றவை கலந்து கதம்பமாக மிளிர்ந்தன. 1960களில் இவ்வளவு பெரிய கொடூரம் நிறைவேறியது எப்படி என்று இடதுசாரி இயக்கங்களோ, வேறு பல அரசியல் இயக்கங்களோ, தெரிந்து கொள்ளாமல் இருந்தன. மக்களின் வாழ்வையும், இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றிப் போடும் பசுமைப்புரட்சிக்கு இந்தியாவில் எல்லா அரசியல் இயக்கங்களும் எப்படி துணைபோயின என்ற கேள்வியையும் சேர்த்தே எழுப்பினார். அதற்குப் பிறகும் கூட இடதுசாரி இயக்கங்கள், தன்னைத் தனியாக விட்டு விட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயணத்தில் நானும் அவரும் ஒரு பள்ளியில் தங்கியிருந்தோம். இரவு உணவு வழங்கப்பட்டது. சமையல் நன்றாக இருந்தது என்றார். பரிதாபப்படும் நிலையிலிருந்த ஓர் அம்மாளைக் கூட்டி வந்து, ‘இவர்தான் சமைத்தார், இவருடைய கணவர் இறந்து விட்டார்; மிகவும் துயரம்’ என்று ஒருவர் அறிமுகப்படுத்தினார் பரிதாப உணர்வோடு. “அற்புதம்! உன்னைப் பிடித்த கஷ்டம் ஒழிந்தது, விட்டு விடுதலையாகி நிம்மதியாக உன் வாழ்க்கையைத் தொடரு, இனி மேல்தான் உனக்கு விடிவு காலம்” என்றார் அந்த அம்மாவைப் பார்த்து. எல்லோரும் ஒரு கணம் அதிர்ச்சியாகி விட்டனர்; பின்னர் சிரித்தனர், அவர் தான் நம்மாழ்வார்.

நம்மாழ்வாரின் திடீர் மரணம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இப்பொழுது தான் எல்லாம் கூடி வருகிறது. மெதுவாகப் பற்றிப் பரவுகிறது என்று உற்சாகமாக இருந்த காலக்கட்டத்தில் நம்மை எல்லாம் விட்டு மறைந்து விட்டார். எனினும் நம்மாழ்வார் என்பவர் ஒரு சிந்தனை மரபின் தொடர்ச்சி; அம்மரபின் கங்கு அணையாமல் பிறருக்குக் கொண்டு சேர்ப்பதே நாம் அவருக்குச் செலுத்தும் அஞ்சலி ஆகும்.

ஏன் அதனைக் கங்கு என்று குறிப்பிடுகிறேன் என்றால், அது அவிக்கக்கூடியது. ஆனால் பசுமைப் புரட்சியின் சதிகாரர்களை அம்பலப்படுத்தி அவர் கூறியவற்றை எல்லாம் யாரும் மறந்து விடக்கூடாது. அவர்கள் ஒவ்வொருவரையும் மக்கள் மன்றத்தில் நிறுத்த வேண்டும். எந்தப் பூச்சிக்கொல்லிக்காகக் கடன் வாங்கி, அதனால் மனம் உடைந்து அதே பூச்சிக்கொல்லியை அருந்தி, தான் வேலை செய்த மண்ணில் விழுந்து, கைகளால் மண்ணைக் கட்டிக் பிடித்துத் தற்கொலை செய்து கொண்டார்களோ, அந்த விவசாயிகளுக்கு நீதி வேண்டும். அதையே நம்மாழ்வாரின் நெருப்பு என்கிறேன். இந்த நெருப்பை நிறுத்தி விட்டால் நம்மாழ்வார் இல்லை. இந்த அரசியல் நெருப்பை அறியாமல் அவரைப் படிமக் குறியீடாக மாற்றுவதை எதிர்ப்போம். அவர் சாமியாரோ, அன்பானவரோ, ஜக்கி வாசுதேவோ இல்லை?

2012 முதல் நம்மாழ்வாரின் பணி உக்கிரமடைந்தது. பாலாறு அழிவை மக்களுக்குச் செய்தி யாக்கி நீண்ட நடைப்பயணம் மேற்கொண்டார். பனை காக்க நடந்தார், கெயில் கேஸ்க்கு எதிராக விவசாயிகளோடு கை கோர்த்தார், அணு உலைகளை எதிர்த்தார், விவசாயிகளின் வாழ்வைச் சூறையாடும் மீத்தேன் வாயுத் திட்டதை எதிர்த்தார். முதலில் அடையாளமாக உண்ணாவிரதம் இருந்தவர், இது கதைக்கு உதவாது என்று நேரடியாக மக்களைச் சந்தித்து வீர உரையாற்றினார். உக்கிரமான போர் என்றே அதைச் சொல்ல வேண்டும். அவர் இறப்பதற்கு முதல் நாள் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மீத்தேன் வாயுத் திட்டத்தைக் கடுமையாக எதித்துப் பேசினார். இறுதியாக அவரின் செய்தியாக மீத்தேன் வாயுக்காக விவசாய நிலங்களில் போடப்பட்டிருந்த கற்களையும், வேலிக் கற்களையும், பிரித்துப் போட ஆணையிட்டார், விவசாயிகள் அக்கல்லைப் பிடுங்கி வீசினர். இது நம்மாழ்வாரின் செய்தி, அவர் தொடுத்த போர், அந்தப் போரைத் தொடர்ந்து நடத்துவோம், நம்மாழ்வாரை மீண்டும் உயிர்ப்பிப்போம்.

நடுப்படத்தில் :- நம்மாழ்வார் ஆரோவில் பெர்னார்ட் உடன்.. புகைப்படம் உதவி :-பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில்

-ஆர்.ஆர்.சீனிவாசன்

error: Content is protected !!