நடிகர் சங்கம் தேர்தல் முடிந்தது : ஆனா ரிசல்ட் ஜூலை 8ம் தேதிதான் ! – வீடியோ!

ஜஸ்ட் மூவாயிரத்து சொச்சம் உறுப்பினர்கள் கொண்ட நடிகர் சங்க தேர்தல் இன்று நடக்குமா, நடக்காதா என்று நம்மூர் சேனல்கள் அனல் பறக்க விவாதங்கள் நடத்தி சோர்வடைந்த நிலையில் கோர்ட் உத்தரவின் பேரில் திட்டமிட்டபடியே இன்றே வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. ஆனால் இதன் வாக்கு எண்ணிக்கை இன்னும் இரண்டு வாரம் கழித்தே நடக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
ஆனால் தேர்தல் நடக்கும் என்பது கடைசி நேரத்தில் உறுதியானதால் நடிகர், நடிகைகள் சிரமத் திற்கு ஆளாகினார்கள். முன்னதாக ர்தல் நடக்கும் இடம் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் இருந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளிக்கு மாற்றப்பட்டது. இதனால் வாக்களிக்க வருபவர்கள் தேர்தல் நடக்கும் இடத்தை கண்டுபிடிப்பதில் பிரச்சனை ஏற்பட்டது. இருப்பினும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோர் வாக்குப்பதிவு மையத்திற்கு வந்து ஆவலுடன் வாக்களித்துவிட்டு சென்றார்கள். நேற்றைய தினமே தபால் ஒட்டு அனுப்புவதற்கான படிவம் சரியான நேரத்திற்கு வந்து சேராத காரணத்தால் இந்த தேர்தலில் வாக்களிக்க இயலாது என்று மும்பையில் ஆக்ட் கொடுத்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்திருந்தார்.
மேலும் முன்னொருக் காலத்தில் பிரபல நடிகர் மைக் மோகன் வாக்களிக்க பள்ளிக்கு வந்தார். ஆனால் அவர் பெயரில் ஏற்கனவே யாரோ வாக்களித்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதை கேட்ட மோகன், நான் இருக்கும்போது அது எப்படி யாரோ ஒருவர் என் பெயரில் வாக்களிக்க முடியும் என்று கேட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் தனது ஓட்டுரிமைக் காக போராடியும் ஒன்றும் நடக்கவில்லை. இதையடுத்து அவர் கோபம் அடைந்து வாக்குப்பதிவு மையத்தில் இருந்து வெளியேறினார்.
இந்த தேர்தலில் ஏற்கனவே பதவியில் இருந்த விஷாலின் ‘பாண்டவர் அணி’ சார்பில் தலைவர் பதவிக்கு நாசர் பொதுச் செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணைத் தலைவர் பதவிகளுக்கு கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இந்த அணியை எதிர்த்து டைரக்டரும், நடிகருமான கே.பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணி களம் இறங்கியிருக்கிறது. நடிகர் சங்க தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த், துணைத் தலைவர்கள் பதவிக்கு உதயா, குட்டி பத்மினி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
கடந்த முறை நடந்த மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியிலேயே இன்றும் காலை 7 மணிக்கு தொடங்கி விறு விறுப்புடன் நடைபெற்று மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது. மொத்தம் 3171 உள்ள இச்சங்க மெம்பர்களில் 1604 நேரில் வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். 1,100 தபால் வாக்குகளில் சுமார் ஆயிரம் பேர் வரை வாக்களித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றதையடுத்து, சுவாமி சங்கரதாஸ் அணியினர் செய்தியாளர் சந்திப்பின் போது, “எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சிறப்பாக தேர்தலை நடத்த உதவிய காவல்துறைக்கு நன்றி. நடிகர் சங்க தேர்தலில் 1587 பேர் வாக்களித்துள்ளனர். தபால் வாக்குகளில் நிறைய குளறுபடிகள் உள்ளன. நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணியின் பிரவீன் காந்தி குளறுபடி ஏற்படுத்த முயன்றார். 2 வாரத்திற்கு பின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என நீதிமன்றம் கூறியுள்ளது.”என்று அவர்கள் கூறினார்கள்.
நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குப்பெட்டிகளை வங்கி லாக்கரில் வைக்க திட்டம் எனவும் வரும் ஜூலை 8ம் தேதி வாக்கில் வாக்குகள் எண்ணிக்கை நடக்கக் கூடும் என்று தெரிகிறது.