மிஷ்கின் ரொம்ப நல்லவரு – ஏ.வி.எம்.குடும்ப உறுப்பினர் ஆர்யன்ஷாம் ஓப்பன் பேட்டி!

மிஷ்கின் ரொம்ப நல்லவரு – ஏ.வி.எம்.குடும்ப உறுப்பினர் ஆர்யன்ஷாம் ஓப்பன் பேட்டி!

ஏவிஎம் சரவணனின் பேத்தியும், எம்.எஸ்.குகனின் மகளுமான அபர்ணாவின் கணவர் ஆர்யன் ஷாம் கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் ‘அந்தநாள்’. இயக்குநர் வி.வி இயக்கியிருக்கும் இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. அண்மையில் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு, படத்தில் பல காட்சிகளை மாற்றும்படிக் கூறி இருக்கிறது.அப்படிச் செய்தால் படத்தின் கதை சிதைந்து விடும் என்பதால் மேல்முறையீட்டுக்குச் சென்று ஒரு சில காட்சிகளை தெளிவற்றமுறையில் காட்ட ஒப்புக்கொண்டு தணிக்கைச் சான்றிதழ் பெற்றுள்ளனர். அதனால் விரைவில் படம் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் நாயகன் ஆர்யன் ஷாமைச் சந்தித்தோம். படம் குறித்து அவர் கூறியதாவது…

”நரபலியை மையப்படுத்தி அந்தநாள் படத்தை எடுத்திருக்கிறோம். தமிழ்த் திரையுலகம் மட்டுமல்ல, ஹாலிவுட் படங்களில் கூட இதுவரை நரபலியை மையப்படுத்திய படங்கள் வந்ததில்லை. நாங்கள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி காட்சிகளையும் மிரட்டலாகப் படமாக்கியுள்ளோம்.

படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், இந்திய அரசியலமைப்பில் நரபலி என்பதற்கு அனுமதியில்லை என்பதால், உங்கள் படத்திற்கு சான்றிதழ் வழங்க முடியாது என்று மறுத்துவிட்டார்கள். அதனால் தான் ரிவைசிங் கமிட்டியை அணுகினோம். அவர்கள் சில திருத்தங்கள் கூறினார்கள். அவற்றைச் செய்தவுடன் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். இதுவரை தமிழ் இரசிகர்கள் பார்த்திராத ஒரு படமாக ‘அந்தநாள்’ இருக்கும் என்கிறார் நம்பிக்கையுடன்.

அந்தநாள் படம் தவிர பிரம்மாண்ட நாயகன் என்கிற படத்திலும் நாயகனாக நடித்திருக்கிறார் ஆர்யன்ஷாம்.
அப்படத்தில் நடித்தது குறித்து அவரிடம் கேட்ட போது, ”திருப்பதி ஏழுமலையானைப் பற்றிய படம் தான் ‘பிரம்மாண்ட நாயகன்’. அதில் நான் திருப்பதி ஏழுமலையான் வேடத்தில் நடித்திருக்கிறேன். அந்தப் படத்தில் என் நடிப்பையும் தோற்றத்தையும் பார்த்து திருப்பதி தேவஸ்தானம் வெகுவாகப் பாராட்டியது. அவர்கள் எனக்கு அளித்த பாராட்டுக் கடிதத்தில் யூத் சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அது சிலருக்குப் பிடிக்கவில்லை, உடனே என்னை மிரட்டத் தொடங்கிவிட்டார்கள். என்னை மட்டும் அல்ல, திருப்பதி தேவஸ்தானத்தையே தொடர்பு கொண்டு, எப்படி நீங்கள் யூத் சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்கலாம் என்று கேட்கிறார்களாம். அப்படிக் கேட்பவர் பெரிய ஆள் தான். ஆனால் அவர் யார் என்பதைச் சொல்ல விரும்பவில்லை. மொத்தத்தில் நான் சினிமாவில் வந்துவிடக் கூடாது என்று பலர் விரும்புகிறார்கள். ஆனால் என்ன பிரச்சனை வந்தாலும் அனைத்தையும் சமாளித்து திரைத்துறையில் வெற்றி பெறுவேன்” என்றார்.

இவர் மிஷ்கின் இயக்கிய சைக்கோ படத்திலேயே நாயகனாக நடிக்க வேண்டியது.அதற்காக பார்வையற்றோர் போல் நடிக்கப் பல மாதங்கள் ஒத்திகை பார்த்துக் காத்திருந்தார். மிஷ்கின் செய்த குளறுபடியால் அது நடக்காமல் போனது.

அதுபற்றி அவரிடம் கேட்டபோது….”என்னை வைத்து சைக்கோ படத்தை எடுப்பதற்காக இயக்குநர் மிஷ்கினுக்கு ரூ.1 கோடி முன் தொகை கொடுத்தேன். ஆனால், அதில் நான் நடிக்கவில்லை. அதனால், அந்தப் பணத்தைத் திரும்பக் கேட்டேன். அது பற்றி ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்ததோடு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தேன்.

இப்போது அந்தப் பணத்தை இயக்குநர் மிஷ்கின் கொடுத்து விட்டார். அதனால், அவர் மீது தொடர்ந்த வழக்கைத் திரும்பப் பெற்று விட்டேன்.அன்று அவர் பணம் கொடுக்கவில்லை என்பதை ஊடகங்கள் முன்னிலையில் கூறினேன். இப்போது அவர் பணம் கொடுத்துவிட்டதையும் ஊடகங்கள் முன்பு சொல்ல வேண்டும் என்று மிஷ்கின் தரப்பில் கேட்டுக்கொண்டார்கள், அதனால், இந்த இடத்தில் அவர் பணம் கொடுத்ததைப் பதிவு செய்கிறேன்.

இயக்குநர் மிஷ்கினுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, இப்போதும் அவருடன் நான் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். மீண்டும் அவர் படத்தில் நடிக்க ஆர்வமாகவே இருக்கிறேன். அவர் தற்போது ரொம்ப பிசியாக இருப்பதால் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பேசலாம் என்று கூறியிருக்கிறார். அதனால், அவருடன் சேர்ந்து படம் பண்ண வாய்ப்பு வந்தால் நிச்சயம் பண்ணுவேன்” என்றார்.

ஏவிஎம் சரவணனின் பேத்தியின் கணவர், எம்.எஸ்.குகனின் மகளின் கணவர் என்கிற வலிமையான காரணங்கள் இருந்தாலும் அந்தநாள் படத்தை ஏவிஎம் நிறுவனத்தில் பெயரில் வெளியிடவில்லை. படம் நரபலியை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாலும், படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பதாலும் இதுபோன்ற படங்களை ஏவிஎம் நிறுவனத்தின் பெயரில் வெளியிடவேண்டாம் என முடிவு செய்துவிட்டார்களாம்.இதனால் நாயகன் ஆர்யன் ஷாம், தனது சொந்த நிறுவனத்தின் பெயரிலேயே வெளியிடுவதாகக் கூறுகிறார்.

அதோடு, எனது முயற்சிகள் அத்தனையிலும் உறுதுணையாக இருக்கும் மனைவி அபர்ணாவுக்கு நன்றி, நான் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறேன் என்றால் அதற்கு பின்னால் என் மனைவியே இருப்பார் என்றும் நெகிழ்வுடன் கூறுகிறார். நான் முதலில் நடித்திருக்க வேண்டிய சைக்கோ படத்தை விடப் பல மடங்கு சிறப்பான படமாக அந்தநாள் இருக்கும். அதேசம்யம், ‘அந்தநாள்’ படத்தை கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் இதயம் பலவீனமாக இருப்பவர்கள் பார்க்க வேண்டாம். என் முதல் படமாக இருந்தாலும் பொதுநலன் கருதி இதை இங்கே சொல்ல வேண்டும் என்று தோன்றியது என வெளிப்படையாகப் பேசுகிறார்

Related Posts