எழுத்தாளர் இமயத்திற்கு ”இயல் விருது” – முந்திரிக் காடு படக் குழு மகிழ்ச்சி!

எழுத்தாளர் இமயத்திற்கு ”இயல் விருது” – முந்திரிக் காடு படக் குழு மகிழ்ச்சி!

ஏற்கெனவே அக்னி விருது, பெரியார் விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது உள்பட பல விருதுகள் பெற்ற எழுத்தாளர் இமையத்திற்கு கனடாவில் இயங்கி வரும் ”தமிழ் இலக்கியத் தோட்ட அறக்கட்டளை” , ”இயல் விருது” வழங்க இருப்பதாக அறிவித்திருப்பத்தை முந்திரிக்காடு திரைப்படக் குழு பெருமையுடன் வரவேற்கிறது.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் இமையம்,. தற்போது விருத்தாசலத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்துவரும், வெ. அண்ணாமலை என்ற இயற்பெயர் கொண்ட இவர், எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாட்டு கிராமங்களில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களே இவர் கதைகளின் பாத்திரங்கள். அவர்களின் வாழ்க்கை, கலாசாரம், சாதி, வகுப்பு, பால் பேதங் களால் அவர்கள்படும் அவலம் போன்றவற்றை அவர்களின் மொழியிலேயே கதைகளாக வடித்திருக்கிறார். தமிழில் இதற்கு இணையாக நாவல் இல்லை” என்று அவரது முதல் நாவலான “கோவேறுக் கழுதைகள்” நூலை தமிழின் முன்னோடி எழுத்தாளர் திரு. சுந்தர ராமசாமி விமர்சித்திருக்கிறார். இந்நாவல் Beasts of Burden என ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது.

மனிதமனங்களின் பல்வேறுபட்ட மனநிலைகளைத் தன் ஒவ்வொரு புனைவிலும் காத்திரமாகப் பதிவுசெய்துவரும் இமையம், தமிழ்ப் படைப்பாளிகளில் தவிர்க்கமுடியாத ஆளுமையாகவும், சாதி ஆதிக்க மனோபாவத்தைத் தொடர்ந்து விமர்சித்துவரும் ஒருவராகவும் விளங்குகிறார். ‘இலக்கியப் படைப்பு என்பது சமூக விமர்சனம். சமூக இழிவுகளாக இருப்பனவற்றை விமர்சனம் செய்வதுதான் ஒரு நிஜமான கலைஞனின், கலைப்படைப்பின் வேலை. சமூக இழிவுகளைச் சுட்டிக்காட்ட, அடையாளப் படுத்தவே எழுதுகிறேன். நான் சரியாகவும், முழுமையாகவும் சமூக இழிவுகளைப் பதிவுசெய்திருக்கிறேனா என்பதில்தான் என்னுடைய கதைகளுக்கான உயிர் இருக்கிறது. எழுத்தின் அடிப்படையே அதுதான்.’ என எழுத்தைப் பற்றிச் சொல்கிறார் இமையம்.

இமயம் சாதி ஆணவக்கொலையைப் பற்றிய பெத்தவன் என்கிற நெடுங்கதை, இவரின் படைப்பு களில் மிகவும் முக்கியமான ஒன்று. இக்கதை தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டு, திருப்பதி பல்கலைக் கழகப் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.‘கோவேறு கழுதைகள்’, ‘ஆறுமுகம்’, ‘செடல்’, ‘எங்கதெ’, ‘செல்லாத பணம்’ ஆகியவை இவருடைய நாவல்கள். இவை தவிர, நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. ‘அக்னி விருது’, ‘பெரியார் விருது’, ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது’, ‘திருப்பூர் தமிழ்ச்சங்க விருது’ உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்

அந்த வகையில் கனடாவில் இயங்கிவரும் தமிழ் இலக்கியத் தோட்ட அறக்கட்டளை சார்பாக ஆண்டுதோறும் தமிழ் இலக்கியத்தில் சிறப்பாக இயங்கிவரும் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் வகையில், இயல் விருது எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே முன்னரே சொன்ன சாதி ஆணவக்கொலையைப் பற்றிய பெத்தவன் என்கிற நெடுங் கதை, இவரின் படைப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று. அந்த பெத்தவன் நெடுங்கதை தான், இயக்குனர் மு.களஞ்சியம் தயாரிப்பு , இயக்கத்தில், புதுமுகங்களோடு, இயக்குனர் சீமான் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ”முந்திரிக்காடு” திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

ஆகவே, எழுத்தாளர் இமயம் அவர்களுக்கு 2018-ம் ஆண்டுக்கான ”இயல் விருது” அறிவிக்கப் பட்டதில் படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்

error: Content is protected !!