அமெரிக்கா : பனிப் பொழிவின் காரணமாக பலர் பலி!

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 100 வாகனங்கள் மோதிய விபத்தில் 6 பேர் பலியாயினர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் முக்கிய நகரங்கள் முழுவதும் கடும் உறை பனி நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சாலைகள் தடமின்றி பனியால் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் வடக்கு டெக்சாஸ் மாகாணத்தையும், பக்கத்து மாகாணத்தையும் இணைக்கும் 35 போர்ட் வொர்த் என்ற நெடுஞ்சாலை முழுவதும் பனிப்பொழிவால் வழித்தடம் தெரியாமல் இருந்ததால், அதிகாலை 6 மணியளவில் அடுத்தடுத்து கண்டெய்னர்கள், லாரிகள், கார்கள் என 100 வாகனங்கள் ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகின.
இதில் ஒரு சில வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் 75-க்கும் மேற்பட்ட கார்கள் உருக்குலைந்து போயின. 6-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.. 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்பு மீட்புப் படையினர் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்த வாகனங்களை மீட்டனர்