June 9, 2023

சிறுமிகள் திருமணம் – ஜோர்டானில் அதிகரிக்கிறது!

மத்திய கிழக்கு நாடான ஜோர்டானில் ஏராளமான இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். சமீபகாலமாக இங்கு பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இருப்பினும் பலர் புகார் தெரிவிக்க முன்வருவதில்லை. பலாத்காரம் செய்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால், பலாத்காரம் செய்தவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என நாட்டின் சட்டம் கூறுகிறது. இது பெண்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மைனர் பெண்களை பலாத்காரம் செய்பவர்கள், அவர்களையே திருமணம் செய்து கொள்வதாக உறுதியளிக்கின்றனர். அப்படி உறுதியளிப்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. தவறு செய்தவர்களுக்கு உதவும் வகையில் சட்டம் அமைந்துள்ளது. அதே நேரத்தில் இந்த சட்டத்தால் சமுதாயத்தில் பல்வேறு குழப்பங்களையும் ஏற்படுத்து கிறது என பெண்கள் அமைப்பினர் போர்க்கொடி துாக்கியுள்ளனர். இந்த சட்டத்தை மாற்றியமைப்பதற்காக முயற்சிகள் நேற்று பார்லிமென்டில் நடந்தது. அப்போது பார்லிமென்டை பெண்கள் அமைப்பினர் முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக, அவர்களுக்கு மரியாதை செய்யும் சர்ச்சைக்குரிய சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என அவர்கள் கோஷங்கள் எழுப்பியதற்கு எந்த வித ரியாக்‌ஷனுமில்லை.

இந்நிலையில் போர்ச்சூழல் காரணமாக ஜோர்டானில் வசித்து வரும் பெரும்பாலான சிரிய நாட்டைச் சேர்ந்தவர்க ளின் குடும்பங்களில் தங்கள் நிதிச்சுமையைக் குறைக்க குழந்தை திருமணங்கள் செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இளம் பெண்கள் வெளிநாடுகளில் நிறைய பாதிப்புகளை எதிர்கொள்ளவேண்டி வரும் என்பதால் அவர்களது கவுரவத்தை பாதுகாக்கும் ஒரு வழியாகவும் இத்திருமணம் பார்க்கப்படுகிறது.

ஜோர்டானில் இப்படி நடத்தி வைக்கப்படும் குழந்தை திருமணங்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள் முதல் முறையாக நீண்ட சந்தேகத்திற்கிடமான அளவில் அதிகரித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் மட்டும் 13லிருந்து 17க்கு இடைப்பட்ட வயதில் ஜோர்டானில் வசித்துவரும் அனைத்து சிரியப் பெண்களில் கிட்டத்தட்ட 44 சதவீதம் பேர் திருமணம் செய்து கொண்டதாக ஆய்வு தெரிவிக்கிறது. 2010 இல் இது 33 சதவீதமாக இருந்தது.

இளம்பருவத் திருமணம் வறுமையில் கொண்டுபோய்விடும், பெரும்பாலான சிரியப் பெண்கள் கல்வியை இழக்கவும் காரணமாகிவிடும். இது அகதிகளுக்கும் அவர்களை ஏற்றுக்கொண்டுள்ள ஒரு நாட்டுக்கும் ஏற்பட்டுள்ள ஒரு மோசமான போக்கு என்று பல ஆண்டுகளாக நாட்டைவிட்டு வெளியே வாழ விரும்பும் சிரியர்களோடு ஐநா அதிகாரிகள் மற்றும் ஜோர்டானிய அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.