மோடி அரசின் புதுச் சாதனைக்கான திட்டம் தயாராகுது – நியூ பார்லிமெண்ட் ஹவுஸ் வரப் போது!!

இந்திய நாடு சுதந்திரம் பெற்றதற்கு பிறகு முதன் முதலாக, புதிய பாராளுமன்ற கட்டிடம், மத்திய அரசின், தலைமை செயலகம், பிரதமர் இல்லம், பிரதமர் அலுவலகம் போன்ற கட்டிடங்கள் கட்டுவதற்கான, முதல் கட்ட பணிகள் துவங்கப்பட்டிருக்கின்றன. இந்திய பாராளுமன்றத்திற்கான கட்டிட மாதிரி வடிவங்களை, அகமதாபாத்தை சேர்ந்த கட்டிடக் கலை, வடிவமைப்பு நிறுவனம் தயாரித்து வருகின்றது. பாராளுமன்றத்திற்கான கட்டிடத்திற்கு, இடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றது. தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடமானது, இந்திய அரசியலமைப்பின் அருங்காட்சியகமாக மாற்றப்பட இருக்கின்றது. இந்திய பாராளுமன்றத்தின், வடக்கு மற்றும் தெற்கு பிளாக்குகள், 75 ஆண்டு கால இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா திட்டங்களுக்காக, பயன்படுத்தப்பட இருக்கின்றது. தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடம் ஒருபோதும், இடிக்கப்படாது என்றும், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ள நிலையில் இந்த பாராளுமன்றத்தின் தோற்றம் மற்றும் இந்திய பார்லிமெண்ட்- டின் வரலாறு குறித்து ஆன் லைனில் துளாவிக் கொண்டி ருந்த போது ஆதன் தமிழ் யூ ட்யூப் சேனலில் விரிவான தகவல் இடம் பெற்றிருந்தது. அந்த சுவையான விவரங்களை நம் ஆந்தை ரிப்போர்ட்டர் வாசகர்களுக்காக வழங்குகிறோம்.
முன்னதாக கொல்கத்தாவில் இருந்து தலைநகரை புது டெல்லிக்கு வெள்ளையர் அரசு மாற்றியதை தொடர்ந்து இந்த பாராளு மன்ற கட்டிடம் கட்டப்பட்டது. புது டெல்லியை வடிவமைத்த வெள்ளையர் கால பொறியாளர்களான எட்வின் லுட்யென்ஸ், ஹேர்பெர்ட் பெக்கர் ஆகியோரே இக் கட்டிடத்தையும் வடிவமைத்தனர்.வட்ட வடிவிலான இந்த கட்டித்தை கட்டும் பணி 1921 ஆம் ஆண்டு தொடங்கி 1927 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. அன்றைய கால கட்டத்தில் 83 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நாடாளுமன்றத்தை அதே ஆண்டு ஜனவரி மாதம் 18-ஆம் தேதி இந்திய தலைமை ஆளுநரான இர்வின் பிரபு திறந்து வைத்தார். அப்போதைய இந்திய மத்திய சட்டமன்ற அவையின் மூன்றாவது அமர்வு ஜனவரி 19-ஆம் தேதி தொடங்கியது.
இப்போது நம் இந்தியத் திரு நாட்டின் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள 2022ம் ஆண்டுக்குள் நாடாளுமன்றத்திற்கான புதிய கட்டிடத்தை கட்டி முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. நாடாளுமன்ற கட்டிடத்தோடு, அதன் அருகே சுமார் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைத்துள்ள உள்ள பிரதமர், உள்துறை, நிதித்துறை, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட 30 மத்திய அரசு அமைச்சக அலுவலகங்களையும் ஒரே வளாகத்தில் கொண்டுவரும் வகையிலும், மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே நமது பார்லிமென்டைப் பற்றி நமக்குத் தெரியும். நாடாளுமன்றம் என்று இதை தமிழில் சொல்கிறோம். ஒரு விஷயம் தெரியுமா? ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்த பின்னர்தான் மக்களாட்சி என்ற சொல் பெயரளவிலாவதுன் நம்மில் பலருக்கு தெரியத் தொடங்கியது. தற்போதைய நமது பார்லிமென்ட் கிழக்கிந்திய கம்பெனியின் காலத்தில் ‘கவுன்சில் ஆப் கவர்னர் ஜெனரல் ஆப் இந்தியா’ என்றும், அதன் பின்னர் ஆங்கிலேயே மகாராணியார் ஆண்டபோது ‘இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சில்’ என்றும், சுதந்திரத்துக்குப் பின்பு ‘இந்திய அரசியல் நிர்ணய சபை’ என்றும் அழைக்கப்பட்டிருந்தது. குடியரசாக அறிவிக்கப்பட்ட பின் இந்த மன்றத்தை இந்திய அரசியல் சட்டம் ‘பார்லிமென்ட்’ என்றே குறிப்பிடுகிறது.
இதையே பாகிஸ்தான் ‘மஜ்லிஸ் கி ஷீரா’ என்றும், ஜப்பான் ‘டயட்’ என்றும், இங்கிலாந்து பார்லிமென்ட் என்றும், அமெரிக்கா ‘காங்கிரஸ்’ என்றும், சீனா ‘தேசிய மக்களின் காங்கிரஸ்’ என்றும் குறிப்பிடுகிறது.
இந்த சூழ்நிலையில் இந்த பார்லிமென்ட் என்ற சிஸ்டம் எப்படி உருவானது, எப்படி வளர்ந்தது என்று தெரிந்து கொள்வோமா? பழங் கால ரோமானிய சக்கரவர்த்தி ரோமுலஸ், அனுபவம் மிக்க மூத்த குடிமக்கள் 100 பேரை உறுப்பினர்களாக நியமித்து ஒரு செனட் தொடங்கி செனட்டின் அறிவுரைப்படி ஆட்சி செய்தார். இதற்காக ரோம் நகர எல்லைக்குள் ஏதேனும் ஒரு இடத்தில் இந்த செனட் கூடுவார்கள். அவர்கள் கடவுளிடம் வரம் கிடைத்த பின்பு அதிகாலை முதல் நள்ளிரவு வரை கூட்டம் நடத்தினார்கள். இதில் பார்லிமென்ட் என்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை.
ஆனால் கி.மு.509-ல் ரோமானிய குடியரசு நிறுவப்பட்ட பின்பு செனட்டுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. கி.மு. 3-ம் நூற்றாண்டில் செனட் வலிமை வாய்ந்ததாக மாறியது.முதன் முதலில் மக்கள் கூடி தம்முடைய அமைதியான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கைக்காக தாம் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளைத் தமக்குள் வரையறுத்துக்கொண்ட ஒரு இடத்தினைத்தான் நாம் பார்லிமென்ட் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் பார்லிமென்ட் என்ற வார்த்தை எப்போது வழக்குக்கு வந்தது என்று தெரியவில்லை.
அந்த வகையில் பார்த்தால் ஐஸ்லாந்தில் கி.பி.930-ல் வலிமையான தலைவர்கள் ‘பிங்வெளிர்’ என்னும் பகுதியில் இருந்த ‘லோக்பெர்க்’ (சட்டப்பாறை) என்ற பாறைகள் நிறைந்த வெளியில் கூடி சட்டங்களை இயற்றியுள்ளனர். பொதுமக்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டுள்ளனர். இது ஒரு முக்கியமான சமூக நிகழ்வாக நடந்துள்ளது. பல நாட்கள் அங்கேயே தங்கி இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளனர்.
‘சட்டம் உரைப்பவர்’ என்ற பொறுப்பில் உள்ள ஒருவர் தலைமை தாங்கி இக்கூட்டத்தினை நடத்தியுள்ளார். அங்கு வந்துள்ள பொது மக்களிடம் ஏற்கனவே இயற்றப்பட்ட சட்டங்களையும் புதிதாக இயற்றிய சட்டங்களையும், அதனை நடைமுறைப்படுத்துவது பற்றியும் அவர் உரத்த குரலில் பிரகடனப்பத்தி இருக்கிறார். அந்த ஆண்டுக்கு அச்சட்டம் நடைமுறையில் இருக்கும்.
இதைத்தான் அல்திங் (பார்லிமென்ட்) என்று அப்போது குறிப்பிட்டுள்ளனர். தற்போதும் இந்த அல்திங் (பார்லிமென்ட்) தொடர்ந்து நடந்து வருகிறது. இடையில் நாற்பது ஆண்டுகள் ஆட்சிமாற்றங்களின் காரணங்களால் இந்த பார்லிமென்ட் முறை தடைப்பட்டிருந்தது என்று வரலாறு சொல்கிறது.
அதே சமயம் ‘ஐல் ஆப் மேன்’ என்னும் இங்கிலாந்து கடலில் உள்ள ஒரு தீவு நாட்டில் தான் முதல் நாடாளுமன்றம் தோன்றியது என்றும் கூட சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இன்னும் சிலர் வட அட்லாண்டிக்கில் உள்ள பேரோதீவுகளில் வைக்கிங் என்ற பழங்குடிகளால் கி.பி.825-லேயே பார்லிமென்ட் தொடங்கப்பட்டு மக்களாட்சிக்கு வித்திட்டனர் என்றும் சொல்கின்றனர்.
இன்னும் சில வரலாற்றாசிரியர்கள் அமெரிக்காவில் உள்ள நயாகரா நீர் வீழ்ச்சிக்கும் அடிரோண்டார் மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் (தற்போதைய நியூயார்க் மாகாணம்) வாழ்ந்த பழங்குடிகள் ஆறு நாடுகளாக பிரிந்து தம் நாடுகளில் மக்களாட்சியை ஏற்படுத்திக்கொண்டு வாழ்ந்ததாகவும் குறிப்பிடுகின்றனர். இவர்களை ‘நீண்ட வீடுகளைக் கொண்டவர்கள்’ என்று வரலாறு குறிப்பிடுகிறது. இந்நீண்ட வீடுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் அவை கி.பி.1100-ம் ஆண்டுகளில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.
ஐரோப்பியர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு முன்பாகவே சுமார் 800 ஆண்டுகளாக இந்த பழங்குடிகள் கூட்டாட்சி நடத்தியுள்ளார்கள் என்று அறியப்படுகின்றது. ‘கெய்னேரிக்கோவா’ (அமைதிக்கான மாபெரும் சட்டம்) என்னும் சட்டத்தை இயற்றி கடைபிடித்ததாகவும் கூறப்படுகிறது. அச்சட்டப்படி அவர்கள் தமக்குள் ஒருவரை ஒருவர் கொல்லக்கூடாது. மேலும் அவர்கள் தமக்குள் அரசியல் சட்டத்தையும், சொத்துரிமை மற்றும் வணிக வழிகளுக்கான சட்டங்களையும் இயற்றி கடை பிடித்ததாகவும் தெரிகிறது. வேற்றுப் பழங்குடியின தலைவர்களின் இறப்பிலும் கூட என்ன விதமாக தமது அனுதாபங்களை வெளியிட வேண்டும் என்பதற்கான நெறிமுறைகளையும் கடைபிடித்துள்ளனர். கி.பி.1600-ல் இந்த ஆறு பழங்குடியின நாடுகளும் ஒன்று கூடி அவர்களை எதிர்த்த ஐரோப்பியர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளனர். இத்தகைய பார்லிமென்டுகள் அக்காலங்களில் கூட செயல்பட்டுள்ளன. பின்னர் இங்கிலாந்து பார்லிமென்ட் 1216-ல் தொடங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா, நியூசிலாந்து நாடுகளில் பார்லிமென்ட் 18-ம் நூற்றாண்டில் தான் உருவாகியுள்ளது.
ஆனாலும் சர்வதேச அளவில் மிகச்சிறந்த நாடாளுமன்றம் எது என்ற கேள்வி எழுகிறதா? அதர்கு பதில் இதோ :கோதிக் மறு மலர்ச்சியின் போது ஏற்பட்ட கட்டிடக்கலை நுணுக்கங்களையும், சிற்ப வடிவமைப்பில் நிகழ்ந்த அற்புதங்களையும் தெரிந்துகொள்ள இந்த உலகத்தில் மிச்சமிருக்கும் ஒரே சாட்சி ஹங்கேரியின் பாராளுமன்றக் கட்டிடம் மட்டுமே. வருடத்திற்கு சுமார் 7 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்தக் கட்டிடத்தை பார்வையிடுகின்றனர். ஐரோப்பாவின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாக ஹங்கேரி இருப்பதற்கும் இந்தக் கட்டிடம் மிக முக்கிய காரணமாகும். நூற்றாண்டு கால வரலாற்றை சுமந்து பிரம்மாண்டமாய் நிமிர்ந்து நிற்கும் இந்தக் கட்டிடத்தில் 800 க்கும் அதிகமான வேலையாட்கள் பணிபுரிகின்றனர்.
பல அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய இந்தக்கட்டிடத்தை வடிவமைத்தவர் இம்ரே ஸ்டெய்ண் டில் என்னும் புகழ்பெற்ற கட்டட வடிவமைப்பாளர் ஆவார். 1904 ஆம் ஆண்டு இந்தக் கட்டிடம் திறக்கப்படும்போது இம்ரேவின் கண்பார்வை பறிபோயிருந்தது தான் வரலாற்றுச் சோகம்.
1885 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கட்டடத்தின் வேலைகள் 20 வருடங்களுக்கு நீடித்தன. ஹங் கேரி மொழியில் இந்த கட்டிடம் Országház என்று அழைக்கப்படுகிறது. அதற்கு அர்த்தம் நாடாளு மன்றம் என்பதாகும். மன்றம் கூடும் சமயம் தவிர்த்து மற்ற நேரங்களில் பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தக் கட்டிடம் முழுவதும் மொத்தம் 365 கோபுரங்கள் உள்ளன. வருடத்தில் உள்ள எல்லா நாட்களிலும் கட்டிடமானது இயங்கும் என்பதை உணர்த்தவே இவ்வாறு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. உலகின் மிகப்பெரிய நாடாளுமன்றக் கட்டிடங்களின் வரிசையில் மூன்றாம் இடத்தினை இந்தக் கட்டிடம் பெறுகிறது. 18,000 சதுர அடியில் பரந்து விரிந்திருக்கும் இதில் மொத்தம் 691 அறைகள் உள்ளன. இந்தக் கட்டிடத்திற்குள் நுழைவதற்கான வாயில்கள் மட்டுமே 28 இருக்கிறதென்றால் இதன் பிரம்மாண்டத்தை நீங்களே கற்பனை செய்து பாருங்களேன்.
முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரின் போது இந்தக் கட்டிடம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதோடு 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சியிலும் பெரும்பான்மையான பகுதிகள் சிதலமடைந்தன. அதன்பிறகு தான் இந்தக் கட்டிடத்தை அரசாங்கம் புதுப்பித்து கட்டியிருக்கிறது. ஆயிரம் வருட பாரம்பரியம் கொண்ட இந்த கட்டிடத்தைக் காண விதிக்கப்படும் கட்டண முறை சற்றே வித்தியாசமானது. ஐரோப்பிய யூனியனை சேராதவர்களுக்கு 21 டாலரும், ஐரோப்பிய யூனியனில் இருந்து வரும் மக்களுக்கு 8.40 டாலரும் கட்டணமாக விதிக்கப்படுகிறது. மாணவர்களாக இருந்தால் அதுவும் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்தவராக இருந்தால் கட்டணம் 11 டாலர்கள் ஆகும். 4.50 டாலர்கள் வெளிநாட்டு மாணவர்களுக்கு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்.
இப்படியான சூழ்நிலையில்தான் அண்மையில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவும், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவும் நாடாளுமன்றத்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி மாநிலங்களவையில் பேசிய வெங்கய்யா நாயுடு, நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடத்தை கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
இதே போன்று ஆகஸ்டு மாதம் 10-ஆம் தேதி அன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது என்றார். புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக அனைத்து தரப்பினரின் கருத்துகளை அறிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்ற அவர், இப்போது உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை நவீனப்படுத்தவும் வாய்ப்பு உள்ளது என்றார்.
இதை அடுத்தே, நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டிடத்திற்கான மாதிரி வரைபட விண்ணப்பங்களை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் கோரியுள்ளது. அந்த அமைச்சகத்தின் இணையதளத்தில் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்திய நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவது அல்லது இப்போதைய கட்டிடத்தை நவீனப்படுத்துவது, ஒருங்கிணைந்த அமைச்சகம் அமைப்பது என திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த 150 முதல் 200 ஆண்டுகளுக்கு நீடித்திருக்கும் வகையில் இவற்றை கட்ட முடிவு எடுத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான வரைபடங்களை வருகிற, 23 ஆம் தேதிக்குள் கட்டிட கலை நிறுவனங்கள் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகளை நாடாளுமன்ற கட்டிடத்திற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
புதிய கட்டிடம் கட்டுவதாக இருந்தால் அது இப்போதைய கட்டிடத்தை போலவே அமைக்கப்படுமா? அல்லது நவீன கட்டிட பாணியில் அமைக்கப்படுமா என்பது குறித்தும் அரசு இறுதி முடிவு எடுக்கவில்லை என்று கூறியுள்ள அதிகாரிகள், ஆனால் வருகிற 2020 ஆம் ஆண்டின் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் புதிய கட்டிடத்தில் அல்லது நவீனப்படுத்தப்பட்ட கட்டிடத்தில் நடைபெறும் என்பது உறுதி என்று தெரிவித்துள்ளனர்.
ம்.. பார்ப்போம்.. இந்த புது நாடாளுமன்றக் கட்டடம் எந்த சாதனை லிஸ்டில் வரும் என்று பார்ப்போம்.
நன்றி :ஆதன் தமிழ்