மத்திய அரசின் பட்ஜெட் : எது விலை எகிறும்? எவை குறையும்?? முழு விபரம்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று ‘பட்ஜெட் 2020’ தாக்கல் செய்தார். காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 வரை அவர் தனது பட்ஜெட் உரையை வாசித்தார். இதுவரையில் இருந்த நிதியமைச்சர்களில் இவரது பட்ஜெட் உரை இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் நீளமாக அமைந்திருந்தது. அதனால் இரண்டரை மணிநேர தனது நீண்ட உரையை அவர் வாசித்து முடிக்க இன்னும் இரண்டு பக்கங்களே இருந்தநிலையில், அவருக்கு தொண்டை அடைப்புடன் மயக்கம் வரும் நிலை ஏற்பட்டது. நின்றபடியே பட்ஜெட் வாசிக்க முயன்ற நிதியமைச்சர் சற்றே, அசவுகரியமாக தோன்றிய நிலையில் வியர்த்தது. இதனால் சக அமைச்சர் கள் தங்கள் கைவசம் வைத்திருந்த சில மிட்டாய்களை அவரிடம் வழங்கினர். அதை அவர் உட்கொண்ட பிறகும் அவருக்கு அயற்சி குறையவில்லை. இதையடுத்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தனது உரையின் மீதமுள்ள பகுதியை வாசித்ததாகக் கருதிக்கொள்ளும்படி (நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு உட்பட்டவாறு) தெரிவித்துவிட்டு பேச்சை முடித்துக் கொண்டார்.
திட்டமிட்டப்படி மக்களவையில் 2020-21ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இவர் தாக்கல் செய்யும் இரண்டாவது பட்ஜெட் இதுவாகும்!
பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பு 15வது நிதிக்கமிட்டியின் அறிக்கையை நிர்மலா தாக்கல் செய்தார்
நாட்டின் பொருளாதார கட்டமைப்புகள் வலுவானதாகவே உள்ளன; மக்களின் வாங்கும் திறனையும், நிதி நிலையையும் மேம்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் என நிர்மலா சீதாராமன் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதாரத்தை ஒருங்கிணைக்கும் வகையில் ஜி.எஸ்.டி வரி முறை செயல் படுத்தப் பட்டுள்ளது. 2020 முதல் எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி அமலாகும்.
பட்ஜெட் உரையின் போது ’பூமி திருத்தி உண்’என்ற ஒளவையாரின் ஆத்திச்சூடி வரியை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்
பட்ஜெட் 3 முக்கிய அம்சங்களைக் கொண்டது
1. இந்தியாவின் வளர்ச்சி லட்சியங்கள்
2. பொருளாதார வளர்ச்சி
3. சமூகத்துக்கான பங்களிப்பு
வருமான வரி வீதம் குறைப்பு
ரூ 5 லட்சம் வரை உள்ள வருமானத்திற்கு வரி இல்லை. ஏற்கனவே இந்த வரம்பு 2.5 லட்சமாக இருந்தது. அதை 5 லட்சமாக அரசு நடப்பு ஆண்டில் உயர்த்தியுள்ளது.
ரூ. 5 லட்சம் முதல் ரூ. 7.5 லட்சம் வரை வருமானம் இருந்தால் வருமான வரி 20 சதவிகிதத்திலிருந்து 10சதவீதமாக குறைப்பு
ரூ. 7.5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை வருமானம் இருந்தால் வருமான வரி 20 சதவிகிதத்திலிருந்து 15 சதவீதமாக குறைப்பு
ரூ. 10 லட்சம் முதல் ரூ. 12.5 லட்சம் வரை வருமானம் இருந்தால் வருமான வரி 30 சதவிகிதத்திலிருந்து 20 சதவீதமாக குறைப்பு
ரூ. 20 லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தால் வருமான வரி 30 சதவீதம் செலுத்த வேண்டும். இதில் மாற்றம் இல்லை
70 விதமான வரி விலக்குகள், வரிச் சலுகைகள் ரத்து செய்யப்படுகின்றன
ஆண்டுக்கு ரூ. 100 கோடி வரை விற்று-வரவு உள்ளவர்களுக்கு லாபத்தில் 100 சதவீதத்திற்கு வரி விலக்கு என நிர்மலா பட்ஜெட் உரையில் கூறினார்.
ரூ. 5 கோடி வரை வர்த்தகம் செய்யும் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு தணிக்கை இல்லை.
ஆண்டு வருவாய் அடிப்படையில் ஐந்துவித அடுக்குகள் கொண்ட புதிய வருமானவரி நடைமுறை வரி விகிதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்றுமதியாளர்களுக்கு டிஜிட்டல் முறை
ஏற்றுமதியாளர் செலுத்திய பல்வேறு வரிகள் மற்றும் தீர்வை மத்திய அரசு திரும்ப வழங்கும் திட்டம் நடப்பு ஆண்டில் துவங்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
ஏற்றுமதியாளர்கள் செலுத்திய வரிகள், தீர்வைகள் டிஜிட்டல் முறையில் திருப்பிச் செலுத்தப்படும்
மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி நிறுவனங்கள் செலுத்திய வரிகளும் திருப்பித் தரப்படும்.
வாட் வரியும், மின்சாரத் தீர்வைகள், வாகனங்களுக்கான எரிபொருள் செலவும் திருப்பித் தரப்படும்.
நடப்பு ஆண்டில் இருந்து இந்தத் திட்டம் அமலாகும் என நிர்மலா அறிவித்தார்.
இந்தியாவில் இருந்து வர்த்தக பொருள்களை ஏற்றுமதி செய்வோருக்கு வரித் தீர்வைகளை திரும்ப டிஜிட்டல் முறையில் வழங்கும் திட்டம் பெரிதும் உதவியாக அமையும் என்று கூறப்படுகிறது.
நிதிப்பற்றாக்குறை 3.5 சதவீதமாக உயரும் என கணிப்பு. இதன் மூலம் நிதிப்பற்றாக் குறைக்கான வரம்பை வரவு செலவு திட்டத்தில் நிதியமைச்சர் மீறுகிறார் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
எல்ஐசி நிறுவனத்தின் அரசின் முதலீட்டின் ஒரு பகுதியை விளக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு
பொதுத்துறை பங்குகள் விற்பனை மூலம் 2.1 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்படும்.
மத்திய அரசிடம் உள்ள ஐடிபிஐ வங்கியின் பங்குகள் விற்பனை செய்யப்படும்
பாரத் நெட் திட்டத்திற்கு ரூ 6000 கோடி ஒதுக்கீடு.
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
வங்கிகள்
வங்கி வாடிக்கையாளர் ரூ 5 லட்சம் வரையிலான சேமிப்பு தொகைக்கு காப்பீடு அறிவிப்பு
முன்பு ரூ 1 லட்சமாக காப்பீடு தொகை வரம்பு இருந்தது.
வங்கிகள் திவால் ஆனால் வைப்பு தொகையில் குறைந்த பட்சமாக 5 லட்சம் மட்டுமே கிடைக்கும்.
ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ. 30,757 கோடியும்
லடாக் பகுதிக்கு 5958 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படும்
சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கு மத்திய பட்ஜெட்டில் 2,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு
தமிழ்நாடு – ஆதிச்சநல்லூரில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு திட்டம்
மத்திய அரசின் தொடக்க நிலை பணிக்கு ஊழியர் தேர்வு செய்ய தேசிய பணியாளர் தேர்வு முகமை அமைக்கப்படும்.
நாடு முழுமைக்கும் ஒரே தேர்வில் அடிப்படையில் ஊழியர் தேர்வு செய்யப்படுவர்
ஆன்லைன் தேர்வு முறையில் ஊழியர்கள் தேர்வு என நிர்மலா அறிவிப்பு
சுற்றுச் சூழல் மாசு அதிகம் ஏற்படுத்தும் அனல் மின் நிலையங்கள் மூடப்படும்
தனியார்துறை ஒத்துழைப்புடன் இந்தியாவில் “டேட்டா பார்க்குகள்” அமைக்க கொள்கை வெளியிட மத்திய அரசு முடிவு
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து. – குறள் 738
அரசின் 5 அணிகலன்களாக திருக்குறளை மேற்கோள் காட்டி, ஆயுஷ்மான் திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்தார் என நிதியமைச்சர் பட்ஜெட்டில் உரை.
ஜல் ஜீவன் திட்டத்திற்கு 11,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
தூய்மை இந்தியா திட்டத்திற்கு 12,300 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
போக்குவரத்துத் துறை
சென்னை – பெங்களூரு இடையே வர்த்தக வழித்தடம் அமைக்கப்படும்
2024க்குள் நாடு முழுவதும் மேலும் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்.
மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு ரூ. 22,00 கோடி ஒதுக்கீடு
புதிய தேஜஸ் ரயில்கள் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்க முடிவு
27,000 கி.மீ. ரயில்பாதை மின் இணைப்பு பெறும்
விமான போக்குவரத்து துறை மூலமாக கிருஷி உடான் எனும் திட்டம் அமல்படுத்தப்படும்
தொழில்துறை
மொபைல் போன் மற்றும் மின்னணு கருவிகள் உற்பத்தி ஊக்குவிக்கப்படும்.
தொழில்முனைவோர்தான் இந்தியாவின் மிகப்பெரிய பலம், அவர்களுக்கு புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்.
தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டுக்கு ரூ. 27,300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
முதலீட்டு அனுமதிக்கென ஒற்றைச் சாளர கமிட்டி அமைக்கப்படும்.
கல்வித்துறை
புதிய கல்விக்கொள்கை விரைவில் அறிவிக்கப்படும்
கல்வித்துறைக்கு 99,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
தேசிய தரப்பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் இருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு இணையதள கல்வித் திட்டத்திற்கு அனுமதி
மாவட்டந்தோறும் தனியாருடன் இணைந்து மருத்துவக் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
தேசிய போலீஸ் பல்கலைக்கழகம் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்
உள்ளாட்சி நிறுவனங்களில் பொறியாளர்களுக்கு செயல்பயிற்சி வழங்கும் வகையில் புதிய கல்வித் திட்ட விதிகள் அமைக்கப்படும்
சுகாதாரத்துறை
சுகாதாரத்துறைக்கு மத்திய பட்ஜெட்டில் 69 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
தனியார் பங்களிப்புடன் மருத்துவக் கல்லூரிகள் மாவட்ட மருத்துவமனைகளுடன் இணைக்கப்படும்.
2025ஆம் ஆண்டுக்குள் காசநோயை நாட்டில் இருந்து முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் புதிய மருத்துவமனைகள் அமைக்கப்படும்.
சுகாதாரத்துறை ஊழியர் திறன்கள் மேம்பட புதிய பிரிட்ஜ் கோர்ஸ் திட்டம் செயல்படுத்தப்படும்.
மாணவர்கள் இந்தியாவிலேயே கல்வி பயிலும் வகையில் ஊக்கப்படுத்தப்படுவார்கள்.
ஆசிய மற்றும் ஆப்ரிக்க மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில SAT தேர்வு அறிமுகம் செய்யப்படும்.
அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களின் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை.
வேளாண்மை துறை
விவசாயத்துறையின் வளர்ச்சிக்கு 16 அம்சத் திட்டம் செயல்படுத்தப்படும்.
கிராமங்கள்தோறும் விவசாய சேமிப்பு கிடங்குகள் நிறுவப்படும்.
கிராமப்புற பெண்களின் வளர்ச்சிக்காக தானியலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும்.
பால். பழங்கள், காய்கறிகளுக்கென தனி கிஸான் ரயில் இயக்கப்படும்.
சூரிய மின்சாரம் உற்பத்திக்கு 20 லட்சம் விவசாயிகளுக்கு நிதிஉதவி அளிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயம்.
விவசாயத்துறைக்கு 2.83 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டில் 108 மில்லியன் மெட்ரிக் டன் பால் உறுபத்திக்கு இலக்கு நிர்ணம்.
தோட்டக்கலையில் ஏற்றுமதிக்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவும்.
மாநில அரசுகள் ஒரு மாவட்டத்திற்கு ஒரு ஏற்றுமதிப் பொருளுக்கு உதவி வழங்க நிபந்தனை.
மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு காப்புறுதி திட்டத்தை கால்நடைத் தீவன பண்ணைகளோடு இணைக்க முடிவு.
தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தப்படும்.
அனைத்து வகையான உரங்களையும் சமமாக பயன்படுத்தும் வகையில் திட்டம்.
கிருஷி உடான் திட்டம் மூலமாக வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஊக்கப்படுத்தப்படும்
நபார்டு மூலமான மறு நிதி உதவித் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
விவசாயிகளுக்கு கிசான் கிரடிட் கார்ட் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
அதெல்லாம் சரி ‘இந்த பட்ஜெட்டால் எவை விலை உயரும்? எவை விலை குறையும்?’ என்று மட்டும் அறிய விருப்பமா?.
விலை உயர்வுக்கு உள்ளாகும் பொருட்கள்
. பாலில் எடுக்கப்படும் பவுடர், கோதுமை, பதப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கு, சோளம், சுகர் பீட் விதைகள்.
* வெண்ணெய், நெய், சமையல் எண்ணெய்கள், வேர்க்கடலை
* மக்காச்சோளம், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, விதைகள், பாதுகாக்கப்பட்ட உருளைக்கிழங்கு
* சூயிங்கம், டயட் சோயா ஃபைபர், தனிமைப்படுத்தப்பட்ட சோயா புரதம்
* அக்ரூட் பருப்புகள்
* பாதணிகள், ஷேவர்கள், ஹேர் கிளிப்பர்கள், முடி அகற்றும் உபகரணங்கள்
* மேஜைப் பாத்திரங்கள், சமையலறைப் பொருட்கள், நீர் வடிகட்டிகள், கண்ணாடி பொருட்கள்
* பீங்கான்
* மாணிக்கங்கள், மரகதங்கள், ரத்தினக் கற்கள்
* சீப்பு, ஹேர்பின்ஸ், கர்லிங் பின்ஸ், ஹேர் கலர்ஸ்
* டேபிள் ஃபேன் , சீலிங் ஃபேன்
* வாட்டர் ஹீட்டர்கள்
* ஹேர் ட்ரையர்கள், கை உலர்த்தும் கருவி
* கிரைண்டர்கள், அடுப்புகள், குக்கர்கள், சமையல் தட்டுகள்
* காபி மற்றும் தேநீர்
* பூச்சிகளை விரட்டுவதற்கான சாதனங்கள், கொசு விரட்டும் சாதனங்கள்
* விளக்குகள்
* பொம்மைகள், பேனா, பென்சில், செயற்கை பூக்கள், மணிகள், சிலைகள், கோப்பைகள்
* மொபைல்போன்களின் அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டு அசெம்பிளி (பிசிபிஏ), டிஸ்ப்ளே பேனல் மற்றும் டச் அசெம்பிளி. இதனால் செல்போன்களின் விலை உயரும்
* சிகரெட், சூயிங் புகையிலை, ஜர்தா வாசனை கொண்ட புகையிலை ஆகியவற்றின் கலால் வரியை உயர்த்த அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
விலை குறையும் பொருட்கள்
* பத்திரிகைகளுக்கு அடிப்படையான நியூஸ் பிரின்ட்
* விளையாட்டு உபகரணங்கள்
* மைக்ரோபோன்
* மின்சார வாகனங்கள்