மு.க.ஸ்டாலின் “திராவிட இனத்தைச் சேர்ந்தவன்” என்று சொல்லியிருப்பது பெருமிதம்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘Chief Minister of Tamilnadu l President of the DMK l Belongs to the Dravidian Stock’ என முகப்பு வைத்திருப்பதை விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ கம்பெனி சுறுசுறுப்பாக இதில் வேலை செய்கிறது.
இந்தியாவின் தேசிய கீதம், இந்தியாவின் பெருமைமிகு தேசிய இனங்களில் ஒன்றான வங்காளி மொழியில் எழுதப் பட்டது. எழுதியவர் உலகப் புகழ் பெற்ற மகா கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் ஆவார். தேசிய கீதத்தில் அவர் பட்டியலிடுகிறார்: “பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா #திராவிட உத்கல வங்கா” ரவீந்திரநாத் தாகூர், தந்தை பெரியாரின் சீடரோ, தி.மு.க.காரரோ அல்ல. தமிழ்த் தாய் வாழ்த்து எழுதியவர் மனோன்மணியம் சுந்தரனார் அவர்கள். அவர் இந்தப் பாடலை எழுதியபோது பின்னாளில் தமிழ்த் தாய் வாழ்த்தாக இது பாடப்படும் என்று அறிந்திருக்க மாட்டார். தமிழைப் பற்றி அதில் அவர் கூறுகிறார்:
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரத கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த #திராவிட நல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே
-உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
கடல் சூழ்ந்த இந்தியாவின் தென் பகுதியில் சிறந்து விளங்கும் திராவிட நல் திருநாட்டின் நெற்றிப்பொட்டு போல மணம் வீசும் தமிழ் என்பது சுருக்கமாக இதன் பொருள். சுந்தரனாரும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவரோ அல்லது திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவரோ அல்ல.
“ஆரியம்போல் வழக்கொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து” என்பதுதான் சுந்தரனாரின் மூலச் செய்யுள். தமிழ்த் தாயை வாழ்த்தும்போது, இன்னொரு மொழியை வசை பாட வேண்டிய அவசியமில்லை என்று அந்த மூன்று சொற்களை நீக்கி விட்டார்கள்.
இங்கு நிகழ்ந்து கொண்டிருப்பது ஆரியப் பண்பாட்டிற்கும், திராவிடப் பண்பாட்டுக்கும் இடையிலான மோதல்தான். எண்ணற்ற ஆண்டுகளாக இது நீடிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி போன்ற வடபுலத்து மதவெறி சக்திகள் தலையெடுத்து ஓங்கும் இச்சூழலில் இந்த மோதல் பல ஆண்டு காலம் நீடிக்கும் என்றே தோன்றுகிறது.
திராவிடம் என்பது ஒரு இனம். எழுத்து வழியிலோ, குரல் மூலமாகவோ தகவல் தொடர்பு இல்லாத காலத்தில், பல வட்டாரங்களில் பேசப்பட்ட தமிழ்தான் திரிந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு என வடிவம் எடுத்தது செய்தித் தாள், திரைப்படங்கள், வானொலி ஆகியவை தமிழை ஒருங்கிணைத்திராவிட்டால், நெல்லைத் தமிழும் கொங்குத் தமிழும் சென்னைத் தமிழும் கூட திரிந்து வெவ்வேறு அடையாளங்களோடு தனித்தனி மொழிகளாக ஆகியிருக்கக் கூடும். திராவிட நிலத்துக்குள் நேர்வது உறவு முரண். ஆரியத்தோடு ஏற்படுவது பகை முரண். காரைக்குடியில் இருந்து தண்ணீரைத் திருப்பத்தூருக்குக் கொடுக்கக் கூடாது என்றுகூட போராட்டம் நடைபெற்று இருக்கிறது. அதற்காகவே காரைக்குடிக்கு திருப்பத்தூர் பகை நிலம் ஆகிவிட முடியாது.
“தமிழர்கள் எமது அண்டை மாநிலத்தவர் அல்ல, உடன் பிறந்தவர்கள்” என்று கேரள முதலமைச்சர் கூறுகிறார். கர்நாடகத்தில் தமது மாநிலத்துக்குத் தனிக்கொடி என்று துவங்கி, தமிழகம் முன் வைத்த மாநில சுயாட்சிக்குப் புது உரு கொடுத்து இருக்கிறார்கள். வங்கத்தின் மகளை, வடபுலத்து அன்னியர்கள் சாய்ப்பதற்குத் துணை நிற்க மாட்டோம் என்று மேற்கு வங்கம் முரசறைந்து கூறியிருக்கிறது.
ஒரு பக்கம் தனது நரித் தந்திரச் சூழ்ச்சிகளால் ஆர்.எஸ்.எஸ் முன்னேறும் நேரத்தில், மாநில சுயாட்சி உணர்வு முறைமை, அதனைத் தடுக்க முனைந்து எழுந்து நிற்பது மிகவும் வரவேற்கத்தக்க அடையாளமாகும். தமிழக முதல்வர் தனது சுட்டுரை முகப்பில் “நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்” என்று சொல்லியிருப்பது போற்றிப் பாராட்டி வரவேற்க வேண்டியதாகும்.