மோடி அரசு -காடுகள் பாதுகாப்புச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யுதுங்கோ!
காடுகள் பாதுகாப்புச் சட்டம் 1980-ந் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள காடுகளில் சூழல் சுற்றுலாக்களை ஊக்குவிக்க Handbook of Forest (Conservation) Act, 1980ல் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
கடந்த அக்டோபர் 2ஆம் தேதி ஒன்றிய அரசின் வனத்துறை காடுகள் பாதுகாப்புச் சட்டம் 1980 இல் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் அடங்கிய ஆவணமொன்றை (Consultation Paper on proposed amendments in the Forest(Conservation) Act,1980 )பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதற்காக வெளியிட்டது. இந்த ஆவணம் மீது கருத்து தெரிவிப்பதற்காக தொடக்கத்தில் 15 நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் கூடுதலாக 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், கால அவகாசம் முடிவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பாகத்தான் தமிழ் உள்ளிட்ட சில மொழிகளில் இந்த ஆவணம் வெளியிடப்பட்டது. இந்த ஆவணத்தில் 14 திருத்தங்கள் குறித்து பேசப்பட்டு இருந்ததில் காடுகளில் வன உயிரியல் பூங்காக்கள், சூழல் உலாக்கள் போன்றவற்றை மேற்கொள்வது காடு பாதுகாப்பு சார்ந்த திட்டங்களாக கருதப்பட வேண்டும் என்கிற திருத்தமும் இடம் பெற்றிருந்தது.
இத்திருத்தம் இந்தியா முழுவதுமே பல்வேறு சூழல் ஆர்வலர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. காடுகள் பாதுகாப்புச் சட்டத் திருத்த ஆவணம் பற்றி கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் முடிவதற்கு ஆறு நாட்கள் முன்பாக, அதாவது அக்டோபர் 6ஆம் தேதி ஒன்றிய அரசின் வனத்துறை கடிதம் ஒன்றின் வாயிலாக “Handbook of Forest (Conservation) Act,1980ல் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கான உத்தரவினை மாநில அரசுகளுக்கு வழங்கியது.
அக்கடிதத்தில் காடுகள் பாதுகாப்புச் சட்டக் கையேட்டின் பத்தி 11.10ஐ கீழ்க்கண்டவாறு படிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. “Development/construction of facilities which are not of permanent nature, in forest areas for the purpose of ecotourism by Government authorities shall not be considered as non-forestry activity for the purpose of Forest (Conservation) Act, 1980.” அதாவது சூழல் சுற்றுலாக்காக காடுகளில் எழுப்பப்படும் தற்காலிக கட்டுமானங்களை காடுகள் சார்ந்த திட்டமாகக் கருதலாம் என்பதே இதன் அர்த்தமாகும். இப்படியான விலக்கு அளிக்கப்படுவதால் Forest (Conservation) Act,1980கீழ் தற்காலிகக் கட்டுமானங்களுக்கு எவ்வித முன் அனுமதியினையும் பெற வேண்டாம்.
இத்திருத்தத்தின் விளைவுகள் ஒரு பக்கம் இருந்தாலும் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் எந்தவொரு பிரிவின் கீழும் கடிதம் வாயிலாக சட்டத்தின் அதிகாரங்களை ஒன்றிய அரசு மாற்றியமைக்க முடியாது என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அண்மையில் சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை, கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கை உள்ளிட்ட பல்வேறு சட்ட விதிகளை கடிதங்கள் வாயிலாக திருத்தும் நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. இது முற்றிலும் ஜனநாயக விரோத செயலாகும். சட்டமியற்றுதலில் பொதுமக்கள் பங்கேற்பு என்கிற முக்கிய அம்சத்தை இல்லாமல் செய்து விடுகிறது.
தற்போது இத்திருத்தத்தின் விளைவுகளைப் பார்க்கலாம். பொதுவாக ’Eco Tourism’ எனப்படும் சூழல் சுற்றுலாக்கள் காடு மற்றும் காட்டுயிர் சார்ந்த அறிவை நேரில் கண்டு உணர்ந்து பெறுவதற்காக என்று கூறப்படுகிறது. ஆனால், இந்தக் கருத்தாக்கமே தவறு என்கிறார் வழக்கறிஞர் சுந்தர்ராஜன். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் “ காட்டுப்பகுதி என்பது மிகப்பெரும்பாலான மக்களுக்கு புரியாத சிக்கலான தகவமைப்பினை கொண்டது. பல்லாண்டு காலம் காட்டில் வாழ்பவர்களால் மட்டுமே காடு குறித்த அறிவைப் பெற முடியும். இந்நிலையில் காடுகள் குறித்த அனுபவத்தை பெறுவது என்ற கருத்தாக்கம் அடிப்படையிலேயே தவறானது. அதற்கு அரசே ஊக்குவிப்பது அரசு அமைப்புகளின் புரிதலின்மையை காட்டும் நடவடிக்கையே” என்கிறார்.
சரி, உல்லாச/கேளிக்கை விடுதிகளை காட்டுப் பகுதியில் கட்டினால்தானே பிரச்சனை எழும், தற்காலிக கட்டுமானங்கள் எழுப்புவதால் என்ன பிரச்சனை வந்துவிடும் என சந்தேகம் எழலாம். இதுகுறித்து The Morning Text செய்தித் தளத்திற்கு கருத்து தெரிவித்துள்ள சுற்றுச்சூழல் வழக்கறிஞர் ரித்விக் தத்தா ரிஷிகேஷில் நடந்த ஒரு பிரச்சனையைப் பகிர்ந்துள்ளார் “ ரிஷிகேசில் படகு சவாரி செய்வதற்காக ஆற்றங்கரையோரம் தற்காலிகக் குடில்கள் அமைக்கப்பட்டன. அந்தக் குடில்கள் ஆண்டில் 8 மாதங்கள் வரை பயன்படுத்தப்பட்டன. இதன் பாதிப்புகள் குறித்து Wildlife Institute India ஆராய்ந்த போதுதான் உண்மையான பிரச்சனை வெளியில் வந்தது. தற்காலிகக் குடில்கள் அமைக்கப்பட்ட 8 மாதமும் ஆற்றங்கரைப் பகுதிக்கு எந்த விலங்கும் தண்ணீர் அருந்த வரவில்லை. இது அக்காட்டுயிர்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய பிரச்சனை” என்கிறார் தத்தா.
சூழல் சுற்றுலாக்களை ஊக்குவித்தால் காட்டுப்பகுதிக்குள் புதிய கட்டுமானங்களை எழுப்ப வேண்டியது வரும். குடிநீர், மின்சாரம், கழிப்பறை போன்ற வசதிகள் உருவாக்க வேண்டும் இவையனைத்துமே காட்டுயிர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி அவை தங்கள் வாழ்விடத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும் என்கிறார் ’ஓசை’ அமைப்பைச் சேர்ந்த காளிதாசன். அவர் மேலும் கூறியதாவது “நான் மலையேற்றம் செல்கிறேன் என்றால் அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், காட்டிற்கு அதனால் எந்த பயனும் இல்லை. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் முறையற்ற மலையேற்றம் காடுகளுக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் எடுத்துக்காட்டாக நாம் போடும் குப்பைகள் நாம் நடந்து செல்லும் ஓசைகள் போன்றவை காட்டுயிர்களை அச்சுறுத்தும். ஆகவே eco-tourism என்பதை ஒரு வகையில் காட்டுயிர்களை கற்றுத்தரும் பாடமாக எடுத்துக் கொண்டாலும் அதை நாம் எல்லா இடங்களிலும் செய்யக்கூடாது. காடுகளைப் பற்றி ஒரு கல்வியைத் தான் நாம் தருகிறோமே தவிர இது காடு சார்ந்த பணிகளில் சேராது. இதை எந்த அனுமதியும் கட்டுப்பாடும் இல்லாமல் அனுமதிப்பது மிகவும் தவறான செயலாகும் “ என்கிறார்.
ஒன்றிய அரசின் காடுகள் வழிகாட்டுதல் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே இந்த திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக வனத்துறை தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெற்ற காடுகள் வழிகாட்டுதல் குழுவின் கூட்டத்தில் “சூழல் சுற்றுலாவைப் பொருத்தமட்டில் நிரந்தரமான கட்டுமானங்கள் எவை என்பதில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. காடுகளில் சூழல் சுற்றுலாவை ஒழுங்குபடுத்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்கி வருகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
சூழல் சுற்றுலா என்பதன் முழுமையான வரையறையே இன்னும் முடிவாகாத நிலையில் ஒரு கடிதம் வாயிலாக காடுகள் பாதுகாப்புச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.
இந்த விவகாரம் குறித்து The Morning Text தளத்தில் சுற்றுச்சூழல் செய்தியாளர் அக்ஷய் எழுதிய கட்டுரையைப் படிக்க: https://themorningcontext.com/chaos/how-forest-conservation-law-got-the-short-shrift-in-ecotourism-push