மிக மிக அவசரம் – விமர்சனம்!

மிக மிக அவசரம் – விமர்சனம்!

ஒரு சினிமா என்பது சமூகத்திற்கு ஏதாவதொரு நல்லதொரு மெசெஜை கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் அறுந்து போன ரீலாகி பல காலமாச்சு. ஆனால் இப்போ ரிலீஸ் ஆகியுள்ள மிக மிக அவசரம் என்றொரு படத்தின் மூலம் போலீஸ் அதிகார வர்க்கத்தின் குரூர போக்கு + நட்புணர்வை வெளிக்காட்டுவதுடன் பெண் போலீசின் அதுவும் கொஞ்சம் அழகான லேடி கான்ஸ்டபிள்களின் அவஸ்தையை சகலருக்கும் புரியும்படியும் எக்ஸ்ட்ராவா ஒரு ஹெல்த் அலெர்-டையும் செய்து இருக்கிறார் புது இயக்குநர் சுரேஷ் காமாட்சி.

ஆமாமுங்க.. இந்தப் படத்தின் விமர்சனத்துக்குள் போகும் முன் ஒரு விஷயம்: நம் இதயத்தைப் போலவே ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கும் உறுப்பு, சிறுநீரகம். இது இயங்குவதை நிறுத்தி விட்டால் அவ்வளவுதான். உடலில் உள்ள கெட்ட நீரை மட்டுமல்ல, தேவைக்கு அதிகமான உப்பு, பல்வேறு நச்சுக்கள், அவசியமற்ற மருந்துக்கூறுகள் போன்றவற்றை வெளியேற்றுவதும் சிறு நீரகங்கள்தான். சிறுநீரகத்தை அதிகம் தாக்கும் பிரச்னைகளில் முக்கியமானது, சிறுநீரை அவசியமானபோதும் வெளியேற்றாமல் இருப்பதுதான். வெளியிடங்களில் சிறுநீர் கழிக்க வசதியில்லாமல் இருப்பது அல்லது கூச்சப்பட்டுக்கொண்டு போகாமல் இருப்பது ஆபத்தானது. சிறுநீர்ப்பை நிரம்பியிருக்கும்போது, கட்டாயமாக சிறுநீரை வெளியேற்றிவிட வேண்டும். வெகுநேரமாக சிறுநீர் போகாமல் அடக்கி வைத்திருந்தால், அடிவயிற்றில் கடுமையான வலி உண்டாகும். இது அடிக்கடி தொடர்ந்தால், சிறுநீர்ப்பையில் நோய்த்தொற்றுகள் உண்டாகி, சிறுநீரகத்தையே செயலிழக் கவைத்துவிடும்.

அதுமட்டுமின்றி சிறுநீரை அடக்கி வைத்திருப்பதால், மன ரீதியான சிக்கல்களும் உருவாகின்றன. அதாவது, சிறுநீரை வெளியேறும்வரை வேறு எந்த வேலையிலும் ஈடுபடாமல் கவனச்சிதறல் உண்டாகிறது. சிறுநீரை அடக்கிவைத்திருக்கும் நபர்களுக்கு, மனநோய்கள் அதிகம் உண்டாவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த செய்தியை நீங்கள் எப்போதாவாது ஆன்லைனின் படித்திருந்தாலோ, யாராவது சொல்லக் கேட்டிருந்தாலோ மனசில் பதிந்திருக்காது.. ஆனால் இந்த ஒற்றை விரலால் சுட்டிக் காட்டும் ஒண்ணுக்கு போகாமல் ஏற்படும் அவஸ்தையை வைத்து ஒரு முழு நீளப் படமாக கொஞ்சமும் போரடிக்காமல் கொடுத்து பெண்கள் (போலீஸ்) மீதும் கொஞ்சம் பச்சாதாபம் ஏற்படுத்த வைத்து விட்டார்கள்.

படத்தின் கதை என்னவென்றெல்லாம் கேட்டு ஒரு லேடி போலீஸ் விவிஐவி செக்யூரிட்டிக்காக நடு பால்ம் ஒன்றில் உச்சி வெயிலில் நிற்கும் போது ஒன் பாத்ரூம் வந்து விடுகிறது. அதை சமாளிக்கும் விதம்தான் முழுப் படம் என்று சொன்னால் நம்பிதான் ஆக வேண்டும்.. ஆனால் எடுத்து கொண்ட சப்ஜெக்டுக்கு பின்னணியாக ‘டைட்டில்‘போடும் போதே ‘உன் அழகு என்னை பாடா படுத்துது..அழகு புள்ளடா நீ. என் வழிக்கு வந்துடு. இல்லேன்னா.உன்னை எப்படி என் வழிக்கு கொண்டு வரணும்னு எனக்கு தெரியும்’’ என செல்லமாக மிரட்டும் குரலும் அதற்கு அந்த பெண் ‘‘சார். என்னை விட்டு ருங்க..’‘ என கெஞ்சும் தொனியுடன் தொடங்கி பந்தோபஸ்து என்ற பெயரில் அழகான ஒரு பெண் போலீசை அழைத்து சென்று நீண்டதொரு பாலத்தில் இறக்கி விட்டு. ‘‘நீ இங்கேயே நில்‘‘ என கட்டளையிட்டு அப்பெண்ணின் ‘அந்த’ அவஸ்தையை கொஞ்சம் தூரத்தில் நின்று குரூரமாக ரசிக்கும் காட்சி இது கதையல்ல நிஜம் என்று நம்பத் தோன்றுகிறது.

கதாநாயகி பெண் போலீசாக ஸ்ரீ பிரியங்கா. தாயில்லாத ஒரு குழந்தைக்கு பக்கா அம்மாவாக, மனைவியை இழந்த மாமனிடம் ஒரு அக்கா லெவலில், இடையிடையே ஆம்புலன்ஸ் டிரைவரின் காதலியாகவும் மாறி, மாறி நடித்தப்படியே தன் போலீஸ் டியூட்டியை முழுமையாக கண் முன் முன் கொண்ட ப்யூட்டி ஸ்ரீபிரியங்கா அசத்துகிறார். மட்டமான சிந்தனையும், நடத்தையும் கொண்ட இன்ஸ்பெக்டராக வரும் முத்துராமனும் ஓ கே. கூடவே ராமதாஸ், வி கே சுந்தர் ஆகியோர் தங்கள் பங்களிப்பை நிறைவாக வழங்கி இருக்கிறார்கள்..

அமைதிப்படை 2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இப்படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்து அப்ளாஸ் வாங்குகிறார். கோலிவுட்டில் தப்பு நடந்தாலும் உரத்தக் குரலில் தட்டிக் கேட்கும் குணமுடைய சுரேஷ் காமாட்சி தன் முதல் டைரக்‌ஷனிலும் தனி முத்திரைப் பதித்து விட்டார்.

சகல தரப்பினரும் ஃபேமிலியோடு பார்க்கத் தகுந்த படமிது.

மார்க் 3 / 5

error: Content is protected !!