எம்.ஜி.இராமச்சந்திரன் ஆகிய நான் -என்று உறுதி எடுத்த நாளின்று!

எம்.ஜி.இராமச்சந்திரன் ஆகிய நான் -என்று உறுதி எடுத்த நாளின்று!

மிழக அரசியல் வரலாற்றில் ஜூன் 30-ம் தேதி மறக்கவியலாத தினம். ஆம்.. 1977-ம் ஆண்டு இதே தினத்தில்தான் எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதல்வராக முதன்முறை பொறுப்பேற்றார்.

சுதந்திரம் பெற்றுத் தந்த கட்சி என்ற பாரம்பர்யத்தோடு இந்தியா முழுக்க மக்களிடையே பெரும் வரவேற்போடு தன் ஆளுகையைப் பரப்பியிருந்த காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி 1967-ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியைப்பிடித்தவர் அண்ணாதுரை. காங்கிரஸ் கட்சி என்ற ஆலமரத்தை ஒரே ஒரு மாநிலத்தில் விரவியிருந்த திராவிடக்கட்சி ஒன்று வீழ்த்திக்கிடத்தியது இந்திய வரலாற்றில் பெரும் சாதனை. திராவிட சிந்தனை கொண்டவர்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து அதை ஒரு பலம் கொண்ட ஓர் அமைப்பாக கட்டியமைத்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது அண்ணாவின் தனிப்பெரும் சாதனை.

முன்னதாக பெரியார் தேர்தல் அரசியலை விரும்பாதவர் என்பதால் பெரியாருடன் அண்ணாவின் சாதனையை ஒப்பிடமுடியாது. ஆனால், அண்ணா ஆட்சிக்கு வந்த அடுத்த பத்தாண்டுகளில் அண்ணாவின் அந்தச் சாதனையையே முறியடிக்கும் ஒரு விஷயம் அரங்கேறியது. அது ஒரு மக்கள் அபிமானம் மிக்க நடிகர் நாடாளும் வாய்ப்பைப் பெற்றது. அந்தச் சாதனை மனிதர் எம்.ஜி.ஆர்!

அதிலும் கட்சித்துவங்கிய 5 ஆண்டுகளில் ஆட்சியைப்பிடித்தது அதிமுக. 1977-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் மொத்தமுள்ள 234 இடங்களில் 144 இடங்களைப்பெற்று அதிமுக வென்றது. அருப்புக்கோட்டையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சட்டமன்றக் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். கவர்னர் பிரபுதாஸ் பட்வாரியின் அழைப்பை ஏற்று அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றது. நாஞ்சில் மனோகரன். நாராயணசாமி, எட்மண்ட் , பண்ருட்டி ராமச்சந்திரன், ஆர்.எம்.வீரப்பன், அரங்கநாயகம், பெ.சவுந்தரபாண்டியன், காளிமுத்து, ராகவானந்தம்,பொன்னையன், பி.டி.சரசுவதி, ஜி.குழந்தைவேலு, கே.ராஜா முகமது போன்ற படித்த இளைஞர்கள், அனுபவமுள்ள தலைவர்களைத் தனது அமைச்சரவையில் இடம் பெறச்செய்தார் எம்.ஜி.ஆர்.

பொது நிர்வாகம், ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ், மாவட்ட ரெவின்யூ அதிகாரிகள், உதவி கலெக்டர்கள், போலீஸ், தேர்தல், பாஸ்போர்ட், மதுவிலக்கு, சுகாதாரம், மருந்து, அறநிலையத்துறை, லஞ்ச ஒழிப்பு, மற்றும் தொழிற்சாலை ஆகிய துறைகளை எம்.ஜி.ஆர் வைத்துக்கொண்டார். ராஜாஜி மண்டபத்தில் இந்தப் பதவியேற்பு வைபவம் நடந்து முடிந்ததும் நேரே எம்.ஜி.ஆர் தன் அமைச்சரவை சகாக்களோடு சென்றது அண்ணாசாலையில் அமைக்கப்பட்ட பிரமாண்ட மேடைக்கு. ஆம் தன்னை, தன் வாழ்வை இத்தனை உயரத்துக்குக் கொண்டு சென்ற மக்கள் முன்னேதான் பதவியேற்பு வைபவத்தை நிகழ்த்தி தன் ஆட்சி லஞ்ச லாவண்மயற்ற ஊழலற்ற ஆட்சியாக மக்களாட்சி புரியும் என மக்களுக்கு உறுதியளித்தார்.

தணிக்கை செய்யப்படாமல் ஓரிரு படங்களை மட்டும் என்னை எடுக்க அனுமதித்தால் நான் திராவிடத்தை வென்று காட்டுவேன் என்றார் அண்ணா. அண்ணாவின் ஆசையைத் தணிக்கை செய்யப்பட்ட படங்களைக் கொண்டே நிகழ்த்திக்காட்டியவர் அண்ணாவால் இதயக்கனி என அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அடுத்த 11 ஆண்டுகள் அவரே தமிழகத்தின் அசைக்கமுடியாதவராக இருந்தார் என்பது உலகமறிந்த வரலாறு.

error: Content is protected !!