June 3, 2023

எம்ஜிஆர்-கலைஞர் பரப்புரை _!

எம் ஜி ஆரும் கலைஞரும் அரசியல் களத்தில் எதிரெதிர் துருவங்களாகக் கருத்து மோதல்கள் நடத்தி வந்த காலம் அது. தினமலர் நாளிதழில் நிருபராக நான் அந்த காலத்தில் பரபரப்பான பணியில் இருந்தேன். பொதுத் தேர்தல்களின் போது இவ்விரு ஆளுமைகளின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுச் செய்தி எழுதுகின்ற பணி அடியேனுக்குக் கிடைத்து வந்தது. ஒவ்வொரு பொதுத் தேர்தலின் போதும் தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாள் நிறைவு நிகழ்ச்சியைச் செய்தியாக்கும் பணியும் ஒவ்வொரு முறையும் எனக்குத்தான் கிடைத்து வந்தது.

எம்ஜிஆரும் சரி… கலைஞரும் சரி ஒரு குறிப்பிட்ட பகுதியில் தான் தங்களின் கடைசி கட்ட பிரச்சாரத்தை நடத்தி முடிப்பார்கள். அண்ணா நகர் சட்ட மன்றத் தொகுதிக்கு உட்பட்ட டிபி சத்திரம் என்று அழைக்கப்படும் தாண்டவராயன் பிள்ளை சத்திரம் அண்ணாநகர் தொகுதிக்குட்பட்டது. ஒரே குறிப்பிட்ட இடத்தில் பெருவாரியான வாக்காளர்கள் இருப்பது என்பதாலும் அந்த இடத்தை இரு அரசியல் தலைவர்களும் கடைசி கட்ட பரப்புரைக்குப் பயன்படுத்தினர். கலைஞர் போட்டியிட்டு வந்ததால் அதற்கு மவுசு அதிகம். இப்பொழுதெல்லாம் மாலை 7 மணிவரை பரப்புரை நிகழ்த்த அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த காலத்தில் பிற்பகல் நான்கு மணிக்குள் பரப்புரை முடித்தாக வேண்டும்.

இரண்டு மணியிலிருந்து அந்தப் பகுதியின் சுற்றுவட்டாரங்களில் கலைஞர் ஒரு புறத்திலும் எம்ஜிஆர் மறுமுனையிலும் வாகனங்களில் நின்றிருந்தபடி தேர்தல் பிரச்சாரம் செய்து வருவர். கடைசி அரை மணி நேரப் பரப்புரை என்பது முழுக்க முழுக்க அந்த டிபி சத்திரத்தின் அருகில் இருந்த ஒரு பிரம்மாண்டமான திடலில் தான். ஒரு முனையில் எம்ஜிஆரும் மறுமுனையில் கலைஞருமாக தேர்தல் பிரச்சாரம் நடத்திக் கொண்டிருப்பார்கள். அப்பொழுது இந்த இரு செய்திகளையும் தொகுத்து எழுதக்கூடிய பணியில் நான் இருப்பது வழக்கம்.

பிரச்சார வாகனங்களில் இருந்தபடியே கலைஞரும் எம்ஜிஆரும் தூரத்தில் இருந்தவாறு ஒருவரை ஒருவர் வணங்கிக் கொள்வர். பின் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சனம் செய்து அரசியல் பரப்புரை நிகழ்த்துவர். மிகச் சரியாக நான்கு மணி முடியும்போது எல்லோரையும் வணங்கிய படியே இருவரும் அமைதியாக அவர்களுடைய பரப்புரை வாகனத்தில் திரும்பிச் சென்று விடுவார்கள். செய்திக் களத்தில் பணியாற்றிய அந்த அனுபவத்தை இப்பொழுது அசை போட்டுப் பார்த்துக்கொள்கிறேன்.

நூருல்லா ஆர்

ஊடகன்

05-04-2021