மெர்சல் – திரை விமர்சனம்!

மெர்சல் –  திரை விமர்சனம்!

எந்த ஒரு உணவு வகையும் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. அதிலும் சிலருக்கு இனிப்பு என்ற சொல்லே புளிக்கும். வேறு சிலருக்கோ காரம் இல்லாவிட்டால் கவள சோறு தொண்டையில் இறங்காது. அது போல்தான் சினிமாவும். எல்லோருக்கும் பிடித்த சினிமா எல்லோராலும் எப்போதும் கொடுத்து விட முடியாதுதான். ஆனால் கோயிலுக்கு போய் காலை முதல் அரை நாள் வரை கால் கடுக்க காத்திருந்து சாமி தரிசனம் முடிந்து திரும்பும் பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் கையில் கிடைக்கும் பிரசாதத்தின் சுவையை மிஞ்சும் உணவு வேறெங்கும் கிடையாது. அப்படித்தான் தீபாவளிக்கு வந்திருக்கும் மெர்சல். இத்தனைக்கும் அரத பழசான பல்வேறு சீனரிகளோடு எக்கச்சக்கமான சினிமாக்களில் காண்பித்த மெடிக்கல் பிராடு தனங்களைத்தான் விஜய் வாயிலாக அட்லீ சொல்லி இருக்கிறார் என்றாலும் அதை இன்றைய ட்ரண்டிங் லேங்குவேஜில் சொல்லி கவர்ந்து இருக்கிறார்கள்.

குறிப்பாக கையில் எடுத்த விஷயமும், சொல்லப் போகும் கதையும் படம் பார்க்க வந்தவர்கள் ஒவ்வொருக்கும் தெரிந்ததுதான் என்பதை நன்றாகவே அறிந்து வைத்துள்ள அட்லீ தன் கையில் கிடைத்த தெறி நாயகன் மூலம் நாட்டின் இன்றைய போக்கை தெறிக்க விட்டு ரசிக்க வைத்துள்ளதுதான் படத்தின் பலம். மெர்சல் படத்தின் கதை என்னவென்று கேட்டால் மருத்துவத்தை சேவையாக கருதி ஜஸ்ட் 5 ரூபாய் பீஸ் வாங்கிக் கொண்டு ஆப்ரேஷன் வரை செய்யும் டாக்டர் விஜய் 1-க்கு சர்வதேச விருது கிடைக்கிறது. அந்த விருது வாங்க வெளிநாடு போகும் போது , கொஞ்ச பேரை கடத்தியும் கொலை செய்தும் வருகிறார். கூடவே ஒரு மேஜிக் ஷோ செய்கிறார். இந்நிலையில் போலீஸ் ஆபீசரான சத்யராஜிடம் மாட்டி அவர் விசாரணையின் போதுதான் ஏனிந்த கொலை? யார் டாக்டர்? மேஜிசியன் யார்? என்ற தகவல்களெல்லாம் தெரிய வருகிறது.

இதற்கிடையில் தன்னை குறி வைத்த டாக்டர் விஜயை போட்டுத் தள்ள வில்லன் என்ற தோரணை காட்ட மூஞ்சியும் குரலும் மட்டும் போதும் என்று நம்பும் (கார்ப்பரேட் டாக்டர்) எஸ்.ஜே.சூர்யா முயல்கிறார், அதே சமயம் ஒத்த உருவத்தில் இருக்கும் அந்த இருவரின் பின்னணியில் இன்னொரு விஜயை காண்பிக்க ஒரு பிளாஷ் பேக் போய் வருகிறது. முடிவில் இரு விஜய்-யும் இணைந்து என்ன செய்கிறார்கள் என்பதுதான் படம். ஹூம். மேற்படி ஆறேழு லைன்களில் படத்தின் கதை உங்களுக்கு சரி வர புரியாதது போல்தான் படத்திலும் கொஞ்சம் தெளிவின்மை இருக்கிறது. அதே சமயம் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் இந்த தீபாவளி சீசனில் விஜய் ரசிகர்கள் எதை கை தட்டுவார்கள், அவர் ரசிகர்கள் அல்லாதவர்கள் பிடிக்க எதை கொடுக்கலாம் என்று மட்டும் யோசித்து சிம்பிளான பழி வாங்கும் கதையை நவீன டாபிக் முலாம் பூசி சொல்கிறார் அட்லீ.

அதாவது ‘மருத்துவச் சுற்றுலாவில் இந்தியா, குறிப்பாக சென்னை கோலாச்சுகிறது’ என்று இங்குள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகள் பிதற்றிக் கொள்ளும் இந்த தருணத்தில், ’இங்குள்ள பெரிய மருத்துவமனைகள் நோயாளிகளின் நலன்காக இயங்குவதை விட, அதன் பங்குதாரர்களின் நலனுக்காகதான் இயங்குகின்றன என்பதை உணரும் படி சொல்லி இருக்கிறார். இது போன்ற ஆஸ்பத்திரியில் நம் அனைவருக்கும் ஒரு அனுபவம் நிச்சயம் இருக்கும். எல்லா ஹாஸ்பிட்டல்களிலும் தேவையற்ற பரிசோதனைகளை மருத்துவர்கள் எடுக்க சொல்கிறார்கள் என்பது புரிந்த நிலையில் இப்படத்தின் மூலமும் அதை உரத்த குரலில் சொல்லி இருக்கிறார்.

இந்த விசயத்துக்காக மூன்று விஜய் உருவாக்கி மூன்று கேரக்டர் மூலமும் இதே மெடிக்கல் அவலத்தை மட்டுமே பிரதானப்படுத்தி இருக்கிறார்கள். இதில் மேஜிக் விஜய் செய்யும் செப்புடு வித்தைகளை மெச்சிக்க முடியவில்லை. மதுரை தளபதி ரோல் கொஞ்சம் அதிகப்படியாக இருந்தாலும் நாட் பேட். நாயகிகளில் நித்யா மேனன் தனி ஸ்கோர் செய்கிறார். அடுத்து சமந்தா டாக்டர் விஜயை ‘த்த்தம்பீ..’ என்றழைத்து அவரையே காதலிக்கும் சமந்தா பாஸ் மார்க் வாங்குகிறார். ஆனால் கஜோல் வேஸ்ட். எஸ். ஜே. சூர்யா நடிப்பு உவ்வே ரகத்தை நோக்கி நகர்கிறது. இந்த படத்தில் வடிவேலு வந்து போகிறார். அம்புட்டுத்தான்.

முழு படத்தை பார்க்க/ கேட்க மிகவும் பரவசமாகத்தான் உள்ளது, அதிலும் கேமராமேன் விஷ்ணு -வுக்கு இது முதல் படமாம் நம்ப முடியவில்லை. ரகுமானின் பாடல்கள் ரசிக்க வைக்கின்றது ஆனால் பின்னணி முழுசாக கவரவில்லை, ஆனால் ஆளப்போறான் தமிழன் அப்ளாஸ் அள்ளுகிறான்.

மொத்தத்தில் மருத்துவ ஊழலை காண்பிப்பதற்காகவே பள்ளி மாணவி தொடங்கி நித்யாமேனன் வரையிலான வர்களின் ரத்தத்தை கொஞ்சம் அதிகப்படியாகவே காண்பித்து வெறுப்படைய வைத்து விட்டது போல் இருந்தாலும் ஒரு விஜய் இருந்தாலே தெறிக்க விட்ட அட்லீ இதில் மூன்று விஜய் ரோல் மூலம் அவர் ரசிகர்களை முழுசாக மெர்சலாக்க தவறி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது ஒரு படம் சூப்பர் ஹிட் என்றால் அந்த படத்தை அந்த நாயகனின் ரசிகன் உடனடியாக அடுத்த ஷோ பார்க்க க்யூவில் நின்று விடுவான்.. அந்த வாய்ப்பை அட்லீ ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மை.

மார்க் 5 – 3.25

Related Posts

error: Content is protected !!