மெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்!

மெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்!

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் வருவதுதான் அது., அந்த உணர்வுக்கு மயங்காதவர் எவருமிலர். அதனை விரும்பாதவர் யாரும் இல்லை. அன்பு, பாசம் போன்றவைகளுக்கு அந்நியப்பட்டு நிற்பதுதான் அது..

ஆனாலும் எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல நம் மனதிற்குள் வந்துதித்து , வியாபித்து, ஒட்டு மொத்த உடம்பிலும் சம்மணமிட்டு உட்கார்ந்துக் கொண்டு, அவனின் அல்லது அவளின் வாழ்க்கைச் சூழலை சின்னாப்பின்னமாக்குவதில் முக்கியமான பங்கு வகிப்பது இதுதான்..

அதுதான் காதல்.

இந்தக் காதல் என்பது இளமையின் வசந்த காலம். மனம் கவர்ந்தவரை கண்டவுடன் அவரை தக்கவைத்துக்கொள்வதற்காக எண்ணற்ற செயல்களை செய்யத் தூண்டும் ஹார்மோன்கள் என்றெல்லாம் காமராஜ் என்ற பெயர் கொண்ட காம மருத்துவர்கள் சொல்லி பிழைப்பு நடத்துவது ஒரு பக்கம்.

கூடவே இந்த காதல் என்ற மூன்றெழுத்து மந்திரம் மனதிற்குள் பூக்கள் பூத்த அந்த தருணங் களை சேகரித்தே ஆயிரம் ஆயிரம் திரைப்படங்களுக்கும், நாவல்களுக்கு கதையாக உருவாகி இருக்கின்றன. உருவாகிக் கொண்டும் இருக்கின்றன.

அந்த வகையில் இதுவரையில் சொல்லப்படாத காதல்கள் இந்த உலகில் எவ்வளவோ இருக்கிறது. அப்படியானக் காதலை சொல்வதற்கு எதோ குறைகிறது.. அது வார்த்தைகளோ , எழுத்து களோ, எண்ணங்களோ, உணர்ச்சிகளோ, படைப்புகளோ, நட்போ, சூழலோ எது என்று தெரியவில்லை ..

அந்த குறையை –

காதல் என்ற உணர்வை, நட்ட நடு நரம்பிலிருந்து ஒரு இசையை கிளர்தெழச் செய்யும் முயற்சியை  இசைஞானி தயவோடு மிக இலாவகமாகக் கையாண்டிருக்கிறார்கள் , இந்த ‘மெஹந்தி சர்க்கஸ்’ என்னும் டீம். அதிலும் கண் பார்வையிலும் , டேப் ரிக்கார்ட்டர் என்னும் மந்திர ஒலிப்பானிலும் ஒளிந்திருந்தக் காதலை ஒளிவுமறைவு இல்லாமல் காட்ட பகீரத பிரயதனப்பட்டிருக்கிறார்கள். அதிலும் மனசில் இருப்பவன்தான் புருஷன் என்ற தாரக மந்திரத்தை அழுத்தமாக சொல்ல மெனக்கெட்டு இருக்கிறார்கள். 

1990களில் நடந்த ஒரு காதல் கதை. ஹீரோ ஜீவா(மாதம்பட்டி ரங்கராஜ்) குளுகுளுவென  மந்திரத்தை இருக்கும் கொடைக்கானலில் உள்ள பூம்பாறை என்ற வில்லேஜில் “ராஜ கீதம்” எனும் பாடல் ஒளிப்பதிவுக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அந்தக் கால பாடல் கேசட் கடை மூலம் இளையராஜா பாடல்கள் ஊடாக அந்த ஊர் இளைஞர்களின் காதலை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார். அப்படியாப்பட்ட நாயகன் அதே கொடைக்கானலில் சர்க்கஸ் நடத்த வந்த நாயகி மெஹந்தி (ஸ்வேதா திரிபாதி) மீது காதல் கொள்கிறார்.

பிறகென்ன..? உங்களுக்கு, எனக்கும், பக்கத்துச் சீட் பெரிசுக்கும் தெரிந்த அதே ஸ்க்ரீன் பிளேதான். ஹீரோ ஜீவாவின் அப்பாவுக்கும், ஹீரோயின் மெஹந்தியின் அப்பாவுக்கும் இந்த ஜோடியின் காதல் பிடிக்கவில்லை. அதிலும் கீழ் ஜாதி பெண்ணை காதலிப்பது குற்றம் என்பது போல ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறார் ஹீரோ அப்பா. அதே சமயம் ஹீரோயி னின் அப்பா தன் மகளை கட்டிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? என்று கடினமான சவாலை சொல்கிறார். அப்புறம் என்னாச்சு என்பதுதான் மிச்சக் கதை.

நாயகன் ஜீவா  கேரக்டருக்கு மாதம்பட்டி ரங்கராஜ் பொருத்தம்தான். ஆனால் கேட்டரிங் மாஸ்டரான மாதம்பட்டியாருக்கு ஒரு நினைவூட்டல் .. பொதுவாக உணவில் இனிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, புளிப்பு மற்றும் துவர்ப்பு என்று ஆறுவித சுவைகளை நமது நாக்கு அறியக் கூடியது என்று சொல்வதுண்டு. அதே சமயம் மேலைநாட்டவர்களின் மொழிகளில் சுவைகள் ஐந்து மட்டும்தான் உள்ளன. அவர்கள் துவர்ப்புச் சுவையை விட்டு விட்டார்கள். இது இப்படி யிருக்க ஜப்பானியர்கள் “யுமாமி” என்ற ஒரு சுவையைக் குறிப்பிடுகிறார்கள். இந்தச் சுவை மாமிசம் சாப்பிடும்போது அனுபவிக்கும் சுவை என்பது அவர்கள் விளக்கம். இதையறிந்ததும் ஆங்கிலத்தில் சேவரி (Savory) என்று புது சுவை உணர்வை அவர்கள் மொழியில் சேர்த்துக் கொண்டார்கள். உண்மையில் நமது நாக்கு 25 க்கும் மேற்பட்ட சுவைகளை உணரக்கூடியது. அத்தனைக்கும் நம் தமிழில் பெயர்கள் இல்லை. ஆனாலும் புது சுவையூட்டும் உணவு பதார்த்தங்கள் அன்றாடம் உருவாகிக் கொண்டேதான் இருக்கின்றன. அப்படியான சுழலில் நடிப்பிலும் நகைச்சுவை, குணச்சித்திரம், சோகம், வில்லத்தனம் என்று எத்தனையோ உண்டு.. அதையெல்லாம் புரிந்து செயல்பட்டால் சினிமாவிலும் மெகா ஸ்டார் ஆகலாம் என்பதை புரிந்து கொள்வது நல்லது.

நாயகி மெஹந்திக்கு வெகுளித்தனமான இளம் பெண் ரோல். தனக்கு முடிந்த அளவு நடித்து இருக்கிறார். குறிப்பாக வடநாட்டு பெண்ணுக்கே உரிய மொழியில் இவர் பேசும் தமிழ் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கிறது. வில்லனாக வலம் வரும் வேல ராமமூர்த்திக்கு இந்த படத்தில் குணச்சித்திர வேடம். கொஞ்சம் எல்லை மீறலான வசனங்களுடன், நடத்தை களுடன் வழக்கம் போல் தன் பங்கை வெளிப்படுத்தி இருக்கிறார். RJ விக்னேஷ்காந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு ராஜூ முருகன் தயவால் கவனம் பெறுகிறார். காதலில் வில்லனாக வரும் விகாஷ் நடிப்பு நேர்த்தி.

இப்படியான நடிகர்களின் நடிப்பை தாண்டி சான் ரோல்டன் இசையும், யுகபாரதியின் பாடல் வரிகளும், எஸ்.கே. செல்வ குமாரின் ஒளிப்பதிவும்,  இப்படத்தை இன்வால்மெண்டோடு பார்க்க வைக்க தூண்டும்  இப்படத்தில் வரும் வசனமான முதல் அக்யூஸ்ட்  இளைய ராஜாவின் இசையும் படத்தின் மீதான ஈர்ப்பை பல மடங்கு அதிகப்படுத்தியது என்று சொன்னால் மிகை ஆகாது.  

மொத்தத்தில் சகல தரப்பினரும் பார்க்கக்கூடிய படமாக  இருந்தாலும். இளைஞர்களை இந்த மெஹந்தி சர்க்கஸ் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.

மெஹந்தி சர்க்கஸ் – ஓர் காதல் நாவலைக் காண விரும்புவோர் கண்டிப்பாக காண வேண்டிய சினிமா.

மார்க 3 / 5

 

error: Content is protected !!