படு காரமான மிளகாயை சாப்பிட்டு பிரைஸ் வாங்கும் பெண்மணி! – வீடியோ
காரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளகாய். நம் சமையலில் மிளகாய்க்கு சிறப்பான இடம் உண்டு. இது ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடமிளகாய் என மூன்று வகைகளைக் கொண்டது. இவை காரத்தன்மையால் வேறுபடுகின்றன. குடமிளகாய் காரம் குறைந்தது. மிளகாயின் காய் சமையலுக்கும், கனிந்த கனிகள் மற்றும் விதைகள் நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இத்தாவரத்தில் ஒலியோரெசின், கேப்சைசின், கரோடினாய்டுகள், பிளேவனாய்டுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் ஸ்டிராய்டல், சபோனின்கள், கெப்சைசிடின்ஸ் (விதைகள் ) பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த மிளகாய் நல்லதா? கெட்டதா? அதிக காரம் சாப்பிட்டால் அல்சர் வருமா? அதிக மிளகாய் சேர்த்த உணவு சூட்டைக் கிளப்புமா? இப்படி மிளகாயைப் பற்றிப் பரவலாக பலருக்கும் பல கேள்விகள். எந்த சமையலுக்கும் சுவைகூட்டும் முக்கியப் பொருளான மிளகாயில், நல்லதும் கெட்டதுமான அம்சங்கள் இணைந்தே இருக்கின்றன என்பதே உண்மை.
இதனிடையே க்ளிப்ஃடன் மிளகாய் சாப்பிடும் க்ளப் இங்கிலாந்தில் மிகப் பிரபலமானது. இங்கே நடைபெறும் மிளகாய் சாப்பிடும் போட்டியில் ஒவ்வொரு சுற்றுக்கும், மிளகாயின் காரம் அதிகரிக்கப்படும். போட்டியில் கலந்துகொள்வது எவ்வளவு பெருமையானதோ, அதேபோல் கடினமானதும்கூட.
ஆனாலும் நடுத்தர வயதில் உள்ள சிட் பார்பர் என்ற பெண், 2014-ம் ஆண்டிலிருந்து இந்தப் போட்டியில் தன் ஆதிக்கத்தைத் தொடர்ச்சியாகச் செலுத்தி வருகிறார். ‘தோற்கடிக்க முடியாத சிட்’ என்று இவரை எல்லோரும் அன்புடன் அழைக்கிறார்கள். காரத்தை விரும்புகிறவர்கள் எல்லாம் இந்தப் போட்டியில் எளிதாக வென்றுவிட முடியும் என்று சொல்லிவிட இயலாது. ரெட் ஃப்ரெஷ்னோ, ஜலபெனோ போன்ற மிளகாய்களைச் சாப்பிட்டால் பின் விளைவுகளைச் சந்திக்காமல் இருக்க முடியாது. போட்டியின் ஒவ்வொரு சுற்றுக்கும் காரத்தின் தன்மை அதிகரிக்கப்படும். காரத்தைத் தாக்குப் பிடிக்க இயலாமல் பலரும் வெளியேறிவிட, இறுதிச் சுற்றில் சிலர் மட்டுமே கலந்துகொள்வார்கள். அவர்களுக்கு உலகிலேயே மிகக் காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்கள் வழங்கப்படும். இதையும் சாப்பிட்டு முடிப்பவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
அதன் படி கடந்த 4 ஆண்டுகளாக இந்தப் போட்டியில் கலந்துகொண்டு, தொடர்ச்சியாக வெற்றிவாகை சூடிவருகிறார் சிட் பார்பர். “இது மிகக் கடினமான போட்டி. மிளகாய் சாப்பிடும்போது காரத்தைத் தாங்க முடியாமல் தண்ணீர் குடித்துவிட்டால், போட்டி யிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். பலரும் காரத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டுக்கொண்டே போட்டியில் பங்கேற்பார்கள். காரத்தைத் தணிக்க பாலைக் குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் வேகமாக மிளகாய்களைச் சாப்பிட்டுவிடுவேன். இந்தப் போட்டி பணத்துக்காகக் கலந்து கொள்ளும் போட்டி இல்லை. 4,500 ரூபாய்தான் பரிசுப் பணம். காரத்தின் பின் விளைவுகளைச் சரி செய்வதற்கே இந்தப் பணம் போதாது. சவால்களை விரும்புகிறவர்களும் வலியைத் தாங்கிக்கொள்ள முடிகிறவர்களும் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள முடியும் ” என்கிறார் சிட் பார்பர்.