மேதா பட்கர் காலவரையற்ற உண்ணாவிரதத்தால் உடல் நிலை மோசம்!
நர்மதா அணை விவகாரம் தொடர்பாக இடம் மாற்றப்படுபவர்களின் நிலையை எடுத்துக்கூறும் விதமாக கடந்த ஆகஸ்ட் 25 முதல் சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார். சனிக்கிழமையன்று அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவருக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை அவரது உண்ணாவிரதம் எட்டாவது நாளை எட்டியது.
நர்மதா நதிக்கரை அருகே வாழ்ந்துவரும் 32,000 பேர் அந்த இடத்தில் அகற்றப்படுவார்கள் என்பதற் காக அவர்களுக்காக போராடிவரும் நர்மதா சுனாட்டி அந்தோலன் இயக்கம் உண்ணாவிரதத்தை முன்னெடுத்தது. மேதா பட்கர் மற்றும் அவரின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியப் பிரதேசம் மாநிலம் பட்வானி மாவட்டத்தில் சோட்டா படா கிராமத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
பட்வானி மாவட்டத்தின் மூத்த அரசு அதிகாரிகள் உண்ணாவிரதத்தை கைவிட மேதா பட்கரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் தனது கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில், அவ்வாறு கை விட அவர் மறுத்துவிட்டார். கடந்த 34 ஆண்டுகளாக சர்தார் சரோவர் அணைக்கு எதிராக நர்மதா பச்சோ ஆந்தோலன் இயக்கம் சார்பாக அந்த பகுதியில் இருந்து அகற்றப்படும் மக்களுக்காக மேதா பட்கர் போராடி வருகிறார். சர்தார் சரோவர் அணை கட்டுவதை தொடர்ந்து அவர் எதிர்த்து வந்ததால், அவரை பலர் ‘வளர்ச்சிக்கு எதிரானவர்’ என்று குறிப்பிடுகின்றனர்.
இது குறித்து மேதா பட்கர், ”எங்களின் 34 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகும், இன்றும் கிராமங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த அணையில் அதிகரிக்கும் நீரால் பல கிராமங்கள் நீரில் மூழ்கிவிடுகின்றன” என்று குறிப்பிட்டார்.
”இன்று பல கிராமங்கள் தீவுகளாக காட்சியளிக்கின்றன. இந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டவர்கள் மீண்டும் குடியமர்த்தப்படும் வரை எங்களின் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடரும்” என்று அவர் கூறினார்.
சிலர் இந்த இடத்தில் மீண்டும் குடியமர்த்தப்பட்டாலும், அது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இல்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மேதா பட்கருடன் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் இணைந்துள்ள பலரும், ”எங்கள் வாழ்வின் முக்கிய அங்கம் நர்மதா, இது எங்களின் சாவு மணியாக ஆக்க விடமாட்டோம்” என்று கூறினர்.
மேலும், மத்தியப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியின்போது நடந்த சில நீர் பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்த மேதா பட்கர் கோரி வருகிறார்.
அதேவேளையில் நர்மதா நதிநீர் கட்டுப்பாட்டு வாரியத்தின் எந்த விதிமுறையையும் தாங்கள் மீறவில்லை என குஜராத் மாநில பாஜக அரசு கூறுகிறது. நர்மதா நதிநீர் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவுக்கு ஏற்ப இந்த நதியின் நீர்மட்டம் உயர்த்தப்பட்டது.
அணையின் மதகுகளை மூடுவதற்கு குஜராத் மாநில அரசுக்கு நர்மதா நதிநீர் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியளித்தது. தற்போது பருவமழை காலத்தில் அணையின் மதகுகள் மூடப்பட்டு உள்ள சூழலில், அணையின் நீர்மட்டம் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து அதனால் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மூழ்கிவிட்டன.