மாஸ்டர் – சினிமா விமர்சனம்!
சில சினிமா ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும்,, சில சினிமா சுமாரா இருக்கும்..சில சினிமா மனசில் நிற்கும். சில சினிமா திரும்பத் திரும்ப பார்க்க வைக்கும்.. சில சினிமா திருப்தியைக் கொடுக்கும்.. சில சினிமா பிரமிப்பு ஊட்டும்.. ஆனா இந்த மாஸ்டர் என்ற சினிமா ஆயாசத்தை ஏற்படுத்தியதுதான் மிச்சம்..அத்துடன் இது விஜய் படமுமில்லை., விஜயசேதுபதி படமுமில்லை என்பதுடன் யாருக்கான படமிது என்ற கேள்வியையும் எழுப்பும் படமிது.
பெரும்பாலான நேரம் மதுவுக்கு அடிமையாக இருக்கும் பேராசிரியர் விஜய், தான் பணியாற்றும் காலேஜில் ஏற்படும் ஒரு பிரச்சனையில் இருந்து மீள சில காலம் நாகர்கோவிலில் இருக்கும் சிறுவர் கூர்நோக்கு பள்ளி எனப்படும் சீர்திருத்த பள்ளி ஒன்றில் வாத்தி (மாஸ்டர்)யாக பணி புரிய செல்கிறார். அந்தப் கூர் நோக்கு இல்லத்தை விஜய்சேதுபதி தன் கட்டுப்பாட்டில் வைத்தபடி அங்கு இருக்கும் சிறுவர்களை, சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார். பிறகென்னா?ஹீரோ வாத்தி விஜய்க்கும், வில்லன் விஜய்சேதுபதிக்கும் நடக்கும் ரண களம்தான் படத்தின் கதை.
மாஸ் ஹீரோவான விஜய் மாலை ஆறு மணியானால் மது அருந்துவது வாடிக்கையாம். ஆனால் அப்படி போதையில் மூழ்கிக் கிடக்கும் காரணத்தைச் சொன்னால் அதே சூழலில் இருப்போர்கள் சரக்கு அடிக்கலாம் என்று வக்கணையாக சொல்வாராம். இந்த சைக்காலஜி புரொபசருக்கு காலேஜ் பசங்க அனைவருக்கும் அம்புட்டு அன்பாம். .தான் பேசும் வசனத்தில் ‘உரோமம்’ என்பதைக் குறிக்கும் மூன்றெழுத்துக் கெட்ட வார்த்தையை அடிக்கடி சொல்வாராம். நாகர்கோவிலில் இருந்தபடி சென்னையில் ஹீரோயினைக் காப்பாற்றுவாராம்.. அடி, தடியில் இறங்குவார் என்று எதிர்பார்க்கும் போது அழுதபடி வசனம் பேசி கெட்டவர்களை மாற்றி விடுவாராம்.. வில் அம்பைக் கொண்டே வில்லன் படையை துவம்சம் செய்வாராம்.. ஸ்சப்பா.. விஜய் ரோலும் அதை அவர் கையாண்டிருக்கும் விதமும் ஒரே அலைவரிசையில்தான் இருக்கிறது. படத்தில் உபயோகிக்கும் விக்-கில் கூட ஒழுங்கு முறை இல்லை என்பதுதான் சோகம்
இந்த மாஸ்டர் படத்தின் ரியல் ஹீரோ என்று சில பலரால் சொல்லப்படும் விஜய சேதுபதி-க்கான வசனம் & மாடுலேசனுக்கு பார்த்திபன் என்பவர் இருந்தாலும் என்ன செய்வாரோ அதை மிகச் சரியாக செய்து ஸ்கோர் வாங்குகிறார் வி.சே.ஆனாலும் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் லாரி யூனியன் தலைவருக்கு போட்டியிடும் ஆசாமிகளை எல்லாம் சர்வ சாதாரண மாக ஏற்றி கொல்வதும், சிறார் மையக் குழந்தைகளைக் கடத்துவதும், அப்படி நடந்த சம்பவத்தை வாத்தி மட்டும் தலையிட்டு- முன்னரே சொன்னது போல் வில் அம்பு எல்லாம் வைத்து தடுப்பதும்..அச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சச்ச்சோஓஓஒ..!
மியூசிக் டைரக்டர் அனிருத் & கேமராமேன் சதயன் சூர்யன் பங்களிப்பு மட்டும் நிறைவாக இருக்கிறது. அது சரி,, பந்தியில் பரிமாறப்படும் கூட்டு, பொரியல் மட்டும் சுவையாக இருந்தால் போதுமா? சாதம் குழைந்து விட்டால் என்ன பயன்?
இந்த மாதிரி படமெடுக்கும் போது புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் நடித்த பல்லாண்டு வாழ்க கூட பார்க்க வேண்டாம்.. கோலிவுட்டின் 40 ஆண்டு கால சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பேட்ட படம் கூடவா பார்க்கலை லோகேஷூ..!
மொத்தத்தில் நெக்ஸ்ட் இயர் பொங்கலாவது நல்லா இருக்கும் என்று நம்புவோம்!
மார்க் 2.5 / 5