மேரி கோம் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார்.

மேரி கோம் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார்.

டெல்லி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் 51 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்று வரும் மகளிர் குத்துச் சண்டை ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கான இறுதிப் போட்டியில் மேரி கோம் (Mary Kom), தெலுங்கானாவைச் சேர்ந்த நிகாத் ஜரீனை தோற்கடித்து ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார்.

சீனாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒலிம்பிக் போட்டிக்கான குத்துச்சண்டை தகுதி சுற்று போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியில் 5 எடைப் பிரிவுகளில் யார் பங்கேற்பது என்பதை முடிவு செய்வதற்கான 2 நாள் தகுதி போட்டி deல்லியில் நேற்று தொடங்கியது. இதில் 51 கிலோ உடல் எடைப் பிரிவில் நடந்த குத்து சண்டை போட்டியில் 6 முறை உலக சாம்பியனான மணிப்பூரை சேர்ந்த மேரிகோம் (36) சக போட்டியாளரான ரிது கிரிவாலை வீழ்த்தினார்.

மேலும் இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஜூனியர் உலக சாம்பியனான தெலுங்கா னாவை சேர்ந்த நிகாத் ஜரீன் (23), தேசிய சாம்பியன் ஜோதி குலியாவை தோற்கடித்தார். நடுவர் களின் ஒருமித்த முடிவின்படி நிகாத் ஜரீன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

வெற்றி பெற்ற மேரிகோம் மற்றும் நிகாத் ஜரீன் இருவரும் இன்று நடைபெற்ற தகுதி சுற்றின் இறுதி ஆட்டத்தில் மோதினர். இதில் நிகாத் ஜரீனை 9- 1 என்ற விகிதத்தில் முறியடித்த மேரிகோம் ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதி சுற்றுக்கான இந்திய அணியில் இடம் பெற்றார்.

மேரி கோம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட முடிவுக்கு நிகாத் ஜரீன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக நிகாத் ஜரீன் மற்றும் மேரி கோம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இருதரப்பினர் இடையே வாக்குவாதம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைவர் அஜய் சிங் தலையிட்டு இருதரப்பினரிடமும் பேசி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தார். விளையாட்டில் இவ்வாறு அரசியல் செய்தால் இந்திய குத்துச்சண்டை எப்படி வளரும் என செய்தியாளர்களிடம் அஜய் சிங் வேதனை தெரிவித்தார்.