கஞ்சாவுக்கு அனுமதி! – மத்திய அரசு பரிசீலனை!

கஞ்சா எனும் போதைப் பொருள், குறைவான அபாயம் கொண்டதாகவும் அதில் மருத்துவ நன்மைகள் உள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர். வலிப்பு போன்ற வியாதிகளுக்கு, உடல் நோவைத் தணிக்கும் மருந்தாக கஞ்சா பயன்படுத்தப்பட முடியுமா என்பதைப் பற்றி ஆய்வுகள் நடந்து வந்த நிலையில் மருத்துவ பயன்பாட்டுக்கு கஞ்சாவைப் பயன்படுத்த சட்ட ரீதியாக அனுமதிக்கலாம் என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார். நாட்டில் போதை பொருள் தேவையை குறைக்க, ஒரு தேசிய கொள்கையை உருவாக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சர்கள் குழுவிடம் பிரதமர் மோடி கேட்டு கொண்டார். அது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா காந்தி மருத்துவ காரணங்களுக்கு கஞ்சாவைப் பயன்படுத்த அனுமதி கேட்டு சட்ட முன்வரைவு ஒன்றை வெளியிட்டார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறுகையில், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மார்ஜுவனா எனப்படும் கஞ்சா போதைப் பொருள் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று, இந்தியாவி லும் மருத்துவ பயன்பாட்டுக்கு கஞ்சாவைப் பயன்படுத்தி பார்க்கலாம். இது புற்றுநோயை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக பல நாடுகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்தான் கஞ்சா. இந்நிலையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் கஞ்சா இலை புற்றுநோய் செல்கள்களை அழிப்பது தெரியவந்துள்ளது.இதனை, அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் நிறுவனம் தனது இணையதளத்தில் மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளது.
மேலும் அந்த இணையதளத்தில், கஞ்சாவை வைத்து ஆய்வகங்களில் பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டதாகவும், அதில் புற்றுநோய் அறிகுறிகள், புற்றுநோய் சிகிச்சையால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு சிகிச்சையளிப்பதிலும் மற்றும் புற்றுநோய் செல்கள்களை அழிப்பதும் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் போதைப் பொருள் பயன்பாடு குறித்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், ரயில் நிலையங்களுக்கு அருகில் வாழும் மக்கள்தான் அதிகளவில் போதைப் பொருள் பயன்படுத்துகின்றனர் என தெரிய வந்துள்ளது. அதனால், அந்த பகுதியில் அதிகளவு போதை மீட்பு மையங்கள் தொடங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக நீதி மற்றும் அதிகாரமயமாக்கல் துறையின் செயலாளர் லதா கிருஷ்ணா ராவிடம் கேட்ட போது, இந்தியாவில் இருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப, படிப்பறிவு விகிதம் இல்லை. இந்தநிலையில், போதைப் பொருளை சட்டரீதியாக அங்கீகரிப்பது சரியாக இருக்காது. வேண்டுமானால், இதுகுறித்து எதிர்காலத்தில் யோசிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.