மஹாராஷ்டிரா : சிவசேனை ஆட்சியமைக்க ஆளுநர் மாளிகை அழைப்பு!

மஹாராஷ்டிரா : சிவசேனை ஆட்சியமைக்க ஆளுநர் மாளிகை அழைப்பு!

மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிவசேனாவின் சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே, தமது கட்சிக்கு உள்ள பெரும் பான்மை ஆதரவையும், ஆட்சியமைப்பதற்கான விருப்பத்தையும், தெரிவிக்க வேண்டும் என ஆளுநர் பகத்சிங் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு அண்மையில் 288 இடங்களில் நடந்த தோதலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனை 56 இடங்களிலும் வெற்றிபெற்றது. ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை அக்கூட்டணி பெற்றிருந்தும், முதல்வா் பதவியை தங்களுக்கும் இரண்டரை ஆண்டுகள் அளிக்க வேண்டும் என்று சிவசேனை கூறியதால், அங்கு ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. இதனிடையே, முதல்வர் ஃபட்னாவீஸ் ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநா், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை காபந்து முதல்வராக பதவி வகிக்குமாறு கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது.

முதல்வர் பதவி யாருக்கு என்பதில் பாஜக – சிவசேனா இடையே இழுபறி நீடிக்கும் நிலையில், பேரவை தேர்தலில் அதிக இடங்களை வென்ற கட்சி பாஜக என்பதால் ஆட்சியமைக்க வருமாறு பாஜக மூத்த தலைவா் தேவேந்திர ஃபட்னாவீஸ்க்கு ஆளுநர் பகத் சிங் கோஷியார் சனிக்கிழமையன்று அழைப்பு விடுத்துள்ளார்.

மகாராஷ்டிராவில் கடந்த 2 வாரமாக நிலவி வந்த இழுபறிக்கு முடிவுக்கு கொண்டு வரும் வகையில், பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தனிப் பெரும் கட்சி என்ற முறையில் ஆட்சி அமைக்க வருமாறு பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

அதையடுத்து மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கப் போவதில்லை என்று மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் ஞாயிறு மாலை அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இப்போது ஆட்சியமைத்தாலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெருமளவுக்கு போதிய எண்ணிக்கை இல்லை என்பதால் பாஜக இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில்தான் மஹாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வருமாறு சிவசேனை கட்சிக்கு மாநில ஆளுநர் கோஷ்யாரி தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.56 இடங்களில் வெற்றி பெற்றுள்ள இரண்டாவது பெரிய கட்சி என்ற அடிப்படையில் சிவசேனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடிசினல் ரிப்போர்ட்:

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமையன்று எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தை கூட்ட உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. தங்களின் ஆதரவு தேவையென்றால், பாரதிய ஜனதா கட்சியுடன், ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என சிவசேனா அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தியிருக்கிறது.