மஹான் – விமர்சனம்!

மஹான் – விமர்சனம்!

ந்தியத் தலைவர்களில் எப்போதும் நினைவில் நிற்பவர் மகாத்மா காந்தி. அகிம்சை மற்றும் சத்யாகிரக வழிகளைப் பின்பற்றி, நம் நாட்டிற்குச் சுதந்திரம் பெற்றுத் தந்ததால், அவ்விரு கொள்கைகளுக்காக உலகப் பிரசித்திப் பெற்றவர். இன்றும் காந்தி மற்றும் மஹாத்மா என்ற ஒற்றைச் சொற்கள் நமக்கு விளக்கும் பாடம் அகிம்சை மட்டுமே. அன்றைய காலகட்டத்தில் இக்கொள்கைகளே ஒருவரின் வாழ்வின் இலக்குகளை அடைவதற்கான மிகவும் பயனுள்ள முறைகள் என்பதை நிரூபித்த அந்த மாபெரும் தலைவரின் ஏகப்பட்ட மேற்கோளை மஹா மட்டமாக்கி (தவறு செய்ய அனுமதிக்காத சுதந்திரம், சுதந்திரமே அல்ல’ என்ற வாசகங்களுடன்தான் படம் துவங்கி). காந்திஜியின் சத்திய சோதனையையே கேலிக்கூத்தாக்கி இருக்கிறார்/ன் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் என்பவர். இந்த தவறான சிந்தனைக்கு துணைப் போயிருக்கிறார்கள் சீயான் என்றழைக்கப்படும் விக்ரமும், அவர் மகன் துருவ் விக்ரம் என்பதுதான் காலக் கொடுமை.

படத்தின் கதை என்னவென்றால் காந்தியவாதியான ஆடுகளம் நரேன் தன் மகனுக்கு காந்தி மஹான் (விக்ரம்) என்று பெயர் வைத்து வளர்க்கிறார். அப்பாவின் கண்டிப்பான வளர்ப்பால் காந்தியக் கொள்கையுடன் வாழ்வதாக நம்பி காந்தி மஹானாப்பட்டவர் காமர்ஸ் டீச்சராகப் பணி செய்து வாழ்க்கையை தொடர்கிறார். 40 வயது வரை சிக்கலில்லாமல் வாழ்க்கை சென்றாலும் அந்த இயந்திர வாழ்க்கை அவருக்குப் பிடிக்காமல் போகிறது. கொஞ்சமும் ஒட்டுதலில்லாத சாதாரண வாழ்க்கையிலிருந்து விட்டு விலக நினைக்கிறார் . அசூழலில் அவர் மனைவியும், மகனும் ஒரு நாள் திருப்பதிச் செல்ல அடடே.. தனக்குச் சுதந்திரம் கிடைத்ததாக மகிழ்ச்சி கொண்டு தனக்குப் பிடித்ததை எல்லாம் செய்கிறார். அப்படி அந்த நாளில் தன் பழைய மாணவரையும், பழைய நண்பனையும் சந்திக்கிறார். அந்தச் சந்திப்பின் ஊடாக நடக்கும் செயல்கள் அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையையே புரட்டிப்போடுகிறது.

கட்டிய கணவன் மஹான் இப்படி மாறியதால் பெற்ற மகனை அழைத்துக்கொண்டு மனைவி வடநாட்டுக்குச் சென்றுவிடுகிறார். இதனால் தனித்து விடப்படும் காந்தி மகான் பழைய நண்பனின் உதவியுடன் வேறு ஒரு வாழ்க்கைக்குள் ஐக்கியமாகிறார். அந்த வாழ்க்கையின் தொழில் போட்டிகள், அடிதடி, வெட்டுக்குத்து ஆகியவை அவரை உச்சத்துக்குக் கொண்டு சென்று வசதிமிகுந்த மனிதராக மாற்றுகிறது. அதே சமயம் தன் மகன் அருகில் இல்லையே என்ற ஏக்கம் காந்தி மஹானுக்குள் ஏற்பட, தந்தையாகத் தன் வாழ்க்கை முழுமை பெறவில்லை என்பதை உணர்கிறார். அந்தத் தருணத்தில் ஆபத்துகளின் ஒட்டுமொத்தக் கலவையாக காந்தி மகானின் மகன் தாதாபாய் நௌரோஜி (துருவ் விக்ரம்) வந்து நிற்கிறார். முத்தாய்ப்பில் அப்பாவுடன் ஒரு பெக் அடித்து காந்தியத்தை சாகடிக்கிறார். அதாவது காந்தியவாதி குடும்பத்திலிருந்து வந்த ஒருவர் எப்படி தடம் மாறுகிறார் என்பதைக் கொஞ்சம் தடுமாறி தனது முட்டாள்தனமான பாணியில் சொல்லியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

காந்தி மஹான் கேரக்டரில் வரும் விக்ரம் நடிப்பால்தான் படத்தைப் பார்க்க முடிகிறது. நிஜக் காந்தியவாதி, பள்ளி ஆசிரியர், சாராய அதிபர், டான், அப்பா ரோல் என ஏகப்பட்ட ஸ்டைல்களைக் காட்டி வழக்கம் போல் ஸ்கோர் செய்கிறார்… துருவ் விக்ரமின் உடலமைப்பும், தொனியும் கம்பீரமாகத்தான் இருக்கிரது. ஆனால்,ஆதித்யா வர்மா-வை இதிலும் நினைவூட்டுவதுதான் மைனஸ் . பாபி சிம்ஹா கிடைத்த ரோலில் அசத்துகிறார். வேட்டை முத்துக்குமாரின் தேர்ந்த நடிப்பு அட்டகாசம். சிம்ரன் நடிப்பதற்குரிய காட்சிகள் குறைவுதான் என்றாலும் தான் தோன்றும் காட்சிகளில் அசால்ட்டாக ஸ்கோர் செய்கிறார்.

நாலு பத்து ஆண்டு கால கட்டங்களில் பயணிக்கு கதைக்கு ஏற்றவாறு உழைத்திருக்கிறது கலை வடிவமைப்பும், ஒளிப்பதிவும். குறிப்பாக ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமரா வழியே காணும் எல்லாக் காட்சிகளிலும் அசர வைக்கிறது . தினேஷ் சுப்பராயன் சண்டை காட்சிகள் அபாரம் . இசை சந்தோஷ் நாராயணன் என்று டைட்டில் கார்ட்டில் போட்டார்கள்.. ஆனால் அவரை படத்தில் காணவில்லை..

அதே சமயம் காந்தி மகானாக விக்ரம், தாதாபாய் நௌரோஜியாக துருவ், சத்யவானாக பாபி சிம்ஹா, நாச்சியாராக சிம்ரன், ராக்கியாக சனந்த் என்றெல்லாம் உத்தமர்களான பெயர்களை தவறான தொழில் புரிவோர்க்கு வைத்ததிலும் மகாத்மா காந்தி எவ்வளவோ நல்ல விஷயங்கள் சொன்னாலும் தவறு செய்ய அனுமதிக்காத சுதந்திரம் சுதந்திரமே அல்ல என்ரு காந்தி ஏதோ ஒரு சூழலில் குறிப்பிட்ட வாசகங்களைப் பிடித்துக் கொண்டு ஒரு முழு நீள சினிமா எடுத்திருக்கும் கார்த்திக் சுப்புராஜ் தனக்குக் கிடைத்த படைப்புச் சுதந்திரத்தை எல்லை மீறிய தவறுகளுடன் அனுபவித்து நமக்கும் கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் சீயான் விக்ரம் & துருவ் விக்ரம் ஆகியோரின் அபார உழைப்புக்காக மட்டுமே பார்க்க தகுந்தப் படமிது

மார்க் 2.75/5

Related Posts

error: Content is protected !!