மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் : பரவும் சர்ச்சை!

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் : பரவும் சர்ச்சை!

துரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பா.ஜ.க தேசிய தலைவர் ஜெ.பி நட்டா தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் (உறுப்பினர் எய்ம்ஸ் மதுரை) தலைமையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் பார்வையிட்டனர்.

அப்போது 95 சதவீத பணிகள் முடிந்த எய்ம்ஸ் எங்கே என்ற பதாதைகளை கைகளில் ஏந்தியபடி எய்ம்ஸ் அமைவிடத்தை பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அளித்த பேட்டியில், “சாவர்க்கர் புல்புல் பறவையில் வந்தது போல், ஒரே இரவில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95 சதவீதம் நடந்துள்ளதா என ஆய்வு செய்தோம். கட்டுமான பணிகள் துவங்காமல் 95 சதவீத பணிகள் நடைபெற்றுள்ளதாக அகில இந்திய தலைவர் பொய் சொல்வது ஏற்புடையது அல்ல; கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 1,200 கோடி என்பது 1,970 கோடியாக திட்ட மதிப்பீடு உயர்த்தப்பட்ட நிலையில், உயர்த்தப்பட்ட 700 கோடிக்காண ஒன்றிய அரசு வழங்க வேண்டிய 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்கான மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ளதால் கட்டுமான பணிகளுக்காண ஒப்பந்தம் விட முடியாத நிலை உள்ளது. உயர்த்தப்பட்ட தொகைக்கான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதலை உடனடியாக வழங்க வேண்டும். தமிழக மக்களையும் மதுரை மக்களையும் பொய் சொல்லி ஏமாற்றலாம் என பா.ஜ.க அரசு நினைக்கிறது. பொய் சொல்வதையே முழு நேர வேலையாக பா.ஜ.க செய்து வருகிறது” என தெரிவித்தார்.

மேலும் இதுதொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பா.ஜ.க ஆட்சி புல்புல் பறவைகள் மூலம் 95 சதவிகித வேலையை கட்டி முடித்த மதுரை எய்ம்ஸ் கட்டிதத்தை தேடி நானும் மாணிக்கம் தாகூர் எம்.பி-யும் போனோம். கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிலை போட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம்.” எனத் தெரிவித்துள்ளார். கூடவே இன்னொரு பதிவில் ’ பெருமையோடு திரு.ஜே.பி.நட்டா பேசியது.’ என்ற குறிப்புடன் பகிர்ந்த சேதி இதோ

இதனை தொடர்ந்து பேசிய விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மதுரை எய்ம்ஸ் அமைந்தால் அதற்கான பெருமை எய்ம்ஸ் அமைய முழு பங்களிப்பை கொடுத்துள்ள ஜப்பானையே சாரும். வடிவேல் கிணற்றை காணும் என புகார் அளித்தது போல் 95 சதவீத பணிகள் நிறைவடைந்த எய்ம்ஸ்யை காணவில்லை எனவும் ஒன்றிய அரசு தமிழக மக்களை தொடர்ந்து முட்டாளாக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது” என்றார்,

அத்துடன் தமிழக அரசு இடம் தராமல் எப்படி 95 சதவீதம் பணி முடிவடையும் எனவும் கேள்வி எழுப்பினார். தமிழக மக்கள் செய்தியாளர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அவர்களுக்கு கண்டிப்பாக ஒன்றிய அரசு பதில் சொல்லியே தீர வேண்டும் என கூறினார்.

error: Content is protected !!