எல்.வி.பிரசாத் பிலிம் அண்ட் டிவி அகாடமியின் 11வது பட்டமளிப்பு விழா!

எல்.வி.பிரசாத் பிலிம் அண்ட் டிவி அகாடமியின் 11வது பட்டமளிப்பு விழா!

இந்தியாவிலேயே சிறந்த தயாரிப்பாளர்களில், இயக்குநர்களில் ஒருவரான எல்.வி.பிரசாத் பெயரை தெரியாத ரசிகர் யாரும் இருக்க முடியாது. அவர் சினிமாவில் சேர ஆசைப்பட்டு தன்னுடைய 20-வது வயதில் மும்பைக் குச் சென்ற எல்.வி.பிரசாத், தையற்கடை உதவியாளராக, வாட்ச் மேனாக, தியேட்டரில் டிக்கெட் கிழிப்பவராக உழைத்து முன்னேறியவர். இந் தியாவின் முதல் பேசும் படமான ‘அலெம் அரா’-வில் நடித்தார். அதன் பிறகு இயக்குநராக பல வெற்றிப் படங்களை இயக்கினார். தயாரிப்பாளர் ஆனார். சென்னையில் பிரசாத் ஸ்டுடியோ வைத் தொடங்கினார். அது பிரபலமாக வளர்ந்தது. நான்கு மாநிலங்களில் கலர் லேபரெட்டரி ஆரம்பித்த பெருமை அவருக்கு உண்டு.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள் இயக்கி, உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வெற்றி பெற்ற ‘ஏக் துஜே கேலியே’ ஹிந்தி படத்தை தயாரித்தார். அப்படத்தின் வெற்றி விழா மும்பை மராத்தா மந்தீர் தியேட்டரில் நடந்தபோது, பிரசாத் அவர்கள் திடீரென்று அழ ஆரம்பித்துவிட்டார். அதைப் பார்த்த எல்லோரும் பதறி விட்டார்கள். அப்போது பிரசாத் சொன்னார்: ‘‘இந்த தியேட்டரில் தான் ஒரு காலத்தில் நான் வாட்ச்மேனாகவும், டிக்கெட் கிழித்துக் கொடுப்பவனாகவும் வேலை செய்தேன். அதே தியேட்டருக்கு ஒரு வெற்றிப் படத் தயாரிப்பாளராக வந்தபோது பழைய நினைவுகளெல்லாம் வந்து என்னை நெகிழ வைத்துவிட்டது’’ என்று கூறிய போது அரங்கமே எழுந்து நின்று கையொலி எழுப்பி கெளரவித்தது.

அப்பேர்பட்டவர் பெயரில் இயங்கும் சென்னை எல்.வி.பிரசாத் பிலிம் அண்ட் ‘டிவி’ அகாடமியின் 11வது பட்டமளிப்பு விழா நேற்று விமரிசையாக நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல இயக்குநர் ஹன்ஸ்லால் மேத்தா கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களும், வெற்றி கோப்பைகளும் வழங்கி கவுரவித்தார். கடந்த ஆண்டு பயின்ற மாணவர்களின் படைப்புகளை நடிகை ரோகினி, சினிமாட்டோகிராபர் வைட் ஆங்கிள் ரவி, ஓவியர் ட்ராட்ஸ்கி மருது உள்ளிட்டோர் ஜூரிகளாக இருந்து சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுத்து கொடுத்தனர்.

இந்நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய சிவராமன், “எல்.வி. பிரசாத் அவர்களால் தான் நாம் இங்கு கூடியிருக்கிறோம். அவர் ஒரு சிறந்த கதை சொல்லி. அவரின் படங்கள் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய வகையில் அமைந்திருக்கும். 100 ரூபாயை எடுத்துக் கொண்டு மொழி தெரியாமல், வெறும் சினிமா ஆர்வத்தோடு மும்பைக்கு பயணமானார். இன்று அவர் பெயரில் பிரசாத் அகடமி உட்பட பல மில்லியன் சதுரடியில் கட்டிடங்கள் இருக்கின்றன.” என்று பேசினார்.

ரவி குப்தன் பேசும் போது, “இந்த ஆண்டு எங்கள் மாணவர்களிடம் உங்களுக்கு பிடித்த இயக்குனர் யார் என கேட்டபோது, அவர்களில் பெரும்பாலானோர் சொன்னர் பெயர் ஹன்சல் மேத்தா. அவர் இங்கு வந்து சிறப்பித்தது எங்களுக்கு பெருமையான விஷயம். 2007ல் முதல் பட்டமளிப்பு விழா நடந்தது. இதுவரை 219 பேர் பிரசாத் அகடமியில் பட்டம் பெற்று சினிமாவில் பணியாற்றி வருகிறார்கள். இந்தியாவில் ஒரு அகடமியில் இருந்து இவ்வளவு பேர் பட்டம் பெற்றிருப்பது எங்களுக்கு கிடைத்த பெருமை. எங்கள் அகடமி மாணவர்கள் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்றிருக்கிறார்கள். சினிமா துறையில் எங்களின் மாணவர்கள் பலர் இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர்களாக ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்திருக்கிறார்கள்.” என்றார்.

நடிகை ரோஹினி பேசும் போது, “ஒரு ஜூரியாக சிறந்த பல திறமையாளர்களை என்னால் காண முடிந்தது. சமூக பிரச்சினைகளை படங்களில் உங்களால் சொல்ல முடியும். நடிகர்கள் மற்றும் குழந்தைகளை கையண்ட விதமும் சிறப்பாக இருந்தது. கற்றுக் கொள்வதற்கு முடிவே கிடையாது. சினிமாவில் இருப்பது என்பது பெருமையான விஷயம்’” என்றார்.

இறுதியாக  சிறந்த இயக்குநர், போட்டோகிராபர் போன்றோருக்கு தங்கம், வெள்ளி, வெங்கலக் கோப்பை பரிசுகளை வழங்கிய இயக்குநர் ஹன்ஸ்லால் மேத்தா பேசும் போது, “கற்று கொண்டே இருப்பது தான் கலை. இக்கலைக்கு எல்லை என்பதே கிடையாது என்பதால் நம் ரசனைக்கும், பயணத்திற்கும் முடிவே கிடையாது என்பதுதான் உண்மை” என்று குறிப்பிட்டவர்  மேலும்  “ஒரு விருது வாங்க எனக்கு 15 வருடங்கள் ஆகியது. நீங்கள் இப்போதே வாங்கியிருக்கிறீர்கள். அந்த ஸ்பிரிட்டை தக்க வைத்துக் கொள்ளுங்கள். நான் ஒரு எஞ்சினியர், இயக்குனரானது ஒரு விபத்து. ஷாகித் படத்துக்கு முன்பு 9 படங்கள் இயக்கியிருந்தாலும் ஷாகித் என் இரண்டாவது இன்னிங்க்ஸ். ஷாகித் என்னுடைய டிப்ளமோ திரைப்படம் போன்றது. ஷாகித் படத்தை நான் 35 லட்சத்தில், 11 மாதத்தில் எடுத்து முடித்தேன். டிஜிட்டல் யுகத்தில் கெனான் 5டி கேமராவில் தான் பெரும்பகுதி படத்தை படம் பிடித்தேன். சினிமாவில் கதை சொல்வது தான் முக்கியம். என்னுடைய கதை எப்படி பலரை போய் சென்றடையும் என்பதை தான் யோசிப்பேன். நேதாஜி பற்றி வெப் சீரீஸ் இயக்கி வருகிறேன். வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைக்காக நான் படம் எடுப்பதில்லை. எதிர்காலத்துக்காக படம் எடுக்கிறேன். டிஜிட்டல் பிளாட்ஃபாரத்தால் நாம் நினைத்த கதையை எந்த இடையூறும் இன்றி சொல்ல முடியும். முதலில் உங்கள் படத்துக்கு நல்ல ரேட்டிங் வாங்க முயலுங்கள், நூறு கோடி வசூலை பின்பு பார்த்துக் கொள்ளலாம். சினிமா என்பது முற்றிலும் ஒரு கலை. அதில் நாமும் ஒரு பங்காக இருப்பது பெருமை” என்று கூறியவர், பிரசாத் அகடமி மாணவர்களின் சினிமா தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

 

 

Related Posts

error: Content is protected !!