மொழிப்போர் தியாகிகள் தினம்: தமிழ் காத்த ரத்த சாட்சியங்கள்
“உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு” என்று முழங்கி, தாய்மொழிக்காகத் தன்னுயிரைத் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் இன்று (ஜனவரி 25). தமிழக வரலாற்றில் 1937-ல் தொடங்கி 1965-ல் உச்சமடைந்த இந்த அறப்போர், உலகின் வேறெந்த மொழிக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பான போராட்ட வரலாற்றைக் கொண்டது.
போராட்டத்தின் தொடக்கப்புள்ளி (1937 – 1940)
தமிழகத்தில் முதன்முதலாக 1937-ல் ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை அமைக்கப்பட்டபோது, உயர்நிலைப் பள்ளிகளில் ஹிந்தி கட்டாயப் பாடமாக்கப்பட்டது. “குழந்தைக்குத் தாய் கட்டாயப்படுத்திதான் பாலூட்ட வேண்டும்” என்றும், “ஹிந்தி ரயில் வண்டி போன்றது; அதில் பயணம் செய்தால் வேகமாக முன்னேறலாம்” என்றும் ராஜாஜி இதற்கு விளக்கம் அளித்தார்.

இதனை எதிர்த்து தந்தை பெரியார், நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கத்தின் மூலம் போராட்டத்தைத் தொடங்கினார். பெண்களும் குழந்தைகளுடன் பெருமளவில் சிறை சென்றனர். இப்போராட்டத்தின் முதல் பலிகளாக 1939-ல் சிறைக்கொடுமை தாங்காமல் நடராசன் மற்றும் தாளமுத்து ஆகிய இரு இளைஞர்கள் உயிர் நீத்தனர்.
சுதந்திரத்திற்குப் பிந்தைய மறைமுகத் திணிப்பு
1947-க்குப் பிறகு வந்த மத்திய அரசுகள், ஹிந்தியை தேசிய மொழியாக்கத் தீவிர முயற்சி எடுத்தன. ஓமந்தூரார் ஆட்சிக் காலத்தில், ஹிந்திக்கு மட்டும் அதிக ஆசிரியர்களை நியமித்து மறைமுகத் திணிப்பு ஆரம்பமானது. அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, முன்ஷி-அய்யங்கார் திட்டப்படி ஆங்கிலமும் ஹிந்தியும் 15 ஆண்டுகளுக்கு அதிகாரப்பூர்வ மொழிகளாகத் தொடரும் என முடிவானது.
1965: எரிமலையாய் வெடித்த மாணவர் போராட்டம்
நேரு 1959-ல் “ஹிந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் தொடரும்” என உறுதி அளித்தார். ஆனால், அவர் மறைவிற்குப் பின் லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானதும், 15 ஆண்டு காலக்கெடு முடிந்துவிட்டதாகக் கூறி 1965 ஜனவரி 26 முதல் ஹிந்தியே ஆட்சி மொழி என அறிவிக்கப்பட்டது.

ஜனவரி 25-ல் தமிழகம் கொதித்து எழுந்தது. ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். 70-க்கும் மேற்பட்டோர் தங்களைத் தாங்களே மாய்த்துக்கொண்டனர். காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, அப்போதைய குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்களின் தலையீட்டால் ஹிந்தித் திணிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தொடரும் மொழி உரிமைப் போர்
-
1986: நவோதயா பள்ளிகள் ஹிந்தித் திணிப்பின் ஒரு வடிவம் எனக் கலைஞர் கருணாநிதி எதிர்த்ததால், இந்தியாவிலேயே நவோதயா பள்ளிகள் இல்லாத ஒரே மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது.
-
சமீபத்திய சவால்கள்: மத்திய அரசு அதிகாரிகளின் கையெழுத்து, என்.சி.இ.ஆர்.டி (NCERT) பாடப்புத்தகச் சித்தரிப்புகள் எனப் பல்வேறு ரூபங்களில் இன்றும் ஹிந்தித் திணிப்பு தொடர்வதையும், அதற்கான எதிர்ப்புகள் வலுப்பதையும் நாம் காண்கிறோம்.
மொழிப்போர் என்பது வெறும் மொழி சார்ந்தது மட்டுமல்ல; அது தமிழர்களின் அடையாளம் மற்றும் வாழ்வுரிமை சார்ந்தது. தாளமுத்து, நடராசன் தொடங்கி 1965-ல் தீக்குளித்த கீழப்பழுவூர் சின்னச்சாமி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தியாகிகளின் அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்து, தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதே நாம் அவர்களுக்குச் செய்யும் உண்மையான வீரவணக்கம் ஆகும்.
நிலவளம் ரெங்கராஜன்


